Published:Updated:

உயிரைப் பணயம் வைக்கும் திகில் பயணம்!

தீவுக் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
தீவுக் கிராமம்

தீவுக் கிராமம்... தீர்வே இல்லையா?

உயிரைப் பணயம் வைக்கும் திகில் பயணம்!

தீவுக் கிராமம்... தீர்வே இல்லையா?

Published:Updated:
தீவுக் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
தீவுக் கிராமம்
மழை ஓய்ந்திருந்த மாலைப் பொழுதில், அந்தக் காட்சியைப் பார்த்துப் பதறிப்போனோம். சுரங்கப்பாலத்தைத் தொட்டபடியே மேலேறுகிறது குறுகலான சுவர் ஒன்று. ஒருபக்கம், கீழே சுரங்கப்பாலத்தில் ஆளுயரத்துக்கும் அதிகமாகத் தண்ணீர் தளும்புகிறது. மறுபக்கம், சிறு குன்றின் ஊடாக கரடுமுரடான பாதை. ஒற்றை ஆள் மட்டுமே நடக்கும் வகையிலான குறுகலான அந்தச் சுரங்கப்பாலத்தின் சுவரின்மீது பிள்ளைகுட்டிகளைத் தூக்கிக்கொண்டும், சந்தைப் பொதிகளை சுமந்துகொண்டும் ஆட்கள் மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான் திருமணமாகி, மாலையும் கழுத்துமாக ஓர் இளம்பெண்ணும் அந்த சாகசப் பயணம் மேற்கொண்டிருந்ததுதான் அதிர்ச்சி. கரணம் தப்பினால் மரணம். அவர்களுக்கு வேறு வழியில்லை... இப்படி உயிரைப் பணயம்வைத்து சாகசப் பயணம் மேற்கொண்டால்தான் அவர்களால் வீடு சேர முடியும்! தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சிக்கு அருகிலுள்ள செங்கானூர் கிராமத்தில்தான் இந்த அவலம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘எங்க ஊர் வழியாப் போன ரயில்வே தண்டவாளத்துல ஆளில்லாத லெவல் கிராஸிங்கை எடுத்துட்டு, அங்கே சுரங்கப்பாலம் அமைச்சுத் தர்றதா சொன்னப்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, மழை பெய்யுறப்பல்லாம் அதுல தண்ணி நிரம்பி ஊருக்குள்ள போக முடியலை. மாற்றுப்பாதையும் இல்லைங்கறதால தனித்தீவா தவிச்சுப்போயிருக்கோம். அதிகாரிகள்கிட்ட முறையிட்டும் எந்தப் பலனுமில்லை. நீங்களாவது ஏதாவது உதவி செய்யுங்க’’ என்று நம்மைத் தொடர்புகொண்டு குமுறினார் செங்கானூர் கிராம நாட்டாமை பொதிகாசலம். இதையடுத்து அங்கு சென்று நாம் பார்த்த காட்சியைத்தான் முதல் பாராவில் விவரித்திருக்கிறோம்.

உயிரைப் பணயம் வைக்கும் திகில் பயணம்!

பாலத்தை விடுங்கள்... முதலில் அந்தக் கிராமத்துக்குச் செல்லும் சாலையே சீரழிந்துகிடந்தது. ஆழ்வார்குறிச்சியிலிருந்து செங்கானூர் சாலையில் திரும்பியதும், குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலையில் பைக்கில் பயணிப்பதற்குள் நாலைந்து இடங்களில் விழுந்து எழ வேண்டியிருந்தது. கடைசியில் இடுப்பு வலியே வந்துவிட்டது. பாவம் அந்த மக்கள்... கடனா அணையின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருக்கும் ஊருக்கு அருகே சென்றதும், செங்கோட்டை - திருநெல்வேலி ரயில்வே தண்டவாளம் குறுக்கிட்டது. அதற்கு மேல் ஊருக்குள் செல்ல வழியில்லை. அதுதான் தண்ணீர் தளும்பி நிற்கிறதே!

உயிரைப் பணயம் வைக்கும் திகில் பயணம்!

நாம் தவித்து நின்றதைப் பார்த்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்தப்பா என்ற விவசாயி, நம்மை அழைத்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவரின்மீது நடக்கச் சொன்னார். அந்தச் சுவரின் மீதேறி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். சுவரின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க பயம் வயிற்றைக் கவ்வியது. கீழே பார்த்தபோது தலை கிறுகிறுத்துப் போனது. ஒருவழியாகச் சமாளித்து, மேற்பகுதிக்குச் சென்று, தண்ட வாளத்தைக் கடந்து, மறுபக்கத்திலும் அதேபோல பாலத்தின் சுவர்மீது நடந்து, இறங்கி சாலைக்கு வந்து சேர்ந்தோம். உயிரே திரும்ப வந்ததுபோலிருந்தது.

உயிரைப் பணயம் வைக்கும் திகில் பயணம்!

நம்முடன் நடந்து வந்த முத்தப்பா, ‘‘இது எங்களுக்குப் பழகிப் போயிருச்சுங்க. சின்ன மழை பெஞ்சாக்கூட இந்தப் பாலத்துல தண்ணி நிறைஞ்சுருது. பாலத்துல சேரக்கூடிய மழைத் தண்ணியை வடிய வெக்கிறதுக்காக, பக்கத்துலேயே பூமிக்குள்ள ஆழமா பெரிய தொட்டி கட்டியிருக்காங்கதான். ஆனாலும், மலையடிவாரத்துல எங்க ஊர் இருக்கறதால அடிக்கடி மழை பெய்யும். அதனால, பாலம் ரொம்பியே கிடக்கும். பக்கத்துல போட்டிருக்கும் ஆழமான தொட்டியில நிலத்தடி தண்ணி ஊத்தெடுத்து, அதிலருந்தும் தண்ணி சேர்றதால, மழை நின்னாலும் தண்ணி குறையுறதே இல்ல.

நெல்லை மாவட்டத்துல இருந்த எங்களை தென்காசியோட சேர்த்துட்டதால, அந்த மாவட்ட கலெக்டர்ல இருந்து எல்லா அதிகாரிகளையும் பார்த்துட்டோம். எந்த விடிவும் பொறக்கலை. போன வருஷம் இதே மாதிரி பிரச்னையானதும் நெல்லை மாவட்ட கலெக்டரம்மாகிட்ட மனு கொடுத்தோம். அவங்க வந்து பார்த்துட்டு, நாலு ஆயில் இன்ஜின்வெச்சு தண்ணியை வெளியே எடுத்தாங்க. ஆனாலும், ஊத்து அதிகமா வந்ததால தண்ணியை முழுக்க வெளியேத்த முடியலை. அதனால அவங்ககிட்ட மாற்றுப் பாதை கேட்டோம்.

முத்தப்பா - முருகன் - பொதிகாசலம்
முத்தப்பா - முருகன் - பொதிகாசலம்

ரயில்வே அதிகாரிகள்கிட்ட பேசி பக்கத்துலேயே தண்டவாளத்தைக் கடக்க வழி செஞ்சு கொடுக்கறதாச் சொன்னாங்க. அதனால, பக்கத்துல இருக்குற ஒரு இடத்துல பாதை அமைச்சுப் பயன்படுத் தினோம். அங்கே வந்த ரயில்வே அதிகாரிங்க, நாங்க பயன்படுத்தின பாதையை மறிச்சு மண்ணையும் முள்ளையும் வெட்டிப் போட்டுட்டாங்க. மாற்றுப் பாதையையும் மறிச்சுட்டதால, பாலத்து சுவர்ல ஏறித்தான் போக வேண்டியிருக்கு. இல்லைன்னா சுவத்துக்கு அந்தப் பக்கம் தாவிக் குதிச்சு குன்று மேல ஏறிப் போகணும். மொத்தத்துல எங்க ஊர் தனித்தீவா மாறிப்போச்சு’’ என்று வருத்தப்பட்டார்.

அதே ஊரைச் சேர்ந்த முருகன் நம்மிடம், ‘‘சுரங்கப்பாலத்தைக் கடக்குறப்ப குழந்தைகளுக்கு ஆபத்தாகிடுமோனு திக்திக்குனு இருக்கு. ராத்திரியில இந்த வழியா வரவே முடியாது. அதனால, ஆபத்து அவசரத்துக்குக்கூட ராத்திரியில ஊரைத் தாண்ட முடியாது” என்று கவலைப்பட்டார்.

மாரியம்மாள் என்பவர், “எங்க ஊருல இருக்குற பெண்கள் பீடிசுத்தவும், மில் வேலைக்கும் போறவங்க. பஸ் போக்குவரத்து இல்லாததால ஆழ்வார்குறிச்சி வரைக்கும் 4 கிலோ மீட்டர் நடந்தே போறாங்க... வர்றாங்க. சுரங்கப்பாலம் பிரச்னையால இங்குள்ள பொண்ணுங்களைக் கல்யாணம் கட்டிக்க மத்த ஊர்க்காரங்க தயங்குறாங்க. நிச்சயம் செய்யப்பட்ட ரெண்டு கல்யாணம்கூட நின்னுபோயிருக்கு. இங்கே ஆரம்ப சுகாதார நிலையம்கூட கிடையாது. ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸும் வர முடியாது. அதனால, கர்ப்பிணிப் பெண்களை பிரவசத்துக்கு முன்னாடியே அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவெச்சிடு வோம்” என்றார் வேதனையுடன்.

அருண் சுந்தர் தயாளன்
அருண் சுந்தர் தயாளன்

300 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால், ‘2021 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். அரசியல் கட்சியினர் யாரும் எங்கள் ஊருக்குள் வர வேண்டாம்’ என பேனர் வைத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.

செங்கானூர் கிராம நாட்டாமையான பொதிகாசலத் திடம் பேசினோம். ‘‘எங்க ஊர்ல ஆரம்பப் பள்ளி மட்டுமே இருக்கு. அதை நடுநிலைப்பள்ளியா மாத்தச் சொல்லி பல வருஷமா கேட்டும் நடக்கலை. அங்கன்வாடிக்குக் கட்டப்பட்ட கட்டடம் ரெண்டு வருஷமா பயன்படுத்தப்படாம மூடியே கிடக்கு. எங்க ஊருக்கு ரோடு போட்டு 13 வருஷமாகிருச்சு. சுரங்கப்பாலம் பிரச்னையும் பாடாப்படுத்துது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் எந்த உதவியும் பண்ணலை. அதனாலதான் வர்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செஞ்சிருக்கோம்’’ என்றார் காட்டமாக.

ரயில்வே அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ‘‘நிலத்தடி நீர்மட்டம் அதிகம் இருக்கும் இந்த இடத்தில் சுரங்கப்பாலம் அமைத்ததில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. மக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதை மாற்றி அமைப்பது பற்றிப் பேசிவருகிறோம்’’ என்றார்கள்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் கேட்டோம். ‘‘செங்கானூர் மக்களின் சிரமங்கள் குறித்து தென்னக ரயில்வே மண்டல பொதுமேலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். அந்தக் கிராமத்தின் மற்ற அடிப்படைத் தேவைகளையும் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

குளிரூட்டப்பட்ட ஏசி ரயில்கள் அன்றாடம் அந்தக் கிராமத்தைச் கடந்து செல்கின்றன. அவற்றில் பயணிப்பவர்கள் இந்தத் துயரத்தை அறிய வாய்ப்பில்லை. ஆனால், ஆட்சியாளர்கள் இதை வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்கேடு!