அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“நாங்கள் என்ன ரோபோக்களா?’ - காற்றில் பறந்த சட்டம்... பரிதவிக்கும் பணியாளர்கள்!

ஜவுளிக்கடை
பிரீமியம் ஸ்டோரி
News
ஜவுளிக்கடை

சமீபத்தில் சென்னை தி.நகரில் 94 வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தியிருக் கிறோம். அதில் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத 63 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமாகவும், ஜவுளிக்கடைப் பணியாளர்களுக்குத் திண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது தீபாவளி பர்ச்சேஸ். துணிக்கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இருக்கை வசதி அளிப்பதற்காக, கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்-1947-ல் தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், வழக்கு தொடரவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் துணிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இந்தச் சட்டம் பின்பற்றப்படுகிறதா என்று களத்தில் இறங்கி விசாரித்தோம்...

தி.நகரிலுள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “வழக்கமான நாள்களிலேயே எங்களை உட்காரவிட மாட்டாங்க... இப்போ தீபாவளி வேற. இந்தப் பண்டிகையெல்லாம் ஏன் வருதுன்னு இருக்கு. காலையில 10 மணிக்கு வந்தா, வேலை முடிய நைட் 11 ஆகிடும். ரெண்டு வேளை டீக்கும், சாப்பாட்டுக்கும், டாய்லெட்டுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் கம்மியாத்தான் ரெஸ்ட் கிடைக்கும். ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல நின்னுக்கிட்டே இருக்கோம். நாங்க என்ன ரோபோக்களா... தொடர்ந்து நிக்கிறதால அப்படியே காலெல்லாம் எரியுது. ஹாஸ்டலுக்குப் போனதும் ஒருத்தர் காலை ஒருத்தர் பிடிச்சுவிட்டுப்போம். ரெண்டு நாளைக்கு முன்னாடி திடீர்னு ‘சேர்’ போட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது, அதிகாரிங்க ரெய்டுக்கு வந்தது” என்றனர் உடைந்த குரலில்.

“நாங்கள் என்ன ரோபோக்களா?’ - காற்றில் பறந்த சட்டம்... பரிதவிக்கும் பணியாளர்கள்!

தி.நகர் முழுவதும் விசிட் அடித்தபோது பெரும்பாலான பணியாளர்களுக்கு இருக்கைக்கான சட்டம் இருப்பதே தெரியவில்லை. சில சின்னக் கடைகளில் முதலாளிகளே முன்வந்து, பணியாளர்களுக்கு இருக்கை வசதியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், பெரிய வணிக நிறுவனங்களில் பில் போடுபவர்களுக்கும், கேஷியர்களுக்கும்கூட இருக்கை போடுவதில்லை.

காரணம் கேட்டால், “ஜவுளிக்கடையில் உட்கார்ந்துகொண்டு சர்வீஸ் செய்வதை வாடிக்கையாளர்களே விரும்ப மாட்டார்கள். எனவேதான், கேன்டீன் போன்ற இடங்களில் உட்கார்ந்து ஓய்வெடுக்க வழிவகை செய்திருக்கிறோம்” என்று சொல்லி வைத்ததுபோலப் பேசுகிறார்கள் ஜவுளிக்கடை மேனேஜர்கள்.

இது குறித்து கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவியிடம் பேசியபோது, “சமீபத்தில் சென்னை தி.நகரில் 94 வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தியிருக் கிறோம். அதில் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத 63 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ரகசிய ஆய்வும் நடத்தவிருக்கிறோம். எங்கள் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை மனசாட்சியுடன் முதலாளிகள் அணுகினாலே, இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்” என்றார்.

நல்ல மனிதர்களால்தான், நல்ல வணிகர்களாகவும் இருக்க முடியும்!