Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 5

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமலை ரகசியம்

நெத்தியில டார்ச் லைட்டை கட்டிக்கிட்டு தீப்பெட்டி, மெழுகுவத்தி, தண்ணி பாட்டில், தோள்ல பையை மாட்டிக்கிட்டு உள்ள போவோம்‌.

ஆளுயரப் புற்கள் அடர்ந்து விரிந்த பரப்பின் முன்பு அனைவரும் நின்றோம். நள்ளிரவில், அந்தக் குளிரிலும் நடந்த வேகத்தில் அனைவருக்கும் வியர்த்திருந்தது. அந்த இளைஞர் மட்டும் புற்களுக்குள் ஊடுருவிச் சென்று ஒரு மூட்டையை எடுத்துவந்து கொட்டினார். உள்ளிருந்து டிரில்லிங் மெஷின், டிரில்லிங் பிட்டுகள் உள்ளிட்டவை விழுந்தன. அதிர்ச்சியுடன் பார்த்த பெரியவர், “சரிடா... இது எந்தக் கும்பலோடதுன்னு தெரியலை. அதை அப்படியே போட்டுட்டு வா... அடுத்த மாசம் நம்ம சிண்டிகேட்டுல பேசிடலாம்” என்றார்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 5

அப்போதும் விடாத அந்த இளைஞர், “இது மாதிரி நாமளும் செய்யலாம்ல?” என்றார். பதிலுக்குச் சிரிப்பை உதிர்த்து, நடந்தபடியே பேசினார் பெரியவர்... “டேய் போக்கத்தவனே... இப்ப நாம செய்யுற இந்தத் தொழிலே தப்பானது. நான் பொறந்ததுல இருந்து இந்தக் காட்டுக்கு வர்றேன். காய், கனி, தேன் தவிர்த்து காட்டுல இருந்து ஒரு பொருளை எடுத்துட்டுப் போறதும் தப்பு. நாம கொண்டு வர்ற ஒரு பொருளை காட்டுக்குள்ள போட்டுட்டு வர்றதும் தப்புன்னு எங்க மூப்பனுங்க சொல்லியிருக்காங்க. வானத்துல பறக்குற பறவையோட ஒரு சிறகு காட்டுல விழுந்தாலும், அது காட்டுக்குத்தான் சொந்தம். ஏதோ தலைக்கிரகம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டோம்... சுத்தி, உளியோட நிறுத்திக்குவோம். இப்போ டிரில்லிங் மெஷின் கேப்பீங்க... அடுத்து வெடிவெச்சு பாறையைத் தகர்க்கலாம்னு சொல்வீங்க... அடுத்ததா ஜே.சி.பி கொண்டுவந்து காட்டை அழிப்பீங்க. வேணாம்டா... இப்படியே போவோம். ஒருநாளு நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்... கைநிறையா தங்கக்கட்டி கிடைக்கும். அதோட இந்தத் தொழிலைவிட்டு ஒதுங்கிடலாம். புள்ளைகுட்டின்னு நிம்மதியா இருக்கலாம்...” என்று பெருமூச்சுவிட்டார். பெரியவரின் பேச்சுக்கு யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை.

பெரியவரின் டோனாவை வந்தடைந்தபோது பின்னிரவு 2 மணியாகியிருந்தது. எப்படியாவது மோட்டாரை ஸ்டார்ட் செய்துவிட வேண்டும் என்று அதை மீண்டும் மீண்டும் கயிற்றை இழுத்துப் பார்த்தார்கள். வேலைக்காகவில்லை... தூக்கம் கண்களைச் சொருக... அனைவரும் உறங்குவது என்று முடிவு செய்தார்கள். இதற்காகவே சுரங்கத்தின் அருகிலிருக்கும் பெரிய திட்டில் மண்ணைக் குடைந்து பக்கவாட்டில் 15 அடி நீளத்துக்கு குகை ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அந்த குகைக்குள் அனைவரும் குனிந்து நுழைந்து கோணிப்பைகளை விரித்தனர். குளிர் வாட்டியெடுக்க ஆரம்பித்தது. குகையின் முன் தீ மூட்டிவிட்டு அனைவரும் சுருண்டு படுத்தார்கள்.

பீடியைப் பற்றவைத்த பெரியவர், “டிரில்லிங் மெஷின் எப்படி வந்துச்சுன்னு தெரியலை. புதுசா ஆளுங்க வர்றாங்க போலிருக்கு. இதெல்லாம் நல்லதில்லை. முன்னெல்லாம் புது ஆளுங்க இங்கே வந்து தங்கம் எடுக்க முடியாது. புது ஆள் காட்டுக்குள்ள காலைவெச்சாலே மொத்த மலைக்கும் தகவல் போயிடும். வெட்டுக் குத்தே நடக்கும். இந்தத் தொழிலுக்கு புதுசா வரணும்னா பழைய ஆளுங்களோட சேர்ந்து நல்லா தொழில் பழகணும்... அவன் வேலை செய்யற வித்தையைப் பார்த்துட்டுத்தான், பல வருஷம் கழிச்சு அவனுக்கு சொந்தமா டோனா போட அனுமதியே கொடுப்பாங்க. எல்லா இடத்துலயும் டோனா போட முடியாது. நீரோட்டம் இல்லாத இடமா கண்டுபிடிக்கணும். ஒரு இடத்துல அஞ்சாறு அடிக்குக் குழி தோண்டும்போதே இதுல ரீப் இருக்குமா, வெத்துக்குழியான்னு தெரிஞ்சுடும்... எதிரம் கல் (தங்கப் படிமங்கள் இருக்கும் கல்) தென்பட்டா கண்டிப்பா ரீப் இருக்கும். தொடர்ந்து குழி தோண்டுவோம். வெறும் மண்வெட்டி, கடப்பாரையைவெச்சே நாப்பது அடி... அம்பது அடி ஆழத்துக்கு குழி தோண்டி மண்ணை வெளியே கொட்ட ரெண்டு மாசம் ஆவும். நடுவுல பாறை மாட்டுனா இன்னும் நாள் இழுக்கும். அதுக்கு அப்புறம் ஆளுக்கு ஒரு திசையில பக்கவாட்டுல குகையைக் குடைய ஆரம்பிப்போம். அதுலதான் பாறைக்கு நடுவுல தங்கரேகை ரீப் தட்டுப்படும். நல்ல ரீப் ஓட்டம் இருக்கிற பாறையை உளியைவெச்சு அடிக்க ஆரம்பிப்போம்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 5

நெத்தியில டார்ச் லைட்டை கட்டிக்கிட்டு தீப்பெட்டி, மெழுகுவத்தி, தண்ணி பாட்டில், தோள்ல பையை மாட்டிக்கிட்டு உள்ள போவோம்‌. கரெக்டா எதிரக்கல்லைக் கண்டுபிடிச்சு ரீப் அடிச்சுக்கிட்டே போகணும். அதுல தங்கரேகை ஓட்டம் தெரியும் கல்லை மட்டும் தனியா எடுத்து, பையில போட்டுக்குவோம். அது ஒரு போதை மாதிரி... தங்கக்கல்லு கிடைக்கக் கிடைக்க நைட்டு பகல் எதுவும் தெரியாது. பசி, தாகம் எடுக்காது. சூதாட்டத்துல பணம் சேரச் சேர அதுலயே விழுந்து கிடக்குற மாதிரி நாலைஞ்சு நாளு உள்ளே ரீப் அடிச்சுக்கிட்டே போன ஆளுங்ககூட இருக்காங்க. `அலிபாபாவும் நாப்பது திருடர்களும்’ கதையில வர்ற மாதிரி மூட்டை மூட்டையா தங்கக்கல்லு கிடைச்சு, ஆசை அதிகமாகி அதிகமாகி... அடியாழத்துக்குப் போய் பாறை குறுக்குல விழுந்து, குகையிலேயே மாட்டி மூச்சுப் பேச்சில்லாம இறந்தவங்களும் இருக்காங்க.

நானெல்லாம் ஓரளவுக்குப் போதும்னு மனநிறைவு வந்தவுடனேயே குகையைவிட்டு வெளியே வந்துடுவேன். வெளிக்காத்தை சுவாசிச்சு அப்பாடான்னு இருக்கும். அதுக்கப்புறம் அதுலருந்து தங்கத்தைப் பிரிக்குறது அவ்வளவு சுலபம் இல்லை. அந்தக் கல்லை சுத்தியில பொடிப் பொடியா உடைப்போம். உடைச்ச கல்லை டவுன்ல இருக்குற மண் அரைக்குற மில்லுல கொடுத்து, மாவு மாதிரி அரைச்சு சல்லடையில சலிச்சுப் பிரிப்போம். அப்புறம் வளையச் சட்டியில கொட்டி, தண்ணி கலந்து கொஞ்சம் கொஞ்சமா நேம்பணும். நாளு முழுக்க நேம்பிணா, கடைசியில மணலும் தங்கமும் அடியில சேரும். அதை கவனமா எடுத்து பாதரசம் ஊத்துவோம். பாதரசம் பட்டதும் தங்கம் தனியா பிரிஞ்சு வரும். அதை பாட்டில்ல அடைச்சு மார்வாடிகிட்ட கொடுப்போம். அந்த மார்வாடி, அது நொட்டை... இது நொள்ளைன்னு சொல்லி, ஏனோ தானோனு எடை பார்த்து கொஞ்சம் துட்டைக் கொடுப்பான். கையில காசு பாக்குறதுக்குள்ள உசுரு போயி, உசுரு வந்துரும். 25 கிலோ தங்க மண்ணை அரைச்சா, ஒரு குண்டு மணி தங்கம்தான் கிடைக்கும். இதுதான் நடைமுறை.

சில நேரத்துல சில கும்பல்களுக்கு அதிர்ஷ்டம் குகையை பிய்ச்சுக்கிட்டு கொட்டியிருக்கு. பெரிய அளவுல பொருள் (தங்கக்கட்டிகள்) மாட்டிக்கிட்டா, டோனாவுக்கு உள்ளேயே சேஃப்டி பண்ணிடுவாங்க. அதையெல்லாம் நாம நினைச்ச நேரத்துக்கு வெளியே கொண்டுபோக முடியாது. விஷயம் பரவி போட்டி பொறாமையில போட்டுக் கொடுத்துடுவாங்க. ரெண்டு பேரை அனுப்பி ஃபாரஸ்ட்ல நம்பிக்கையான ஆளுங்ககிட்ட ரகசியமா விவரத்தைச் சொல்லுவாங்க. ஃபாரஸ்ட் கார்டுகளை அனுப்பி, ‘பெரிய அதிகாரிகள் நாளைக்கு ரோந்துக்கு வரப் போறாங்க. யாருமே மலைக்கு போகக் கூடாது. மலையில இருக்குற நம்ம ஆளுங்களும் கீழ இறங்கிடணும். மீறி இருந்தா, கேஸ் போட்டு ஜெயில்ல தள்ளிடுவாங்க’னு எல்லா டோனாவுக்கும் தகவல் சொல்லிடுவாங்க. ரெண்டு நாளைக்கு மொத்தக் கும்பலும் வீடு அடங்கிக் கிடக்கும். அப்ப பார்த்து நைட்டோட நைட்டா உள்ளே இறங்கி, டோனாவுல இருந்து தங்கக்கட்டிகளை எடுத்துட்டு வந்து வண்டியில சேர்த்துடுவாங்க. இதுக்கு ஃபாரஸ்ட்காரங்களை நல்லா கவனிச்சிடணும். அதுக்குள்ள செக்போஸ்ட் போலீஸுக்கு தகவல் போயிடும்‌. அவங்களையும் கவனிச்சு செக்போஸ்ட்டை வண்டி தாண்டிட்டா நேரா கேரளாவுக்கு போயிடுவாங்க‌. அதுமட்டுமில்லை... அப்பப்ப ஃபாரஸ்ட், போலீஸ், ரெவின்யூ, ஈ.பி-ன்னு மாமூல் கொடுக்கணும்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 5

நம்ம ஆளுங்க கைவிட்டுட்டுப் போன ஒரு டோனாவுல, கேரளா குரூப் ஒண்ணு இறங்கி அடிச்சதுல ஆறு கிலோ கட்டித் தங்கம் கிடைச்சுது. விஷயம் பழைய ஓனருக்குத் தெரிஞ்சு பங்கு கேட்டு மலைக்கே வந்து பிரச்னை பண்ணிட்டான். ரெண்டு குரூப்புக்கும் காட்டுலயே அடிதடியாகி, வெட்டுக் குத்து வரைக்கும் போயிருச்சு. அப்புறம் போலீஸுக்குச் சொல்லி, அவங்க வந்து, கட்சிக்காரங்களையும் கூப்பிட்டு டீலிங் பேசினாங்க. இதுல அவங்களுக்கும் சேர்த்து பங்கு வாங்கிட்டு, கேஸ் எதுவும் போடாம சமாதானம் செஞ்சு வெச்சாங்க. தங்கம் கிடைக்கிறது பெரும்பாடுன்னா, அதைக் கொண்டுபோயி சேர்க்குறது அதைவிடப் பெரும்பாடு. இதைவிட பெரிய கொடுமையும் இருக்கு... ஒருமுறை கர்நாடகா கும்பலோட டோனாவுல பெரிய பாறை மாட்டிக்கிச்சு... கேரளாவுக்கு போயி ஜெலட்டின் குச்சி, வெடிமருந்து எல்லாம் வாங்கிட்டு வந்து உள்ள வெடிவெச்சு பாறையைப் பெயர்த்திருக்காங்க” என்று வெளியுலகம் அறிந்திராத சுரங்கத் தொழில் ரகசியங்களை கண்முன் காட்சியாக விவரித்தார்.

மணி அதிகாலை 4-ஐ கடந்திருந்தது. சிலர் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். நமக்கும் கண்கள் சொருக ஆரம்பிக்க... அப்படியே உறங்கிப்போனோம். ஆழ்ந்த உறக்கத்தில் திடீரெனக் கேட்டது அந்தப் பெரும் சத்தம். மரக்கிளைகள் உடைபடும் சத்தமும், பாத்திரங்கள் உருளும் சத்தமும், யானைகளின் பிளிறலும் அதிரவைத்தன... எல்லாம் கனவுபோல இருந்தபோது, நம்மை உலுக்கி எழுப்பினார்கள். பதறியடித்து எழுந்து, சுரங்கத்தின் வாசலுக்கு வந்து மெதுவாக எட்டிப் பார்த்தோம். மீண்டும் வந்திருந்தன யானைகள். சமையல் பாத்திரங்கள், அடுப்பு, மோட்டார், பைப் என அனைத்தையும் இரண்டு யானைகள் எட்டி உதைத்து துவம்சம் செய்துகொண்டிருந்தன... குட்டி ஒன்றை முன்னங்கால்களின் நடுவில் பாதுகாத்து வைத்திருந்த யானை ஒன்று, மரக்கிளையைப் பிடுங்கி தரையில் அடித்தது. அருகில் நின்ற மற்றொரு யானை இலந்தை மரத்தை உலுக்கிக்கொண்டிருந்தது. யானைகள் வால் மேல்நோக்கி முறுக்கியிருப்பதைக் கண்ட பெரியவர், “பெரியவங்க கோபமா இருக்காங்க... ஆனாலும், சுரங்கத்துக்குள்ள வர முடியாது... சத்தம் போடாம உள்ளே போயிடுங்க” என்றார். சுரங்கத்தின் வாசலில் ஆவேசமாகக் கேட்டது யானையின் பிளிறல்!

(தோண்டுவோம்...)