Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 4 - காட்டுக்கு ஆயிரம் கண்கள்!

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமலை ரகசியம்

எனக்கு நாலு பொட்டப் புள்ளைங்க. மூணு பேரைக் கரைசேர்த்துட்டேன். கடைசிப் பொண்ணுக்கு மட்டும் இன்னும் நல்ல இடம் அமையலை

நாமும் ஒரு முதியவரும் மட்டுமே தனித்திருந்தோம். காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் ஒரு விஷயத்தைச் சொல்வார்கள்... `காட்டில் ஒற்றையாளாகச் செல்லும்போதுகூட நாம் தனித்திருப்பதில்லை. காட்டுக்கு ஆயிரம் கண்கள்... நாம் எதையும் பார்க்கவில்லை என்றாலும்கூட அந்தக் கண்கள் நம்மை கவனித்துக்கொண்டுதான் இருக்கும்’ என்பார்கள். ஆமாம்... நாம் வெறுமனே பார்ப்பதற்கும், ஆழ்ந்து கவனிப்பதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது. வனத்தின் உயிரினங்கள் இயல்பாகவே கவனமாகவும், எச்சரிக்கையாகவும், ஆழ்ந்த உள்ளுணர்வு பெற்றவையாகவும் இருக்கும். அவற்றின் வாழ்விடச் சூழல் அப்படி. இப்போதும்கூட நம்மை அவை கவனித்துக்கொண்டுதான் இருக்கும். இதை உணர்ந்தபோது நம்மையறியாமல் அச்ச உணர்வு ஏற்பட்டது!

தங்கமலை ரகசியம்
தங்கமலை ரகசியம்

அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு கல்லின்மீது அமர்ந்து முதியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “எனக்கு நாலு பொட்டப் புள்ளைங்க. மூணு பேரைக் கரைசேர்த்துட்டேன். கடைசிப் பொண்ணுக்கு மட்டும் இன்னும் நல்ல இடம் அமையலை. அதை ஒரு நல்லவன் கையில புடிச்சுக் கொடுத்துட்டா போதும்; அதுக்கப்புறம் எனக்கு இந்தப் பொழப்பே வேண்டாம். ஒருகாலத்துல நானும் இங்க ரீப் அடிச்சவன்தான். பொண்டாட்டி புள்ளகுட்டிய மறந்துட்டு, இந்த மலையே கெதின்னு கெடந்து தொழில் செஞ்சேன். ஆரம்பத்துல கூலிக்குத்தான் ரீப் அடிச்சுக் கொடுத்தேன். அப்புறம் நானே ஒரு டோனாவைச் சொந்தமா போட்டேன். அதுல ஓரளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுது. திடீர்னு ஒருநாள் டோனாவுல லேசா தண்ணி சொட்ட ஆரம்பிச்சுது. சரி... சட்டுனு ரீப் அடிச்சுட்டு வெளிய வந்துடலாம்னு உள்ளே போயிட்டேன். ரீப் அடிக்க அடிக்க திடீர்னு பாறாங்கல்லுக் குவியல் இடுப்பு மேலயே சரிஞ்சு விழுந்துருச்சு. உருண்டு புரண்டு, பாறைகளைப் புரட்டிப் போட்டுட்டு, உயிர் பொழச்சா போதும்னு ஊர்ந்து வெளியே வந்துட்டேன். அப்போ பாதிச்ச இந்த வலது காலும், இடுப்பு வலியும் இன்னும் சரியாகலை. இன்னும் நொண்டி நொண்டித்தான் நடக்குறேன். கொஞ்ச நேரம் குத்தவெச்சு உட்கார முடியாது. டாக்டருங்க நரம்பு பாதிச்சிருச்சுன்னு சொல்லிட்டாங்க.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 4 - காட்டுக்கு ஆயிரம் கண்கள்!

சோத்துக்கே வழியில்லாமதான் இப்ப சமையல் வேலை செய்ய வந்திருக்கேன். டோனாவுக்குள்ள போறவங்க தங்கத்தோட மேல திரும்புறது முக்கியம் இல்லை. கை காலுக்கு சேதாரமில்லாம உசுரோட வெளிய வந்தாலே போதும். இந்த மாதிரி நேரத்துல வீட்டுல காத்துக் கெடக்குற பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்கு மனசு எப்படி தவிக்கும்னு நெனைச்சுப் பாருங்க. மலைக்குப் போன ஆள், ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கு வந்துட்டா சரி... இல்லைன்னா ஒரு வாரம், பத்து நாளு பார்ப்பாங்க... அப்பவும் வரலைன்னா, கதை முடிஞ்சுருச்சுன்னு அவங்களே முடிவு செஞ்சுக்குவாங்க‌‌. திருடனுக்குத் தேள் கொட்டுன கதையா, அமைதியா கெடந்து புழுங்கவேண்டியதுதான். நல்லா விசாரிச்சுப் பார்த்தீங்கன்னா தேவாலா, நாடுகாணி, பொன்னூர் ஏரியாவுல பல ஆம்பளைங்க மாயமாகியிருப்பாங்க. சம்பந்தப்பட்ட குடும்பத்து ஆளுகளும் வெளியில சொன்னா வம்புன்னு, ‘வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு; வடநாட்டுல இருக்காரு’ன்னு சொல்லிச் சமாளிப்பாங்க. கடைசியா உடம்பைக்கூட பார்க்க முடியலைன்னு வீட்டுக்குள்ளேயே அழுது முழுங்கிக்குவாங்க...” என்றவரிடம் “அப்ப ஏன் வர்றீங்க, இது சட்டவிரோதம் இல்லையா, நீங்க பண்றது தப்புதானே?” என்று கேட்டோம்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 4 - காட்டுக்கு ஆயிரம் கண்கள்!

“நான் இல்லைன்னு சொல்லலை தம்பி. தப்புதான்... சட்டவிரோதம்தான். ஆனா, இந்த மலைக்கு நாங்க யாருமே விருப்பப்பட்டு வர்றதில்லை. டீ எஸ்டேட்ல சம்பளம் ரொம்பக் கம்மி. அதை வெச்சு குடும்பத்தை ஓட்ட முடியலை...” என்றவரிடம், “அப்போ டீ எஸ்டேட் தொழிலாளிகளெல்லாம் இப்படித்தான் வர்றாங்களா... அவங்க வேலைக்குப் போய் பொழப்பைப் பார்க்கலை... சட்டத்தையும் வனத்துறையையும்... ஏன் வனத்தையே மதிக்காம இப்படி வர்றதை நியாயப்படுத்தலாமா?” என்று கேட்டோம்... “தப்புதான் தம்பி... உருண்டு புரண்டு வாழ்க்கையில மேல வந்துட மாட்டோமான்னு பேராசையிலதான் வர்றாங்க” என்றவர் திடீரென்று கிசுகிசுப்பாக... “அவங்க வந்தா கேட்டுக்கிடாதீங்க... இதோ இந்த டோனாகூட அந்தப் பெரியவரோட சொந்த டோனா இல்லை. உண்மையில அதோட ஓனர் கேரளா பார்டர்ல இருக்காரு. பெரிய ஆளு அவர். காரு, பங்களா, எஸ்டேட் எல்லாம் அவருக்கு இருக்கு... பெரிய பெரிய அரசியல்வாதிங்க, அதிகாரிங்ககூட தொடர்பு இருக்கு. விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னு பெரியவரை ஓனர் மாதிரி வெச்சுருக்காங்க. எங்க எல்லாத்துக்கும் சாப்பாடு, பீடி, சிகரெட், சரக்கு எல்லாச் செலவையும் அந்த ஓனர்தான் பார்த்துக்குறார். எடுத்த தங்கத்தை மண்ணோட குண்டு மணி குறையாம ஓனர்கிட்ட கொடுத்துடுவாங்க. அதைச் சலிச்சு, பாதரசம் போட்டு மெஷின்ல அரைச்சு கிடைக்குற தங்கத்தை கேரளாவுல வித்துடுவாரு. கூலியைக் கைமேல கொடுத்துருவார் மனுஷன்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோட்டார் எடுக்கச் சென்றவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் வந்து சேர்ந்தனர்.

சுமார் 100 கிலோ எடையிருக்கும் அந்த மோட்டாரைத் தோளில் சுமந்து வந்தவரிடம், நான்கு பேர் சுற்றி நின்று கைத்தாங்கலாக வாங்கி இறக்கிவைத்தனர். கயிற்றை இழுத்து இழுவிசை மூலம் ஸ்டார்ட் ஆகும் மோட்டார் அது. மோட்டரை ஸ்டார்ட் செய்து நீரை வெளியேற்றினால் உள்ளே இறங்கி தங்கம் எடுக்கலாம் என்பதுதான் அவர்களின் திட்டம். அந்த மோட்டாரின் மண்ணெண்ணெய் பம்ப்பின் ஒரு பகுதியில் சிறிய கயிற்றை மூன்று நான்கு சுற்றுகள் சுழற்றி, வேகமாக இழுத்தார் பெரியவர். கடகடவென்று சத்தம் கேட்டதே தவிர ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் சில முறை முயன்றார்; ம்ஹூம்... மற்றவர்களும் ஆளாளுக்கு இழுத்துப் பார்த்துப் போராடி அலுத்துவிட்டார்கள். சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என முடிவுக்கு வந்தது அந்தக் குழு.

திடீரென்று தூரத்தில் மரக்கிளைகள் சடசடவென உடையும் சத்தம்... உற்றுப் பார்த்தபோது பெரிதாக அசைவுகள் மங்கலாகத் தென்பட்டன. “டேய் யாரும் டார்ச் லைட் அடிச்சுடாதீங்கடா... பெரியவங்க உள்ள வந்திருக்காங்க. சாப்டுட்டுப் போயிடுவாங்க, இதோ இந்த நெருப்பைச் சுத்தி வந்து உட்கார்ந்துக்கோங்க. நெருப்பைப் பார்த்தா பக்கம் நெருங்காதுங்க” என்று குளிர்காயவைத்திருந்த நெருப்பைக் காட்டினார் பெரியவர். யானைகளைத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்று புரிந்தது. நெருப்பைச் சுற்றிலும் அனைவரும் அமர்ந்தோம். சாப்பாடு பாத்திரங்களை சமையல்காரர் கொண்டுவந்து வைத்ததும், ஒருவர் காலி பாத்திரத்தை எடுத்து, கரண்டியால் சத்தமாக தட்ட ஆரம்பித்தார். தேக்கு மர இலைகளைக் கழுவி, அதில் சோற்றைப் போட்டு ஆளாளுக்குச் சாப்பிட ஆரம்பித்தோம். மணி நள்ளிரவு 12-ஐ தாண்டியிருந்தது. அவ்வப்போது பிளிறல் சத்தம் கேட்டு, சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 4 - காட்டுக்கு ஆயிரம் கண்கள்!

அப்போதுதான் பீடி பற்றவைத்தபடி சத்தமாகப் பேச ஆரம்பித்தார் அந்த இளைஞர். கிட்டத்தட்ட சண்டையிடுவதுபோல இருந்தது அவரது பேச்சு... “டிராவல்ஸ் பொழப்பு ஓடலைன்னு இங்க வந்தா, இங்கயும் எதுவும் கிடைக்காதுபோல... உங்களை நம்பி வந்ததுக்கு பேசாம லாரி ஓட்டப் போயிருக்கலாம். தேவையான ஆயுதத்தைக் வாங்கி வெக்காம, இங்க வந்து எங்க உசுரை வாங்குறீங்க. நாமதான் இன்னமும் அந்தக் காலத்துல மாதிரி சுத்தியும் உளியும் வெச்சு கையில் ரீப் அடிச்சுக்கிட்டு இருக்கோம். கர்நாடகா, கேரளாவுல இருந்து இன்ஜினீயருக்குப் படிச்ச பசங்க எல்லாம் டீசல் ஜெனரேட்டரை மலைக்குக் கொண்டுவந்து, டிரில்லிங் மெஷினை இறக்கி, கூடை கூடையா தங்கம் அடிச்சுட்டுப் போறாங்க. இன்னும் என்னென்னமோ புதுசு புதுசா கருவியெல்லாம் கொண்டுவந்து மலையைக் குடையறாங்க. இது எல்லாத்தையும்விட அதிசயம் என்னன்னா, மண்ணுக்குள்ள தங்கம் இருக்குற இடத்தைத் துல்லியமா காட்டுறதுக்கு ஒரு மெஷின் இருக்காம். அதைவெச்சு, சிலர் சொல்லி வெச்சு தங்கத்தை அடிக்குறாங்க...” என்றவரிடம் பெரியவர், “டேய் ஓலைக்கொட்டாய் மேல ஒண்ணுக்கு பெஞ்ச மாதிரி இல்லாத கதையெல்லாம் சொல்லி அனத்தாதடா. நமக்குத் தெரியாம இங்க என்னடா நடந்துடும்? அதெல்லாம் சும்மா..” என்றார்.

திடீரென்று எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தினார் அந்த இளைஞர்... “யோவ் பெருசு... உனக்குத்தான் ஒண்ணும் தெரியலை. உன்னையும் ஏமாத்திக்கிட்டு எங்களையும் ஏமாத்துற... நான் கேரளா, கர்நாடகான்னு ஊர் ஊராத் திரியுற டிரைவர். எல்லாத் தகவலும் எனக்கு அத்துப்படி. நான் சொல்றதை நம்பலைன்னா இங்க வாய்யா...” என்றவர் பெரியவரின் கையைப் பிடித்து விறுவிறுவென இழுத்துச் சென்றார்... அனைவரும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்து, “தம்பி அவரை விடுங்க, எதுவா இருந்தாலும் விடிஞ்சு பேசிக்கலாம்” என்று மன்றாடினார்கள். அவர் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை... வேறு வழியின்றி பின்தொடர்ந்தோம்.

(தோண்டுவோம்...)