Published:Updated:

`முதலில் கொன்றோம்; பின் புற்று உருவானது!'- 17 ஆண்டுகளாக பாம்புக்கு வீடு கொடுத்த தஞ்சைக் குடும்பம்

பாம்பு வசிக்க வேண்டும் என்பதற்காக வீட்டைக் காலி செய்து விட்டு 17 ஆண்டுகளாக வேறு ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்து வருகின்றனர்.

வீட்டிற்குள் புற்று
வீட்டிற்குள் புற்று

பாம்பிற்குப் பால் வார்ப்போம், பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் எனச் சொல்வதுண்டு. ஆனால், நல்ல பாம்பு குடியிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பம் தாங்கள் குடியிருந்த வீட்டைக் காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடியேறி வசித்து வருகின்றனர். இச்சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

பாம்பு இருப்பதாகச்  சொல்லப்படும் வீடு
பாம்பு இருப்பதாகச் சொல்லப்படும் வீடு

தஞ்சாவூர் அருகே உள்ள பசுபதிகோயில் மணல் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வசந்தி மற்றும் அவரது சகோதரர் வெங்கட்ராஜன். இவர்களுக்கு அதே பகுதியில் பூர்வீகச் சொத்தான ஓட்டு வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டின் உள்பகுதியில் பெரிய அளவில் பாம்புப் புற்று என்று சொல்லப்படும் கறையான் புற்று இருக்கிறது. இந்தப் புற்றுக்கு நல்ல பாம்பு ஒன்று வந்து செல்கிறது. ஆனால், அந்த வீட்டில் வசிக்காமல் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வசந்தி என்பவரிடம் பேசினோம். ``இந்த வீட்டில் எங்க தாத்தா பாட்டியுடன் நாங்கள் குடியிருந்தோம். வீட்டின் உத்தரத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. எங்க பெற்றோருக்கு என்னடா குடியிருக்கிற வீட்டில் நல்ல பாம்பு வருகிறதே, வீட்டில் பிள்ளைகள் வேறு இருக்கிறது. யாரையாவது கடித்து விட்டால் என்ன செய்வது என பயந்தனர். அத்துடன் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்றுவிட்டனர். அதன் பிறகு நாங்கள் எந்த பயமும் இல்லாமல் வீட்டில் இருந்தோம்.

வீட்டிற்குள் புற்று
வீட்டிற்குள் புற்று

சரியாக ஒரு வருடம் கழித்து வீட்டிற்குள்ளேயே புற்று ஒன்று உருவாகி நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே இருந்தது. எங்க அம்மா விஜயகுமாரி அருகில் இருந்த பெரியவர்களிடம் இது குறித்து கேட்டார். அப்போது அவர்கள் நீங்கள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ள இடத்தில், ஏகெனவே பாம்புப் புற்று ஒன்று இருந்ததுடன் பாம்பும் வசித்து வந்தது எனக் கூறினர்.

இதற்கிடையில் மீண்டும் வீட்டிற்குள் அவ்வப்போது ஒரு நல்ல பாம்பு தென்பட ஆரம்பித்தது. ஆனால், யாரையும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் வந்து சென்றுகொண்டிருந்தது. சரி இனி மேல் நாம் பாம்பிற்கு இடையூறாக இருக்க வேண்டாம். பாம்பு நிம்மதியாக இந்த வீட்டில் இருக்கட்டும் எனக் கூறி அம்மாவும், அப்பாவும் முடிவு செய்தனர். அத்துடன் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு அருகிலேயே இருந்த எங்களுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

பின்னர் புற்றிற்கு மஞ்சள் தெளித்து சாமியாக வணங்க ஆரம்பித்தோம். பலரும் பாம்பிற்காக வீட்டை சும்மா போட்டு வைத்திருக்கிறீர்கள். நீங்க என்ன முட்டாளா எனக் கேட்பார்கள். புற்றை இடித்துவிட்டு வீட்டை வாடகைக்கு விடுங்கள் என்றும் ஆலோசனையும் கூறினர். தாத்தா, பாட்டி காலத்திலேயே இந்த வீட்டை பாம்பிற்காக விட்டு விட்டோம். எங்க தாத்தா சொல்வார் நாமதான் பாம்பு இருந்த இடத்தில் இருக்கிறோம். நாம இருக்கும் இடத்திற்கு அது வரவில்லை. அதுவும் ஒரு உயிர்தானே. ஏற்கெனவே அவசரப்பட்டு ஒரு பாம்பைக் கொன்று விட்டோம். இனி அது போல் எதுவும் செய்யக் கூடாது என்றார்.

அந்த வீட்டிலிருந்து வெளியேறி 17 வருஷம் ஆகிவிட்டது. அதனை பாம்பு வீடு என்றே எல்லோரும் சொல்வார்கள். பலர் புற்று இருந்தாலும் பரவாயில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுங்கள் எனக் கேட்பார்கள். இல்லை வேண்டாம் இது பாம்பிற்கான வீடு. அடிக்கடி பாம்பு வெளியே தென்படவில்லை என்றாலும் உள்ளே பாம்பு வந்து செல்வதை அக்கம் பக்கத்தினரே பலமுறை பார்த்திருக்கின்றனர்.

வீட்டிற்குள் உள்ள புற்று
வீட்டிற்குள் உள்ள புற்று

அதனால் வாடகைக்கு விடும் எண்ணம் இல்லை என்று கூறிவிடுவோம். எங்க வீட்டு பெரியவர்கள் செய்ததை நாங்களும் தொடர்கிறோம். பாம்பிற்குப் பால் வார்ப்போம் என்று சொல்வார்கள். நாங்கள் வீட்டையும் கொடுத்து பாலும் வார்க்கிறோம். இதில் எங்க அனைவருக்கும் ஒரு உயிரைக் காக்கின்ற நிம்மதி கிடைப்பதுடன் எங்க குழந்தைகளுடன் நாங்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்'' என்றார்.