Published:Updated:

மணல் கொள்ளையர்களுக்காக இடம் மாறுகிறதா தடுப்பணை?

தடுப்பணை
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பணை

இடமாற்றத்துக்கு மணல் அள்ளுவதைக் காரணமாகச் சொல்வது தவறு. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இடத்திலேயே அணைகட்ட, வனத் துறை அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம்.

மணல் கொள்ளையர்களுக்காக இடம் மாறுகிறதா தடுப்பணை?

இடமாற்றத்துக்கு மணல் அள்ளுவதைக் காரணமாகச் சொல்வது தவறு. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இடத்திலேயே அணைகட்ட, வனத் துறை அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம்.

Published:Updated:
தடுப்பணை
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பணை

‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட ஓரிடத்தில் அடிக்கல் நாட்டிவிட்டு, வேறு இடத்தில் பணிகள் நடப்பது மணல் கொள்ளைக்காகவே’ என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசு, “வீணாக கடலுக்குச் செல்லும் தாமிரபரணி தண்ணீரைச் சேமிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி – ஆழ்வார்தோப்பு இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. அதன்படி, ஆழ்வார்திருநகரி ஆற்றுப்பாலத்திலிருந்து 440 மீட்டர் தொலைவில் இடம் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.28 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளை கடந்த 22-6-2021-ல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் தொடங்கிவைத்தார்கள்.

மணல் கொள்ளையர்களுக்காக இடம் மாறுகிறதா தடுப்பணை?
மணல் கொள்ளையர்களுக்காக இடம் மாறுகிறதா தடுப்பணை?

இந்தத் தடுப்பணையால் 1,572 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுவதோடு, 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்குக் கூடுதலாகக் குடிநீர் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், திட்டமிட்ட இடத்தை விட்டுவிட்டு, பாலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலேயே அணைகட்டத் தொடங்கி விட்டார்கள் பொதுப்பணித்துறையினர். காரணம் கேட்டால், ‘முதலில் தேர்வுசெய்யப்பட்ட இடம் வனத்துறைக்குச் சொந்தமானது’ என்கிறார்கள். இது இடத்தை தேர்வு செய்தபோதே தெரியாதா... ஆற்று மணலைக் கொள்ளையடிப்பதற்குத் தோதாகத்தான் இடத்தை மாற்றியிருக்கிறார்கள். இதனால் ஆழ்வார்திருநகரி பாலத்துக்கே ஆபத்து” என்றார் காட்டமாக.

வியனரசு, செந்தில்ராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்
வியனரசு, செந்தில்ராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்

இது குறித்து நெல்லை தாமிரபரணி வடிநிலக் கோட்டத்தின் உதவிப் பொறியாளர் ரமேஷிடம் பேசினோம். “ஆழ்வார்திருநகரி - ஆழ்வார்தோப்பு பகுதியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள், தாமிரபரணிக் கரையோரங்களில் மரங்கள் வளர்ப்பதற்காக முன்பே வனத்துறைக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. பணிகளை ஆரம்பித்த பிறகுதான், அங்கு தடுப்பணை கட்டக் கூடாது என வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதனால்தான், இடத்தை மாற்றினோம். அங்கு தடுப்பணை அமைப்பதால் பாலத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக பணிகளைத் தற்போது தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறோம்” என்றார்.

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டபோது, “விவசாயிகள் கொடுத்த புகாரை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “இடமாற்றத்துக்கு மணல் அள்ளுவதைக் காரணமாகச் சொல்வது தவறு. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இடத்திலேயே அணைகட்ட, வனத் துறை அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பாலத்திலிருந்து 440 மீட்டர் தொலைவில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கும். மக்களின் குடிநீர், பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதே அரசின் கடமை” என்றார்.

மக்களின் வரிப் பணம்... எனவே, ஆற்றில் போட்டாலும் ‘அளந்து’ போடுங்க!