Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கமலை ரகசியம்

ஓர் ஆள் நுழையும் அளவுக்குச் சுரங்கத்தின் நுழைவுப் பகுதி இருந்தாலும், உள்ளே செல்லச் செல்ல சுரங்கம் குறுகிக்கொண்டே போனது

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6

ஓர் ஆள் நுழையும் அளவுக்குச் சுரங்கத்தின் நுழைவுப் பகுதி இருந்தாலும், உள்ளே செல்லச் செல்ல சுரங்கம் குறுகிக்கொண்டே போனது

Published:Updated:
தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கமலை ரகசியம்
தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6

பொழுது நன்றாகப் புலரும் வரை யானைகளின் பிளிறல் அடங்கவில்லை. பீதியுடன் அனைவரும் சத்தம் போடாமல் அமர்ந்திருந்தோம். ஒருவழியாக யானைகள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றபோது, காலை இளவெயில் மெதுவாக குகைக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. வெளியே வந்து, சிதறிக்கிடந்த கற்களை எடுத்துப்போட்டு அடுப்புக்கு மீண்டும் உயிரூட்டினார்கள். நசுங்கிக்கிடந்த பாத்திரத்தை, கம்பியால் நெம்பிச் சரிசெய்து கட்டன் சாயா போட்டுக்கொடுத்தார் சமையல்காரர்.

பெரிய பாறைமீது ஏறி செல்போனில் பேசிவிட்டு கீழே இறங்கிய பெரியவர், “இதுக்கு மேல இங்க இருக்குறதுல பிரயோஜனம் இல்லை. அடுப்பை அணைச்சுட்டுக் கெளம்பலாம்” என்றார். பிளாஸ்டிக் குடத்திலிருந்த தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார்கள். “ஒரு பொட்டு நெருப்பு இருந்தா போதும்... மொத்தக் காடும் பொசுங்கிடும்” என்றபடி கவனமாக சாம்பலைக் குச்சியால் கிளறிப் பார்த்தார் பெரியவர். மலை இறங்க ஆரம்பித்தோம். சிறிது நேர நடைக்குப் பிறகு கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றின் அருகில் நின்ற பெரியவர், “இது வெள்ளைக்காரன் காலத்து சுரங்கம். உள்ள போயி பார்த்துட்டு வரலாம் வாங்க” என்று நம்மைச் சுரங்கத்துக்குள் அழைத்துச் சென்றார்.

ஓர் ஆள் நுழையும் அளவுக்குச் சுரங்கத்தின் நுழைவுப் பகுதி இருந்தாலும், உள்ளே செல்லச் செல்ல சுரங்கம் குறுகிக்கொண்டே போனது. இன்னும் சில மீட்டர் தூரம் ஊர்ந்து சென்றபோது பல கிளைகளாக சுரங்கங்கள் பிரிந்து போக்குக் காட்டின. முன்னால் ஊர்ந்து சென்ற பெரியவர், “யாரும் வேற டோனாவுக்குள்ள நுழைஞ்சுடாதீங்க... என் பின்னாடியே வாங்க” என்றார். அந்த கும்மிருட்டில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்குமோ என்ற பயம் ஒருபக்கம்... விரிசல்விட்டிருக்கும் பாறைகள் இடிந்து விழுந்து மூடிவிடுமோ என்ற பயம் மற்றொரு பக்கம்... என திகிலைக் கிளப்பின. வெளியே போக வேண்டும் என்ற ஆழ் மன ஓட்டத்தில் இதயத்துடிப்பு அதிகமானது. லேசாக மூச்சு முட்டுவதுபோல இருந்தது. சில நிமிடங்களில் நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு விசாலமான இடத்தைக் கண்டதும்தான் பெருமூச்சு வந்தது. “வாங்க வெளியே போயிடலாம்” என்றார் பெரியவர். அதே வழியில் வெளியே வந்தபோது வெளிச்சத்தில் கண்கள் கூச... இயற்கையான காற்றைச் சுவாசித்தோம். உயிர் போய் திரும்ப வந்ததுபோலிருந்தது.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6

பேசிக்கொண்டே மலை இறங்கினோம். “தம்பிங்களுக்கு மூச்சுக்குழியைக் காட்டுனீங்களா?” என்று கேட்டார் சமையல்காரர். “அடடே அதை மறந்தே போயிட்டோம். நல்லவேளை ஞாபகப்படுத்துனியா சமையல்” என்று சிரித்த பெரியவர், “முக்கியமான ஒண்ணைக் காட்ட மறந்துட்டேன். கொஞ்ச தூரம் போனதும் காட்டுறேன்” என்றபோது அடுத்த என்னவோ என்று ஆர்வத்துடன் பீதியும் சேர்ந்துகொண்டது!

ஒரு மணி நேர நடைக்குப் பிறகு புல்வெளிகளுக்கு நடுவில் ஆங்காங்கே சதுர வடிவில் ஆள் இறங்கும் அளவில் குழிகள் இருந்தன.

அவற்றின் அருகே நம்மை வரச்சொல்லி, காட்டிய பெரியவர், “இதுதான் மூச்சுக்குழி. தங்கரேகை ஓட்டம் நல்லா இருக்கும் டோனாவுல, குறிப்பிட்ட தூரம் உள்ள போனதும் சுத்தமாக மூச்சுக் காத்தே கிடைக்காது. அஞ்சு நிமிஷம் உள்ள இருந்தாக்கூட மூச்சுத்திணறி சாக வேண்டியதுதான். தங்கமும் எடுக்கணும்; மூச்சுக் காத்தும் கிடைக்கணும்; அதுக்கான ஏற்பாடுதான் இந்த மூச்சுக்குழிங்க. டோனா போகிற போக்கை கணிச்சு சரியான தூரத்துல மூச்சுக்குழி அடிப்போம். டோனா போகுற ஆழத்தை எட்டும் வரைக்கும் குழி அடிக்கணும். அதுவே 40, 50 அடி வரை போகும். ஒரு ஆள் இறங்கி போகிற அளவு குழி தோண்டணும். கிட்டத்தட்ட ஒரு சின்ன கிணறு மாதிரிதான். இது வழியா காத்து உள்ள வரும். கீழ இறங்க, ஏற பக்கவாட்டுல படிக்கட்டு மாதிரி குடைஞ்சுவெப்போம். இதே மாதிரி நாலஞ்சு மூச்சுக்குழி போட்டுவெச்சா, ஆழத்துல மூச்சுக் காத்தும், கொஞ்சம் வெளிச்சமும் கிடைக்கும். டோனாவுல மண்ணு மூடி வழி அடைஞ்சு போனாக்கூட மூச்சுக்குழி கெடைச்சா தப்பிச்சுடலாம்” என்றார்.

தொடர்ந்து அவரே “வாங்க உள்ளே இறங்கலாம்... இந்த மூச்சுக்குழி பாதுகாப்பானதுதான்” என்றார். நமது புகைப்படக்காரரும் இன்னும் இரண்டு பேரும் உள்ளே இறங்கியவர்கள், சிறிது நேரத்தில் மாயமானார்கள். எங்கே என்று திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே திடீரென மற்றொரு மூச்சுக்குழி வழியாக மேலே ஏறி வந்தார்கள். ஏதோ மேஜிக் ஷோபோல இருக்கவே திகைத்துப்போனோம். இன்னும் எத்தனை ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறதோ இந்தத் தங்கமலை!

திடீரென்று ஏதோ தோன்றவே பெரியவரிடம், “சுரங்கம் தோண்டுறது... சுரங்கத்துக்குள்ள பல கிளைகளா விரிகிற சுரங்கங்கள்... அப்புறம் இந்த மூச்சுக்குழி... இதெல்லாம் எப்படி இவ்வளவு நுணுக்கமா செய்யறீங்க?” என்று கேட்டேன். காடே அதிரும்படி சிரித்தார் பெரியவர்... “நல்ல கேள்வி தம்பி...” என்றவர், சத்தமாக... “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்... பாயும் மீன்களில் படகினைக் கண்டான்... எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்... எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...” என்று நிறுத்தியவர், நம்மை உற்றுப் பார்த்து கேள்வி கேட்பதுபோல, “எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...” என்று ராகம் இழுத்துப் பாடியவர் மீண்டும் பலமாகச் சிரித்தார்... கூட்டத்திலிருந்தவர்கள், “பெருசுக்குப் பைத்தியம் பிடிச்சிக்குச்சு போலிருக்கு... கள்ளு குடிக்காமலேயே இன்னைக்கு ஏறிக்கிச்சு...” என்று நக்கலடித்தார்கள்.

“அவனுங்க கிடக்குறாங்க தம்பி... உங்க கேள்விக்கு பாட்டுலயே நான் பதில் சொல்லிட்டேன்... இருந்தாலும் விளக்கமா சொல்றேன்...” என்றபடி ஒரு புதர் மறைவுக்கு அழைத்துச் சென்றார். நீண்ட கழியால் அவர் செடி கொடிகளை விலக்கிக் காட்டியபோது ஒரு சிறு குழி இருந்தது. “இது காட்டுப்பன்னி நுழையுற குழி. இந்தக் காடு முழுக்க இப்படி ஆயிரக்கணக்குல குழிகளை காட்டுப் பன்னிங்க தோண்டி வெச்சுருக்கும். இரை விலங்கு துரத்துனா வேகமா ஓடுற காட்டுப்பன்னிங்க சடார்னு இந்தக் குழிக்குள்ள நுழைஞ்சுடுங்க. வெளியே பார்க்கத்தான் இது சாதாரணக் குழி... உள்ளே பல கிலோமீட்டருக்கு, பல கிளைகளாக, சுரங்கம் கணக்காகக் குழி நீளும். இந்த ஆயிரக்கணக்கான குழிகளும் ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையவை. உள்ளேயே ஓடி ரொம்ப தூரத்துல வேற குழி வழியா வெளியே வந்துரும் காட்டுப்பன்னி. இதுதான் தம்பி... எங்க சுரங்கம், கிளைச் சுரங்கம், மூச்சுக்குழி ரகசியம்” என்றபோது ஆச்சர்யமாக இருந்தது.

தொடர்ந்தவர், “இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சுக்கிட்டாலும் புலி, சிறுத்தைகிட்ட இருந்துதான் இந்தப் பன்னிங்க தப்பிக்க முடியும். ஆனா, செந்நாய்க் கூட்டம் இருக்குதே... அதுங்க வேற மாதிரி வேட்டையாடும்... வேட்டைன்னு முடிவு பண்ணிட்டா முன்கூட்டியே பத்து செந்நாய்கள் கரெக்டா குழி வாசல்கள்ல நின்னுக்கும். காட்டுப்பன்னிக் கூட்டத்தை அஞ்சாறு செந்நாய்ங்க துரத்த, வேகமா ஓடுற பன்னிங்க குழிக்குள்ள புகுந்து ரொம்ப தூரம் போயி மறுவாசலுக்கு வெளியே வரும்... மண்ணுலயே மோப்பத்தப் பிடிச்சு... கரெக்டா குழி வாசல்ல காத்திருக்குற செந்நாய்ங்க ‘வாடி வா...’னு லபக்குன்னு பன்னியோட கழுத்தை கவ்விடுங்க...” என்று காட்டு விலங்கின் வேட்டை ரகசியங்களை விவரித்தார்.

வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. அனைவருமே பசிக் களைப்பில் சோர்ந்துபோனோம். வழியில் காட்டு நெல்லி மரத்தடியில் நெல்லிக்கனிகள் சிதறிக்கிடந்தன. அவற்றைக் கடித்தபடி மரத்தடியில் சற்று இளைப்பாறினோம். “வாங்க... பொழுது சாயறதுக்குள்ள ஊருக்குப் போயிடலாம்” என்றபடி அனைவரையும் முடுக்கிவிட்டார் பெரியவர். “முப்பது வருஷத்துக்கு முன்னாடி கீழ தெரியுற பள்ளத்தாக்கு எல்லாம் காடா கெடந்துச்சு. இப்ப எஸ்டேட், பில்டிங்குனு ஆகிப்போச்சு. நம்ம பாடுதான் அப்படியே இருக்கு. யாரோ தங்க பஸ்பம் திங்குறதுக்கும், நகைகளை ஒய்யாரமா அணியறதுக்கும் நாங்க நிதமும் இந்த மண்ணைத் திங்குறோம். வீட்ல பேரக் குழந்தைகளை யாராச்சும் தங்கமேனு கொஞ்சினாக்கூட மனசு சுருக்குங்கும்” என்று பெரியவர் புலம்பிக்கொண்டிருக்கும்போதே அடிவாரத்துக்கு வந்திருந்தோம். பெரியவர் நம் கைகளைப் பற்றிக்கொண்டே, “பத்திரமா போயிட்டு வாங்க... முந்தா நாளு நீங்க சமையல்காரரைப் பார்த்து, `இந்தத் தொழிலு சட்ட விரோதம் இல்லையா... அப்புறம் ஏன் பண்றீங்க?’னு கேள்வி கேட்டதா சொன்னாங்க... தப்புதான் தம்பி... சீக்கிரமே இதை விட்டொழிச்சுடுறோம்” என்றபடி விடை கொடுத்தார்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6
தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6
தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 6

“அவ்வளவு சீக்கிரம் இவங்க எப்படி விட்டுற முடியும்... அது இவங்க கையில இல்லையே?” என்று பீடிகை போட்டார் அன்று மாலை நாம் சந்தித்த அந்த ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி. தொடர்ந்து அவரே, “இவங்க அப்பாவிங்க. இவங்க வீட்டுப் பக்கம் போய்ப் பாருங்க... மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒழுங்கான கூரைகூட கெடையாது. பொம்பளையாளுங்க காதுல, கழுத்துல குண்டுமணி தங்கம் இருக்காது. அழுக்கு தாலிக்கயிறு... அதுவும் மலையேறுன புருஷன் திரும்ப வந்தாத்தான் உத்தரவாதம். இவங்களே தொழிலைவிட்டாலும் இதுல லாபம் பார்த்து கொழுத்த ஓனருங்களும், மாமூல்ல கொழிக்கிற அதிகாரிகளும் சும்மா விட மாட்டாங்க. அதுலயும் கேரளாவுல இருக்குற நகைக்கடைக்காரங்களுக்கு இவ்வளவு கம்மி விலையில உலகத்துல எங்க போனாலும் தங்கம் கிடைக்காது. சுங்க வரி கிடையாது, ஜி.எஸ்.டி கிடையாது. வனத்துறையில இருந்து ஈ.பி வரைக்கும் எல்லாருக்கும் மாமூல் போகுது. அதுக்கு ஒரே உதாரணம்... தேவாலா, பந்தலூர் டவுன்ல வெளிப்படையா ஓடிக்கிட்டிருக்குற தங்க மண் அரைக்குற மெஷின்கள். வீட்டுக்கு கரன்ட் கனெக்‌ஷன் கேட்டா வருஷக்கணக்குல அலையவிடுறவங்க, இதுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்குறாங்க? அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவங்களுக்கு தேவை இங்க இருக்குற பத்தாயிரம் ஓட்டு. அதனாலதான் எல்லாக் கட்சிகளும் இந்த சட்டவிரோத தொழிலுக்கு ‘வாழ்வாதாரம்’னு சாயம் பூசி அரசியல் பண்றாங்க. தெரிஞ்சோ தெரியாமலோ சுரங்கத்துக்குள்ள சிக்கிப் போராடுற இந்த அப்பாவி மக்களுக்கு மாற்றுத் தொழிலை அரசாங்கமே ஏற்பாடு செஞ்சு கொடுத்தாத்தான் இந்த மலையையும் மக்களையும் காப்பாத்த முடியும்” என்றார்.

டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்... நன்றாக இருட்டிவிட்டிருந்தது. தூரத்தில் தெரிந்த மலைத்தொடரில் புள்ளி புள்ளிகளாகத் தென்படத் தொடங்கின தீப்பந்த வெளிச்சப்புள்ளிகள்.

(நிறைந்தது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism