Published:Updated:

ரத்தம் தோய்ந்த தங்கநகைக் கொள்ளை... ஆயிரம் தலை எடுத்த அபூர்வ தக்கி!

தங்க வேட்டை
தங்க வேட்டை

கொள்ளையடிச்சு பெருசா சம்பாதிக்கணும்னு, செட்டில் ஆகணும்னெல்லாம் எண்ணமில்ல. ஆனா, இவங்களால கொள்ளை யடிக்காம இருக்கவும் முடியாது. அதுவும் ரத்தம் சொட்டச் சொட்ட கொள்ளையடிக்கணும்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. வடக்கு மாவட்டம் ஒன்று அது. புறநகரில் இரவு ரோந்துப்பணியை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தது ஒரு காவல் குழு. அதிகாலை 5 மணி இருக்கும். தேநீர்க் கடை ஒன்றில் ஜீப்பை நிறுத்தி, "அஞ்சு டீ" என்று ஆர்டர் செய்தார்கள். தேநீர்க் கடை மரப்பெஞ்சில் இளைஞன் ஒருவன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். அருகில் மரப்பெஞ்சில் துணிப்பை ஒன்று இருந்தது. காவலர்கள் வண்டியைவிட்டு இறங்கியதும் அவன் அவசரமாக டீயைக் குடித்துவிட்டு, மொபட்டை உதைத்துக் கிளம்பினான். காவலர்கள் மரப்பெஞ்சில் அமர்ந்தார்கள். ஒருவர் கையை பெஞ்சில் வைத்ததும் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. டார்ச் அடித்துப் பார்த்தால் ரத்தம். உறையாத... லேசான சூடு தணியாத ரத்தம்! பெஞ்சில் நீளமாக ஒழுகி தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.

கவனித்த தேநீர் கடைக்காரர் ''அந்தாளு பை வெச்ச இடமாச்சே... கறிகிறி ஏதாச்சும் வாங்கிட்டுப் போவானா இருக்கும். ஆனா, இன்னைக்கு விசாலக்கிழமை. பாய், கடை போட மாட்டாரே..." என்று இழுக்க, அதற்குள் இளம் காவலர்கள் ஜீப்பை எடுத்துக்கொண்டு மொபட் சென்ற திசையில் பறக்கத் தொடங்கினர். சிறிது தூரத்தில் புதர் ஓரம் மொபட் மறைவாகச் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. சிறிது தூரம் சென்றால் மலையடிவாரம். தூரத்தில் புள்ளியாகத் தெரிந்தது நெருப்புப் பொட்டு. பீடி வாசனை. சத்தமில்லாமல் முன்னேறிச் சென்றார்கள் காவலர்கள். காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தவனைக் கொத்தாக அமுக்கினார்கள். பொழுது பளபளவென விடியத் தொடங்கியது. அவன் வைத்திருந்த துணிப்பையைத் திறந்து பார்த் தார்கள். பேரதிர்ச்சி! ஏழெட்டுக் காதுகள் ரத்தம் சொட்டச் சொட்ட அறுந்துகிடந்தன. அத்தனையிலும் மின்னின தங்கத் தொங்கட்டான்கள். ஒவ்வொன்றுமே நான்கைந்து பவுன் தேறும்!

ரத்தம் தோய்ந்த தங்கநகைக் கொள்ளை... ஆயிரம் தலை எடுத்த அபூர்வ தக்கி!

செய்தித்தாள்களில் எதிலும் இந்தச் செய்திகள் வரவில்லை. ஆனால், சில நாள் கழித்து வந்தது ஒரு செய்தி. 'மூதாட்டி களையும் பெண்களையும் பாலியல் வன்முறை செய்த சைக்கோ இளைஞர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்!' என்றது அந்தச் செய்தி. பிரபல ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்தான் அன்றைக்கு இந்த வழக்கை கையாண்டார்.

''அவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் இல்லை. கொள்ளையடிச்ச நகைகளை மண்ணுல புதைச்சு வெச்சதா அவன் சொன்ன சில இடங்களைத் தோண்டினோம். நாலைஞ்சு பைங்க கிடைச்சது. ஒரு பையில குழந்தைகளோட விரல் மோதிரங்கள் இருந்துச்சு. இன்னொரு பையில, இதேபோல காதுங்க. இன்னொரு பையில பிஞ்சுக்குழந்தையின் பாத எலும்பு. அதுல தங்கக்காப்பு இருந்துச்சு. பதறிப்போய், 'படுபாதகா... ஏன்டா இப்படிப் பண்ண... நகையை மட்டும் கொள்ளை அடிச்சிருக்கலாமில்ல'னு கேட்டோம். 'அது எங்களுக்குப் பழக்கமில்லைங்க. அறுத்துதான் பழக்கம்'னவன் நைலான் கயித்த காட்டினான். அது கண்ணுக்கே தெரியாத அளவுக்கு சன்னமா இருந்துச்சு. அதை ரெண்டு விரல்லைச் சுருட்டி லாகவமா காதை அறுத்திருக்கான். நாங்க டெமோ காட்டச் சொன்னபோது, மனுஷ பொம்மை உருவத்துல இருந்த காதை அறுத்த வேகத்தையும் லாகவத்தையும் பார்த்து மிரண்டுபோனோம். கொஞ்சம்கூட பிசுறு இல்லை. தேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள்கூட அப்படி ஷார்ப்பா அறுப்பாங்களான்னா சந்தேகம்தான்.

காது அறுபட்டவங்களுக்கு, காது அறுந்துடுச்சுங்கிற வலிகூட உடனே தெரியாது. லேசா சுருக்குன்னு இருக்கும். அதுவும் தூக்கத்துல இருக்கிறவங்க காதைத்தான் இவன் அறுத்திருக்கான். கொஞ்சநேரம் கழிச்சுதான் காது அறுபட்டவங் களுக்கு வலி அதிகமாகி காதே காணோம்கிற விஷயமே தெரியவரும். அதுக்குள்ள இவன் மாயமா மறைஞ்சிருப்பான்" என்றவர் அடுத்த சொன்ன தகவல் அதிர்ச்சியின் உச்சம்.

ரத்தம் தோய்ந்த தங்கநகைக் கொள்ளை... ஆயிரம் தலை எடுத்த அபூர்வ தக்கி!

"இவங்களுக்கு கொள்ளையடிச்சு பெருசா சம்பாதிக்கணும்னு, செட்டில் ஆகணும்னெல்லாம் எண்ணமில்ல. ஆனா, இவங்களால கொள்ளை யடிக்காம இருக்கவும் முடியாது. அதுவும் ரத்தம் சொட்டச் சொட்ட கொள்ளையடிக்கணும். அவங்களோட பிறப்பின் அர்த்தம், லட்சியம்... அவங்க குலதெய்வத்தின் தாகம் தீர்க்க ரத்தத்தை தினமும் கொடுக்கணும்கிற நம்பிக்கையில இதைச் செய்றாங்க. அந்த இளைஞன் நாடோடியைப்போல ராஜஸ்தானில் கிளம்பி குஜராத், மத்தியப் பிரதேசம்னு நர்மதா பள்ளத்தாக்கைத் தாண்டி கொள்ளையடிச்சுக்கிட்டே பயணிச்சிருக்கான். ராமேஸ்வரம் போறது அவன் திட்டம். அவன் பூர்வீகத்தைத் தோண்டியதுல ஒரு விஷயம் புலப்பட்டுச்சு. அவன் ஒரு தக்கி! 18-ம் நூற்றாண்டுல ஆதிக்கம் செலுத்திய 'தக்கி'களின் எஞ்சிய வாரிசுங்க இன்னும் சிலர் இருக்காங்க. ரொம்பவும் அதிர்ச்சியா இருந்தது. தக்கிகளைத் திருத்த முடியாது. அவங்களோட சித்தாந்தமே, கொள்ளை வழியே அவங்க குலதெய்வத்தின் ரத்த தாகத்தைத் தணிக்கிறதுதான். சிறையில அடைச்சாலும் அங்கயும் ரத்தத்தைப் பார்க்காம விட மாட்டாங்க. தவிர, தங்கத்தை மட்டுமே பிரதானமா குறிவெச்சு கொள்ளையடிப்பாங்க. கடைசியில அவன் என்கவுன்ட்டர்ல செத்துப்போனான்" என்றார்.

ஃப்ரிங்கா... இந்தியாவில் கொள்ளையர்கள் தொடர்பான வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் தவிர்க்க இயலாத பெயர் இது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில் வட இந்தியாவில் கோலோச்சிய பிரபல தக்கி, இவன். ஃப்ரிங்கா, ஒரு ராஜபுத்திர இளைஞன். ராஜஸ்தானின் மியோ பகுதியின் கோட்டை அதிபதிகளான மேவாட்டி இன அரசர்களின் அரண்மனைப் பூசாரிகளாக இருந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன். டெல்லிக்கு ஒருமுறை சென்றபோது தக்கிகளுடன் தொடர்பு ஏற்பட்டு தானும் தக்கியாக மாறியதாக, பிற்பாடு ஒரு வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான் ஃப்ரிங்கா.

இவன் தலைமையில் பர்கானா, முர்னே, ஒமுரு, சிந்தோஷ், சுர்ஷி ஆகியோர் அடங்கிய தக்கிக் கூட்டம், ராஜஸ்தானில் 1800-களின் தொடக்க ஆண்டுகளில் உருவானது. ஏழாவது தலைமுறைத் தக்கிகள் இவர்கள். காலப்போக்கில் ஃப்ரிங்கா தக்கி குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகினர். அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து, பல குழுக்களாக வலுவடைந்தனர். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் ராஜஸ்தானில் சுமார் 500 தக்கி குடும்பங்கள் உருவாகின. சுமார் 32 கிராமங்களைச் சேர்ந்த இவர்களே, நாடு முழுவதும் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களின் பிரதான குறி, தங்கநகைகள்தான். இதற்காக அன்றைய மராட்டிய மன்னனான சிந்தியாவுக்கு இந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தலா (24 ரூபாய்) 8 அணா வரி செலுத்தின. இதற்கு உபகாரமாக, சிற்றரசர்களுக்குக்கீழ் இருக்கும் ஜமீன்தார்கள் இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களைத் தேடி வரும்போதெல்லாம், தகவல் கொடுத்து தப்பிக்கவைத்தனர். தலைமறைவு வாழ்க்கைக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.

இப்படியான தக்கிகளிடையே கதாநாயக பிம்பத்துடன் வலம்வந்தவன்தான் ஃப்ரிங்கா. பெரும்வியாபாரிகள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் நடைபயணமாகப் பயணிக்கும்போது, அவர்களின் மெய்காப்பாளர்களாகவோ சகபயணிகளாகவோ ஊடுருவி கொலைகளைச் செய்து, கொள்ளையடிப்பது இவனது வழக்கம். இதற்கு துப்புக்கொடுக்க தனிக்குழு உண்டு. துப்புக்குத்தக்க கூலியும் உண்டு. வழிப்போக்கர்களின் பயண வழித்தடத்தை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்தக் கூட்டத்தில் யார் யாரை எங்கெங்கு கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டுவிடுவார்கள். கானகத்தில் புதர்களுக்கு இடையே ஆங்காங்கே ஆட்களைப் புதைப்பதற்காகக் குழிகளைத் தோண்டித் தயாராக வைத்திருப்பார்கள்.

ரத்தம் தோய்ந்த தங்கநகைக் கொள்ளை... ஆயிரம் தலை எடுத்த அபூர்வ தக்கி!

பிறகு, தக்க நேரம் வரும்போது சத்தமில்லாமல் ஒருவரின் பின்பக்கமாகச் சென்று கழுத்தில் சிறு துணியோ அல்லது கயிற்றையோ வீசி இறுக்கிக் கொன்றுவிடுவார்கள். பெரும்கூட்டம் ஒன்று நகர்ந்துகொண்டிருக்கும்போது, ஓரிரு நொடிகளில் ஓர் ஆளை அக்கம்பக்கம் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் முடிக்க வேண்டும். இதுதான் ஒரு தக்கியின் வாழ்நாள் லட்சியமும்கூட. அந்தத் திறமையுடன் ஏழெட்டு கொலைகளைச் செய்துவிட்டால், அவனே அந்தத் தக்கி குழுவின் தலைவன்.

இப்படி எதிராளியின் கழுத்தைச் சுற்றி கயிற்றை இறுக்கும்போது, குரல்வளை நொடியில் உடைந்து சிறு முக்கல், முனகல்கூட எழுப்ப இயலாமல் தலை உடனடியாகத் தொங்கிவிடும். பிறகு, கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இழுத்துச் சென்று ஏற்கெனவே தயாராக வெட்டி வைத்துள்ள குழிகளில் புதைத்துவிடுவார்கள். துப்புக் கொடுக்க, குழி தோண்ட, புதைக்க என ஒவ்வொன்றுக்குமே தனித்தனிக் குழுக்கள் இருந்தன. இப்படி கொள்ளையின் பொருட்டு ஃப்ரிங்கா கொலை செய்த ஆட்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்துக்கும் அதிகம்.

- வட மாநில கொள்ளையர்களின் பின்னணியை விவரிக்கும் ஜூனியர் விகடன் இதழின் 'தங்க வேட்டை' தொடரில் இருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதிதான் இது. பல்வேறு உண்மைச் சம்பவங்களையும் அதன் உள்விவகாரங்களையும் தோலுரிக்கும் இந்தத் தொடரின் முதல் இரண்டு பகுதிகள்:

> தங்க வேட்டை - புதிய மினி தொடர் - 1 https://www.vikatan.com/news/crime/thanga-vettai-mini-series-about-north-states-robbers

> தங்க வேட்டை - மினி தொடர் - 2 https://www.vikatan.com/news/crime/thanga-vettai-mini-series-about-north-states-robbers-2

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு