மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 22 - சூரியன் உதிக்கும் நாடு!

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

அணு ஆயுதப்போரின் வலி தெரிந்த ஒரே நாடு ஜப்பான்...

மேஜையின் மீதிருந்த கண்ணாடி டம்ளரில் தண்ணீர் அதிர்ந்தது. காலுக்குக் கீழே தரை நகர்வது போலவும், திடீரென்று ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது போலவும் இருந்தது. பயத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறோம். உரை நிகழ்த்திக்கொண்டிருந்த ஜப்பானிய அதிகாரி சொன்னார். “நில நடுக்கம். கவலை வேண்டாம். இந்தக் கட்டடம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மிகவும் ஆட்டம் கொடுத்தால் மேஜைகளின் கீழ் பதுங்கிக்கொள்ளலாம்.

”2015 மே 25, டோக்கியோவில் ஜைகா (JICA) தலைமை அலுவலகம். மாலை நேரம். டோக்கியோவிலிருந்து 33 கி.மீ தூரத்தில் 71 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம். ரிக்டர் அளவு 5.1.

காரணம் இல்லாமல் சமூகங்கள் எழுச்சி பெறுவதுமில்லை; வீழ்ச்சி அடைவதுமில்லை. தலையில் விழுந்த அணுகுண்டுகள்; ஆண்டுக்கு 5,000 நிலநடுக்கங்கள், அவற்றில் சராசரியாக 160 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் ஐந்துக்கும் மேல்; அடிக்கடி ஆழிப்பேரலை. நடுங்கும் பூமியுடன் நடக்கப் பழகிய மக்கள். ஜப்பான் - சூரியன் உதிக்கும் நாடு. சுணங்குவது இல்லை.

ஜப்பானுக்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். 2001இல் சுற்றுச்சூழல் சுற்றுலா பற்றிய உலகப் பயிலரங்கம்; 2015இல் டோக்கியோவில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை நேரில் பார்வையிட; 2017, 2018 ஆண்டுகளில் ஒடிசாவில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் பற்றி ஜப்பானியத் தொழில் நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக. வெவ்வேறு களங்கள், புதிய புதிய புரிதல்கள். கண்ணில்படும் காட்சியில் எல்லாம் ஒரு காலண்டர் படம். பார்த்துப் பழகும் மனிதர்களிடம் கற்றுக்கொள்ள பாடம்.

2001 செப்டம்பர் 11, நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் எரிந்து சரியும் நேரலையைப் பார்த்தபடி ஜப்பானுக்கு விமானம் ஏறினேன். 1941ஆம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள ‘பேர்ல் ஹார்பர்’ கப்பற்படைத் தளத்தின் மீது ஜப்பான் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த பயங்கரம். விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

டோக்கியோவிலிருந்து ஃபுக்குஷிமா பகுதியிலுள்ள கோரியாமாவுக்கு ஷின்கான்ஸன் ரயிலில் சென்றேன். பெருநகரின் விரைவை விட்டு வெளியே வந்ததும் இன்னொரு பரிமாணம். மேற்கத்தியத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கிழக்கத்திய மரபுகளையும் ஒரு மாயக்கலவையாய் மாற்றியது ஜப்பானின் சாதனை.

ஒரு நாட்டின் முகமும் முகவரியும் மக்களின் உடல்மொழிதான். அந்தச் சுற்றுலாப் பேருந்தில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தோம். ஓட்டுநரே நடத்துநர், ஒலிபெருக்கியில் பேசும் வழிகாட்டி. 17 நாட்டு மொழிகளிலும் தனித்தனியே வந்தனம். எனக்கு ஒரு ``நமஸ்கார்.” சில மணிநேரத்தில் ஜப்பான் பற்றிய ஆகச் சிறந்த புரிதலை அந்த ஓட்டுநர் அளித்தார். இடையிடையே நகைச்சுவை. விடைபெறும் போது பாராட்டிவிட்டு “டிப்ஸ்” தரமுயன்றார்கள் சிலர். மிகப்பணிவுடன் வணங்கி மறுத்ததுடன் “ஜப்பானில் யாரும் டிப்ஸ் வாங்க மாட்டார்கள்” என்று சொல்லி, ‘இனாம் வாங்குவதை இழுக்காகக் கருதுகிறார்கள் ஜப்பானியர்கள்’ என்ற சமூக உளவியல் காரணத்தையும் விளக்கினார்.

தங்கும் விடுதிகளின் நுழைவாயிலில் லிப்ட் அருகில், கண்ணில்படும் ஊழியர்கள் வணங்கி வணங்கிச் செல்கிறார்கள். ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது ஊழியர்கள் பலர் ஒரே வரிசையில் நின்று வணங்கி வழியனுப்புகிறார்கள். உணவுக்கூடங்களில், வணிக வளாகங்களில் வாடிக்கையாளரை நிஜமாகவே மன்னரைப் போல நடத்துகிறார்கள்.

2001இல் டோக்கியோ சென்றபோது ‘டோக்கியோ டவர்’ ஊரில் உயரமானதாக இருந்தது. 819 அடி உயரம். 2015இல் சென்றபோது அதற்கெல்லாம் அப்பனாக ‘டோக்கியோ ஸ்கை ட்ரீ’ வந்துவிட்டது. 2,080 அடி உயரம். அன்றைய தேதியில் அதுதான் உலகின் உயர்ந்த கோபுரம். ஆண்டுக்கு 45 லட்சம் பேர் ‘ஸ்கை ட்ரீ’யில் ஏறி இறங்குகிறார்கள். அற்புத அனுபவம்.

`டோக்கியோ பே’ (Tokyo Bay Area) பகுதிக்குச் சென்றேன். ஜப்பான் நாட்டின் வளர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடு. ஒருகாலத்தில் `உள்கடல்’ என்ற பொருளில் “யுச்சி-யுமி” என்று அழைக்கப்பட்டது. டோக்கியோவின் பழைய பெயர் எடோ. 1868இல் ஜப்பானின் தலைநகரம் கியோட்டோவிலிருந்து எடோவுக்கு மாறியபோது டோக்கியோ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தி, டோக்கியோவிலுள்ள ரெங்க்கோஜி என்ற புத்த கோயிலில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தைப்பேயிலிருந்து 1945இல் டோக்கியோ கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஜவகர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், இந்திராகாந்தி, வாஜ்பாய் போன்ற இந்தியத் தலைவர்கள் இந்த இடத்திற்கு வருகை புரிந்துள்ளார்கள். நான் தங்கியிருந்த நரிட்டா பகுதியிலிருந்து ரெங்க்கோஜி 60 கி.மீ தூரம். முதல்முறை போகமுடியவில்லை. இரண்டாவது பயணத்தில் சென்றுவிட்டேன்.

ஜப்பானியர்களில் பெரும்பான்மையோர் ஷிண்ட்டோ (Shinto) என்ற தொல் வழிபாட்டுமுறையையும் புத்தமதத்தையும் பின்பற்றுகிறார்கள். ஷிண்ட்டோ மரபில் நீத்தார் வழிபாடு, குடும்ப தெய்வங்கள், குலதெய்வங்கள், தெய்வீக சக்திகள், கோயில்கள் என்ற பல்வேறு பரிமாணங்கள் உண்டு.

ஜப்பானின் பழைய தலைநகரமான கியோட்டோதான் இன்றும் பண்பாட்டுத் தலைநகரம். ஷிண்ட்டோ, புத்த வழிபாட்டுத் தலங்கள் இரண்டாயிரத்துக்கும் மேல் உள்ளன. அழகிய பூந்தோட்டங்கள், தலைசிறந்த கல்விக்கூடங்கள். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 17 உலக பாரம்பரியச் சின்னங்கள். கியோட்டோவைப் பார்க்காவிட்டால் ஜப்பானைப் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.

உலகின் சூரிய வழிபாடுகள் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறேன். இரவு விருந்தின் போது JICA உயரதிகாரிகளிடம் அமேத்துரசு என்ற சூரியக் கடவுள் பற்றியும் தவளை வழிபாடு பற்றியும் விசாரித்தேன். ஜப்பானிய ஷிண்ட்டோ மரபில் சூரியக் கடவுள் ஒரு பெண் தெய்வம். இஸே என்ற இடத்திலுள்ள அமேத்துரசு கோயில் கியோட்டோவிலிருந்து 135 கி.மீ தூரம். நேர நெருக்கடியால் போகமுடியவில்லை.

கியோட்டோவில் டென்ரியு-ஜி கோயிலுக்குச் சென்றிருந்தேன். தவளை உருவச் சிற்பம் வைத்த தண்ணீரில் காசுகளைக் காணிக்கையாகப் போடுகிறார்கள். ஷிண்ட்டோ அரிசிக்கடவுள் இனாரியின் கோயில் வெளிவாசலில் அதிர்ஷ்ட தவளைச் சிற்பம். ஒடிசாவில் பார்பரா காட்டுப்பகுதியில் தவளை வழிபாட்டைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. ஸகானோ ரயில் நிலையத்திலிருந்து `ரொமாண்டிக் ரயில்’ என்ற வண்ண ரயில். நீர் என்ற பெயரில் வெள்ளி உருண்டோடும் கொஜுகவா நதியைத் தாண்டி வர்ணிக்கமுடியாத ஒரு அழகிய மலைப்பாதையில் கமியோகா என்ற இடத்திற்கு 7.5 கி.மீ மெதுவாக ஊர்ந்து சென்றது ரயில்.

1945, அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலில் கியோட்டோதான் முதல் இலக்காக இருந்தது. ஆனால் அதிபர்கள் ரூஸ்வெல்ட், ட்ரூமன் நிர்வாகத்தில் போர்த் துறைச் செயலாளராக இருந்த ஹென்றி எல். ஸ்ட்டிம்ஸன், விடாப்பிடியாக கியோட்டோவின் பெயரை அழிவுப்பட்டியலிலிருந்து நீக்கினாராம். ஸ்ட்டிம்ஸனுக்கு கியோட்டோ நகரின் மீது ஒரு நெருக்கமான உணர்வு இருந்தது; மனைவியுடன் தேனிலவுப் பயணம் செய்த இடம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அணு ஆயுதப்போரின் வலி தெரிந்த ஒரே நாடான ஜப்பான், ஒடிசாவில் புவனேஸ்வரம் அருகே கலிங்கப் போர்க்களத்தில் ஓர் அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பியதை கியோட்டோவிலிருந்து நின்றபடி நினைத்துப்பார்க்கிறேன். தயா நதி அருகே தவுலி குன்றில் 1972இல் கலிங்கா-நிப்பான் சங்கமும் ஒடிசா அரசும் சேர்ந்து கட்டிய பிரமாண்டமான நினைவுச் சின்னம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அங்கே வாழ்ந்த ஜப்பானியத் துறவி கௌசோ யோதா அண்மையில்தான் காலமானார். அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

புத்தர்
புத்தர்

ஒசாகா நகர கடைவீதியில் ‘கோபன்’ (KOBAN) என்று ஆங்கிலத்தில் எழுதிய பெயர்ப்பலகை. கேட்பாரற்ற பொருள்களை ஒப்படைக்கும் சிறிய காவல் நிலையம் அது. நேர்மைப் பெருங்கோயில். ஜப்பான் பற்றிய புரிதலுக்கு கோபன் ஒரு சோற்றுப் பதம். அந்தக் காவல் நிலையத்தின் `லோகோ’வை கவனித்தேன். கண்டெடுத்த காசை ஒப்படைக்க வந்த சிறுவன் நிமிர்ந்து நிற்கிறான், உயரமான அந்த போலீஸ்காரர் கனிவாகக் குனிந்து பேசுகிறார். நேர்மை பற்றி எழுதப்பட்ட எந்தக் கவிதையும் என்னை இதுபோல ஈர்த்ததில்லை.

ஒஸாகாவிலிருந்து ரயிலில் கன்சாய் விமான நிலையம் சென்று தென்கொரியத் தலைநகர் சியோலுக்குப் பயணமாக வேண்டும். ரயில் சரியான நேரத்தில் வந்தது என்பது தோராயம் அல்ல. நொடி பிசகாத துல்லியம். பிளாட்பாரத்தில் வரைந்த கோட்டின் மீது அங்குலம்கூட விலகாமல் கதவுகள் திறக்கின்றன. எதிர்த்திசைப் பயணத்திற்காக இருக்கைகள் சுழன்று திரும்புகின்றன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ராணுவம் போல் நுழைந்து தூய்மைப்பணியாளர்கள் அதிவிரைவில் சுத்தமாக்கிக் கீழே இறங்கி, பயணிகளை வணங்கி அழைக்கிறார்கள். எப்போதாவது ரயில் சிறிது தாமதமாகிவிட்டால் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்பார்களாம்.

கன்சாய் விமான நிலையம் ஒஸாகா வளைகுடாவில் கடலுக்குள் கட்டிய கான்கிரீட் தீவு. உலகிலேயே நீளமான விமானக் கூடம் (1.7 கி.மீ) ஆண்டுக்கு இரண்டரைக் கோடி சர்வதேசப் பயணிகள். ஒஸாகா நிலப்பகுதியை விமான நிலையத்துடன் இணைக்கும் `ஸ்கை கேட்’ பாலம் மனிதன் கட்டிய வானவில். அவ்வளவு உயரத்தில், உலகத்திலேயே மிக நீளமான இரண்டு அடுக்குப் பாலம். மேல் தளத்தில் ஆறு தடங்களில் வாகனங்கள். கீழ்த் தளத்தில் இரண்டு ரயில் பாதைகள்.

எனது எல்லாக் கேள்விகளுக்கும் விடை சொன்ன அந்த ஜப்பானியர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரேயொரு கேள்வி கேட்டார். ``இந்தியர்களிடம் பேசும் போது தலையை ஆட்டுகிறார்கள். ஆனால் அது `ஆமா’வா, `இல்லை’யா என்று புரிவதில்லை’’ என்றார். சிரித்து மழுப்பிவிட்டேன். எனக்கும் பதில் தெரியாது. நமது ``ஆம்” “இல்லை” என்ற இரண்டுக்கும் அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை என்று இன்னொரு நாட்டுக்காரரிடம் எப்படி ஒப்புக்கொள்வது!

`அவதார புருஷர்’களை, எப்போதோ பிறக்கிற சில உதாரண மனிதர்களை மட்டும் முன்னிறுத்தி எந்தச் சமுதாயமும் தனது நிகழ்காலத்தை வழிநடத்த முடியாது. ஒரு சமுதாயத்தின் உண்மையான தேர்வு இதிகாசங்களிலோ, இலக்கியங்களிலோ இல்லை. அது தெருக்களில்தான் நடக்கிறது. அந்தத் தேர்வில் எனது மதிப்பீட்டில் ஜப்பான் முதலிடம் பெறுகிறது. சராசரி மனிதர்களின் நேர்மையால்.

- பயணிப்பேன்

*****

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

கோபன் - தொலைப்பவர்களின் சொர்க்கம் ஜப்பான்.

கண்டெடுத்த பொருள்களை ஒப்படைக்க ஜப்பான் முழுவதும் 6,300 `கோபன்’ நிலையங்கள் உள்ளன. ஆண்டுக்கு மூன்று கோடிப் பொருள்கள். அவற்றில் பெரும்பாலானவை உரியவரைச் சென்று சேர்கின்றன.

டோக்கியோவில் தொலைக்கப்பட்ட கைப்பேசிகளில் 83 விழுக்காடு உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டதை வியப்புடன் பதிவு செய்தது பி.பி.சி. டோக்கியோ பெருநகர காவல் அலுவலகத்தில் மட்டும் 9 லட்சம் காணாமல் போன பொருள்கள். பெரும்பாலும் பஸ்களில் மெட்ரோ ரயில்களில் மறந்துவிட்டுச் சென்ற குடைகளும் கைப்பேசிகளும். தொலைத்தவர் புகார் அளிக்கவும், தகவல் அறியவும் இணையதளம்.

பாதையில் 50 யென் நாணயத்தை (இந்திய மதிப்பில் 34 ரூபாய்) கண்டெடுக்கிறான் ஒரு சிறுவன். கோபன் நிலையத்திற்குச் செல்கிறான். அங்கே அந்தச் சிறுவனை அதிகாரிகள் அன்புடன் வரவேற்று அதற்குரிய படிவங்களை நிரப்பிக் கையெழுத்திட்டு நன்றி கூறுகிறார்கள். இதைப் பெருமையுடன் `ட்விட்டரில்’ பதிவிடுகிறார் அந்தச் சிறுவனின் தாய். இது ஜப்பானில் அன்றாட நிகழ்வு.

‘கண்டெடுத்ததைத் திருப்பித் தரவேண்டும்’ என்பது பள்ளிக்கூடத்திலேயே சொல்லித் தரப்படுகிறது.

பாடத்திட்டங்களைவிட முக்கியமானதல்லவா பண்பு. உலகில் குற்றங்கள் மிகக்குறைவான நாடுகள் பட்டியலில் ஜப்பான். வியப்பென்ன இருக்கிறது, விதைத்ததுதானே முளைக்கும்!

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது