Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 3 - ஒரே ராத்திரியில் கூடை நிறைய தங்கம்!

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமலை ரகசியம்

தனது பட்டன் செல்போனுடன் பெரிய பாறை ஒன்றின் உச்சியில் ஏறி அரைகுறை சிக்னலை வைத்து யாரிடமோ சத்தமாகப் பேசினார் பெரியவர்.

பக்கவாட்டுச் சுவரைப் பற்றிக்கொண்டு பதற்றத்துடன் அந்த இளைஞனும் பெரியவரும் அடுத்தடுத்து மேலே ஏறினர். “ஊத்து பொத்துக்குச்சு. இருபது அடிக்குத் தண்ணி ஏறிக்கிடக்கு. தண்ணியை வெளிய எடுக்காம டோனாவுக்குள்ள இறங்க முடியாது. உடனே மோட்டாருக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றார் அந்த இளைஞர். அனைவரிடமும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

தங்கமலை ரகசியம்
தங்கமலை ரகசியம்

தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்த பெரியவர், “தண்ணியை வெளியே எடுக்குறதே பெரிய போராட்டம். அப்படி வெளிய எடுத்தாலும் அடுத்த தண்ணி ஊறி தேங்குறதுக்குள்ள ரீப் அடிச்சாகணும்... அதுவும் பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்துல பாறை சரிஞ்சு மண்ணு மூடும்னு தெரியாது. இப்படித்தான் நாலு மாசத்துக்கு முன்னாடி தண்ணி ஊறுன டோனாவுக்குள்ள சொல்லச் சொல்ல கேட்காம இறங்குன குமாரு, ரொம்ப நேரமாகியும் வெளியவே வரலை. ஒரு சந்தேகத்துல நான் தீப்பந்தம் கட்டிக்கிட்டு படுத்துக்கிட்டே போயி பார்த்தா, 200 அடியில மண்ணு மூடி மயக்கமாகிக் கிடந்தான். மண்ணை கொடைஞ்சு வெளியே கொண்டுவந்து போட்டு காப்பாத்துனோம். நாங்க ரெண்டு பேரும் தப்பிச்சதே புண்ணியம். அதுக்கப்புறம் அந்த டோனாவையே கைவிட்டுட்டோம்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 3 - ஒரே ராத்திரியில் கூடை நிறைய தங்கம்!

இன்னொரு முறை இதே மாதிரி நீரூத்து டோனாவுல நாங்க இறங்குனப்ப ஒரு கரடி உள்ளே மாட்டிக்கிட்டிருந்துச்சு. பதறியடிச்சுக்கிட்டு வெளியே ஓடியாந்துட்டோம். கைவிடப்பட்ட டோனாக்களை நாங்க குறி போட்டு வெச்சிருப்போம். யாரும் அதுல இறங்க மாட்டாங்க. திடீர்னு பொத்துக்கிட்டு பொங்குற நீரூத்து, புதைகுழி, பாதாளப் பள்ளம், சரிஞ்சு விழுற பாறைகள்னு அபாயம் நிறைஞ்ச டோனாக்களைத் தான் அப்படி கைவிட்டுருப்பாங்க. அதுல வனவிலங்குகள், பாம்புகள் தஞ்சமடைஞ்சிருக்கும். போன செப்டம்பர் மாசம் பெரிய ஆண் யானையவே அப்படியொரு குழி மொத்தமாக விழுங்கிடுச்சுன்னா பார்த்துக்கோங்க. அதோட தந்தம் மட்டும்தான் வெளியே நீட்டிக்கிட்டிருந்துச்சு. ஒருமுறை பெங்களூருல இருந்து வந்த புதுப்பையன் ஒருத்தன் தெரியாம, கைவிடப்பட்ட டோனாவுக்குள்ள இறங்கிட்டான். அவன் காலை மலைப்பாம்பு சுத்திக்கிடுச்சு. படாதபாடுபட்டு அவனைக் காப்பாத்துனோம். இப்போ இங்கே என்ன நடக்குமோ... ஒண்ணும் புரியலை” என்று பெரியவர் சொன்னபோது பகீரென்று இருந்தது.

தனது பட்டன் செல்போனுடன் பெரிய பாறை ஒன்றின் உச்சியில் ஏறி அரைகுறை சிக்னலை வைத்து யாரிடமோ சத்தமாகப் பேசினார் பெரியவர். சிறிது நேரத்தில் கீழே வந்து, ஒருவரின் பெயரைச் சொல்லி அவரது சுரங்கத்தில் ஹோஸ் பைப்பும், மற்றொருவரின் சுரங்கத்தில் மண்ணெண்ணெய் மோட்டாரும் இருப்பதாகத் தெரிவித்தார். “நாம உடனே போயி அந்தாள் டோனாவுல இருந்து ஹோஸ் பைப்பை எடுத்துட்டு வரணும். அப்பதான் அடுத்த வேலை நடக்கும்” என்று சொல்லி அனைவரையும் அழைத்தார். குழுவில் இருந்த முதியவரிடம் மதிய உணவை சமைக்கச் சொல்லிவிட்டு, குழாய்களை எடுத்துவருவதற்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த சுரங்கத்துக்கு நடக்க ஆரம்பித்தோம்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 3 - ஒரே ராத்திரியில் கூடை நிறைய தங்கம்!

மழை முடிந்து பனிக்காலம் ஆரம்பித்திருந்ததால், புற்கள் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கியிருந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் உறைபனி அதிகரித்திருக்கிறது. `கோடையில் வழக்கத்துக்கு அதிகமான வெயிலும், பனிக்காலத்தில் வழக்கத்துக்கு அதிகமான உறைபனியும் ஏற்படுவது பருவநிலை மாற்றத்தின் ஆபத்தான விளைவுகளே’ என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள். வழிநெடுகிலும் எண்ண முடியாத அளவுக்கு சுரங்கக் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில இடங்களில் நீளமான மூங்கில் கழியை தரையில் தட்டி ஆழம் பார்த்தபடியே நடக்கவேண்டியிருந்தது. தரை எது... தரையைப்போலவே மண் மூடியிருக்கும் சுரங்கம் எது என்றே தெரியவில்லை. அலட்சியமாகக் காலைவைத்தால் ஆளை அப்படியே உள்ளிழுத்துக்கொள்ளும். இவ்வளவு அபாயங்களுக்கு நடுவிலும் சகஜமாக ‘தொழில்’ நடந்துகொண்டிருந்தது. அந்த அடர் வனத்துக்குள் சேகரித்த தங்கத் துகள்கள் நிறைந்த மண்ணை மூட்டைகட்டி தலையில் சுமந்து சென்றுகொண்டிருந்தது ஒரு கூட்டம்... இன்னொரு கூட்டம், தங்க ரேகையோடிய சிறு பாறைகளை சுத்தியலால் உடைத்துக்கொண்டிருந்தது... ஓடையில் சிலர் தண்ணீரில் மண்ணைச் சலித்துக் கொண்டிருந்தார்கள்... அனைவரிடமும் நலம் விசாரித்தபடியே நடந்தது பெரியவரின் கூட்டம்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 3 - ஒரே ராத்திரியில் கூடை நிறைய தங்கம்!

சில மணி நேர நடையில் ஹோஸ் பைப் இருக்கும் சுரங்கத்தை அடைந்தோம். பச்சை நிறத்தில் நீண்டுகிடந்த அந்த ரப்பர் பைப்புகளை எடுத்துக்கொண்டு பெரியவரின் டோனாவுக்குத் திரும்ப ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் அனைவருமே களைத்துவிட்டோம். நா வறண்டு தண்ணீருக்குத் தவித்தது. ஒருகட்டத்தில் தாகம் தாங்க முடியவில்லை. “தண்ணீர் வேண்டும்” என்றபடியே தரையில் அமர்ந்துவிட்டோம். “புதுசா வந்தா அப்படித்தான்... நல்லவேளையா இங்கே வெச்சு தண்ணி கேட்டீங்க... என் பின்னாடி வாங்க” என்ற பெரியவர் மலைச்சரிவில் அழைத்துச் சென்றார். நடக்க முடியாதபடி, செங்குத்தாக இருந்தது பாதை... சில இடங்களில் உட்கார்ந்தும் தவழ்ந்தும் சென்றோம். ஆழமான பள்ளத்தாக்கை அடைந்தபோது நீரோடையின் சலசலப்பு காதில் கேட்டது. இன்னும் சிறிது தூரம் இறங்கியபோது, பெரிய நீரோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் நீரை அள்ளி அள்ளிக் குடித்தோம். அமிர்தமாகத் தொண்டைக்குழிக்குள் இறங்கியது நீர்.

மேலே ஏறிவந்தபோது மூன்று பேர் சிறிய மண் மூட்டைகளுடன் எதிர்ப்பட்டார்கள். பெரியவருக்கு வேண்டப்பட்டவர்கள்போல... “ஏதாச்சும் தேறிச்சா?” என்று கேட்டார் பெரியவர். ``பத்து நாளு டோனா அடிச்சதுல பெருசா ஒண்ணும் கிடைக்கலை. கூலி கொடுத்தது போக... ஒரு மாசம் சாப்பாட்டுக்கு ஆச்சு” என்றார்கள் பெருமூச்சுடன். அவர்களிடம் மூட்டையை அவிழ்த்துக் காட்டும்படி கேட்டோம். நம்மைச் சந்தேகத்துடன் பார்த்தவர்கள், பெரியவர் கண்ணைக் காட்டிய பிறகே மூட்டையை அவிழ்த்தார்கள்... அந்த மண்ணில் ஆங்காங்கே அடர் மஞ்சள் நிறத்தில் தங்கத் துகள்கள் மின்னின. புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

நடையைத் தொடர்ந்தபடியே பேச ஆரம்பித்தார் பெரியவர்... “தங்கம் விளையுற மண்ணு இது. என்னா ஒண்ணு... அதிர்ஷ்டம் இருக்குறவனுக்குத்தான் கெடைக்கும். போன கொரோனா டைம்ல ஒரு குரூப்புக்கு ஒரே ராத்திரியில ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கட்டி கட்டியா கூடை அளவுக்குத் தங்கம் கெடைச்சுது. ஃபாரஸ்ட் ஆளுங்க, போலீஸ்காரங்கன்னு பலருக்கும் பெரிய அமவுன்ட்டை அடிச்சிவிட்டு, நைட்டோட நைட்டா கேரளா, மலப்புரத்துக்கு கொண்டுபோயிட்டாங்க. அவங்க கேரளா பக்கமே எஸ்டேட் வாங்கிப்போட்டு செட்டிலாகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி மூட்டை தூக்கிட்டு இருந்த பசங்க அஞ்சு பேருக்கு ஒருநாள் கிடைச்ச தங்கக்கட்டியில இப்போ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாங்க. இன்னொருத்தரு இருபது லாரி வாங்கிவிட்டிருக்காரு. இந்த மலை பல பேரை கோடீஸ்வரனாவும் லட்சாதிபதியாவும் ஆக்கியிருக்கு. பல பேரு மண்ணோட மண்ணாவும் போயிருக்காங்க” என்றார்.

ஓர் இடத்தில் தார்ப்பாயால் கூடாரம் அமைத்து கணவன், மனைவி சகிதமாக உணவு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கம் எடுக்கும் வேலைக்குக் குடும்பத்துடன் வந்திருக்கிறார்கள். ஒருவழியாக பெரியவரின் டோனாவை அடைந்தபோது மாலை 4 மணியாகிவிட்டது. களைப்பிலும் பசியிலும் சோர்ந்திருந்த நமக்குக் குழையவைத்த சோறும் நெருப்பில் சுட்ட கருவாட்டுத்துண்டுகளையும் தேக்கு மர இலையில் வைத்துப் பரிமாறினார்கள். பசித்தீயில் தேவாமிர்தமாக அதை விழுங்கினோம். மாலை சூரியன் மலை முகடுகளுக்குப் பின்னால் இறங்கத் தொடங்கியிருந்தது. சிறிது நேரத்தில் இருட்டிவிட்டது. பனியும் இருளும் போர்த்திய நேரத்தில், கீழே கிடந்த மரக்கிளைகளை உடைத்து, தீப்பந்தம் தயார் செய்தார்கள். மண்ணெண்ணெயில் பழைய துணியை நனைத்து தீப்பந்தம் ஏற்றி கிளம்பத் தயாரானது அந்தக் கூட்டம். நம்மைப் பார்த்த பெரியவர், “மணி ஏழாகிடுச்சு... இருட்டுல நீங்க வர வேணாம். உங்களுக்கு பாதுகாப்பா நம்மாளு ஒருத்தரு இருப்பார்... நாங்க மட்டும் போயிட்டு மோட்டாரை தூக்கிட்டு வந்துடுறோம்” என்றபடி கிளம்பினார்.

வனம் மொத்தத்தையும் இருள் போர்த்தியிருந்தது. நாமும் ஒரு பெரியவர் மட்டுமே தனித்திருந்தோம். கூடாரமோ கொட்டகையோ எதுவும் இல்லை. மழை வந்தால், சுரங்கத்தின் முகப்பில் ஒண்டிக்கொள்ள வேண்டியதுதான். சுரங்க வாயிலின் உள்ளே எட்டிப் பார்த்தோம். இருளடைந்த குகைக்குள்ளிருந்து ஹோவென கேட்டது காற்றுச் சத்தம்... திடீரென்று வெளவால் கூட்டமொன்று உள்ளிருந்து தலையை உரசியபடி பறந்தது. மரத்தடியில் தலைசாய்த்துப் படுத்தோம். வானில் நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பித்த அந்த நேரத்தில் வனம் முழுக்கத் தோன்றியது அந்த பிரகாச காட்சி. வானின் நட்சத்திரங்களுக்குப் போட்டியாக தூரத்தில் துளித் துளியாக மிளிர ஆரம்பித்தன தீப்பந்தங்கள். சில நிமிடங்களில் வனம் முழுக்க எங்கு பார்த்தாலும் தீப்பந்த வெளிச்சங்கள்... டார்ச் லைட் நடமாட்டங்கள்... ஒன்றல்ல, இரண்டல்ல... நூற்றுக்கணக்கில்... நேரமாக நேரமாக ஆயிரக்கணக்கில் நகர்ந்துகொண்டே இருந்தன. அப்போதுதான் நமக்கு உறைத்தது தங்கமலை சுரங்கத் தொழிலின் பிரமாண்டம்!

- தோண்டுவோம்