Published:Updated:

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

தேர் விபத்து
பிரீமியம் ஸ்டோரி
தேர் விபத்து

- காலத்துக்கும் ஆறாத வடக்குத் தெரு சோகம்...

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

- காலத்துக்கும் ஆறாத வடக்குத் தெரு சோகம்...

Published:Updated:
தேர் விபத்து
பிரீமியம் ஸ்டோரி
தேர் விபத்து

கருகிப்போய் அநாதையாக சாலையோரம் நிற்கிறது 93 ஆண்டுகளாகச் சீரும் சிறப்புமாக ஓடிய அந்தத் தேர். தேரை வடம்பிடித்து இழுத்தவர்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். ஓயாத கதறல்களால் களிமேடு கிராமமே மயானக் காடாகக் காட்சியளிக்கிறது. தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி துள்ளத் துடிக்க இறந்த 11 பேரில், மூன்று பேர் சிறுவர்கள் என்ற செய்தி தமிழகத்தையே கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியிருக்கிறது!

தஞ்சாவூர் அருகே இருக்கிறது களிமேடு கிராமம். இங்குள்ள திருநாவுக்கரசர் கோயிலின் 94-வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஏப்ரல் 26-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த, சுமார் 15 அடி உயரமுடைய தேரை 50-க்கும் மேற்பட்டோர் இழுத்துச் சென்றனர். அதிகாலை 3 மணியளவில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தேர்ச் சக்கரம் சாலை ஓரத்திலுள்ள பள்ளத்தில் இறங்க... தேரின் மேல் பகுதி அந்த வழியாகச் சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தேரில் பாய்ந்த மின்சாரம், தேரை இழுத்துச் சென்றவர்களையும் தாக்க 11 பேர் துள்ளத்துடிக்க இறந்துபோனார்கள்.

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!
11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

தமிழகத்தையே கலங்கவைத்திருக்கும் இந்த சோக விபத்து பற்றிப் பேசும் அதிகாரிகள் தரப்பு, “விழா நடத்துவதற்கு கிராம மக்கள் உரிய அனுமதி பெறவில்லை. உயர் மின்அழுத்த மின்சாரத்தை நிறுத்தவில்லை. முன்னெச்சரிக்கைக்கான எந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்யவில்லை. அதுவே இந்த விபத்துக்குக் காரணமாகிவிட்டது” என்கிறார்கள். ஊர் மக்களோ, ‘‘93 வருஷமா தேர்த்திருவிழாவை நடத்திவருகிறோம். ஒரு சிறு அசம்பாவிதம்கூட ஏற்பட்டதில்லை. குடியிருப்புப் பகுதியை ஒட்டி உயர் மின்அழுத்த மின் கம்பங்கள் அமைந்துள்ளன. சாலையின் நடுப்பகுதியில் மின்கம்பி தொங்கியபடி செல்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாகச் சாலை அமைக்கும்போது, பழைய தார் ரோட்டைப் பெயர்த்து எடுக்காமல், அதன் மேலேயே ரோட்டைப் போட்டுவிட்டார்கள். அதனால் சாலையின் உயரம் அதிகரித்துவிட்டது. சாலையின் இரு பக்கமும் ஏற்பட்ட பள்ளத்தையும் மூடவில்லை. இந்தத் தவறுதான் எங்கள் ஊரையே இன்று சுடுகாடாக்கிவிட்டது’’ என்று அழுது புலம்பியபடியே குற்றம்சாட்டுகின்றனர்.

விபத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவரான வசந்தா, கண்களில் மிரட்சியும் சோகமுமாக நம்மிடம் பேசினார்... “சாமிக்கு உடைக்குறதுக்காக வீட்டுல இருந்த தேங்காயை எடுத்துக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரே கூக்குரல்... வாசலுக்கு வந்து பார்த்தேன். ‘கிட்ட வராதீங்க... எல்லாரும் எட்டிப் போங்க’னு தேர் மேல இருந்த பெரியவர் அலறினார். கொஞ்ச நேரத்துல அவரும் தூக்கி வீசப்பட்டார். தேர் மேல இருந்தவங்க எல்லாம் ஷாக் அடிச்சு தூரம் தூரமா போய் விழுந்தாங்க. அப்படியே தேர் தீப்பிடிச்சு திகுதிகுனு எரிய ஆரம்பிச்சுது... தேருக்கு மரியாதை செய்யறதுக்காக ரோட்டுல தண்ணி ஊத்தியிருந்ததால அதுல மின்சாரம் பாய்ஞ்சும் பலர் காயமடைஞ்சாங்க. விடிஞ்ச பிறகு எனக்குத் தெரிஞ்சவங்க பலரையும் பிணமாத்தான் பார்க்க முடிஞ்சது” என்றவர், அடக்க முடியாமல் விம்மி அழுதார்!

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

இந்த விபத்தில் மொத்தம் 11 பேர் இறந்தது விடிந்த பிறகுதான் தெரியவந்தது. ஒரே வீட்டில் தந்தை, மகன் இறந்துவிட்டார்கள். அதிலும் வடக்குத் தெரு சோகம் சொல்லித் தீராதது... இந்தத் தெருவில் வீட்டுக்கு ஒருவர் என வரிசையாக ஏழு வீடுகளில் ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கண்முன்னே ரத்த உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் கதறல்கள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கின்றன. 13 வயது மகன் சந்தோஷின் சடலத்துக்கு அருகே அமர்ந்து, “டேய் எழுந்திருடா... அம்மாவுக்கு உன்னைவிட்டா யாரு இருக்கா...” என்று கதறிக்கொண்டிருந்தார் கட்டடக் கூலித் தொழிலாளி ரேணுகா... ‘‘ஒரு வருஷத்துக்கு முந்திதான் கிட்னி ஃபெயிலியராகி என் வீட்டுக்காரர் இறந்துபோனாரு. கூலி வேலைக்குப் போய், ரொம்ப கஷ்ட ஜீவனத்துக்கு நடுவுலயும் என் மகனைப் படிக்கவெச்சேன். ‘நான் நல்லா படிச்சு உன்னைக் காப்பாத்துவேன்மா’னு சொல்லிக்கிட்டே இருப்பான். ‘தோ... தேர் பார்த்துட்டு வர்றேன்’னு சொல்லிட்டுப் போனவனை, இப்படிப் பொணமாப் பார்ப்பேன்னு நினைக்கலையே...” என்றபடி தரையில் புரண்டு அழுதார்.

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!
11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

இறந்துபோன 14 வயது ராஜ்குமார் என்ற சிறுவனின் அக்கா சவ்கர்ணிகா, ‘‘தம்பி, அப்பாவை விட்டுட்டு ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டியே... டேய் கண்ணைத் திறந்து பாருடா... அப்பா தனியா இருக்காருடா...’’ என்று மாலைகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும் தம்பியைக் கட்டிப்பிடித்துக் கதறுகிற சத்தம் களிமேட்டையே கலங்கடிக்கிறது. தன் 13 வயது மகன் பரணியைப் பறிகொடுத்த வேதனையிலிருந்து மீள முடியாமல் திக் பிரமை பிடித்த நிலையில் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார் தந்தை சுதாகர்.

விபத்தில் மகனைப் பறிகொடுத்துவிட்டு மாரிலும் முகத்திலும் அடித்து அழுதுகொண்டிருந்தார் முதியவர் கலியமூர்த்தி... “ராணுவத்துல இருந்தவன் ரெண்டு வருஷம் முன்னாடிதான் ஊருக்கு வந்தான். `சொந்த ஊரைவிட்டுப் போக மாட்டேன்பா’ன்னு சொன்னவன், குடும்பத்துல நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னாடி நின்னான். இப்ப அநியாயமா போயிட்டானே... ஸ்கூல்ல படிக்குற அவனோட ரெண்டு பசங்களுக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன், அவங்களை எப்படிக் கரை சேர்ப்பேன்?” என்று தேம்பித் தேம்பி அழுதார்.

11 பேரை காவு வாங்கிய தஞ்சாவூர் தேர் விபத்து... வரிசையாக ஏழு வீடுகள்... பறிபோன ஏழு உயிர்கள்!

தந்தை அன்பழகனையும், உடன்பிறந்த அண்ணன் ராகவனையும் இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாதவன், பேச முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தில் முனகிக்கொண்டிருந்தார்... “என்னை தூரமா தள்ளிவிட்டுட்டு, அப்பாவைக் காப்பாத்த ஓடுனியே அண்ணா... இப்ப ரெண்டு பேரும் போயிட்டீங்களே... தனியா நான் மட்டும் என்ன செய்வேன்?” என்ற அவரது புலம்பல் நீண்ட நேரம் நிற்கவே இல்லை.

உயிரிழந்த சாமிநாதனின் மகன் ராம் என்ற இளைஞர், ‘‘எங்க அப்பாவுக்கு புது வீடு கட்டி வாழணும்கிறது வாழ்நாள் கனவு. மூணு வருஷத்துக்கு முந்திதான் வீடு கட்டத் தொடங்கி, பணப் பிரச்னையால இப்பத்தான் வீட்டைக் கட்டி முடிச்சோம். அடுத்த மாசம் பால் காய்ச்சலாம்னு சந்தோஷமா இருந்தோம்... ஆனா, அந்த வீட்டுல வாழுறதுக்கு அவருக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு...” என்றபடி தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

வசந்தா
வசந்தா

கணவரையும் மகனையும் காப்பாற்றிய பிறகும் இன்னோர் உயிரைக் காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கண்ணீர் வடிக்கிறார் சுகன்யா... ‘‘என் புருஷனும் பையனும் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஷாக் அடிச்ச சத்தம் கேட்டவுடனேயே பதறியடிச்சு முன்னாடி ஓடினேன்... முதல்ல என் மகனைத் தூக்குனப்ப, எனக்கும் ஷாக் அடிச்சது. உடனே பக்கத்துல இருந்த கட்டையை எடுத்து, என் மகனை இழுத்துப் போட்டுட்டேன். கொஞ்ச தூரத்துல தவிச்சுக்கிட்டிருந்த என் புருஷனையும் கட்டையாலயே அடிச்சு தள்ளிவிட்டுட்டேன். அப்போ இன்னொரு பையனும் காப்பாத்தச் சொல்லி கை நீட்டினப்ப கரன்ட் ஷாக் என்னையும் தூக்கி அடிச்சிடுச்சு... அந்த ஒரு உசுரை என்னால காப்பாத்த முடியலையே...” என்று விம்மினார்!

சுகன்யா
சுகன்யா

“கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்காணிப்பதில் அரசுத் துறைகள் காட்டும் மெத்தனமே இது போன்ற விபத்துகளுக்குக் காரணம்” என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. அரசு மட்டுமல்ல... மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism