கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இவர் தஞ்சாவூரின் ‘குள’சாமி!

அழகிகுளம்
பிரீமியம் ஸ்டோரி
News
அழகிகுளம்

புதர்களை வெட்டின பிறகு குளத்தின் முழு அளவும் வெளியே தெரிஞ்சுது. அப்புறம் மண்வெட்டியால தோண்டி, குப்பைகளை அள்ள ஆரம்பிச்சாரு.

தண்ணீர் இல்லாமல் நாம் வாழமுடியாதுதான். ஆனாலும்கூட, வீட்டுக்கு அருகே குப்பைகளாலும் சாக்கடையாலும் குளமோ, கால்வாயோ அழியும் நிலையில் இருந்தால் எத்தனை பேர் அவற்றை மீட்க முன்வருவோம்? செல்லபெருமாள் அதைத் தன் வாழ்நாள் தவமாகச் செய்கிறார்.

செல்லபெருமாள் அரசியல்வாதியோ, பெரும் செல்வந்தரோ, ஓய்வுபெற்ற அதிகாரியோ இல்லை. தன் குடும்பச் செலவுக்காக வீட்டிலேயே மெஸ் வைத்திருக்கும் எளிய மனிதர்.

தஞ்சை நகரின் மையப்பகுதியில் கவாஸ்கார தெருவில் இருக்கிறது அழகிகுளம். இது சோழர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்தது. காவிரியின் கிளை நதியான புது ஆற்றிலிருந்து இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வந்திருக்கிறது. இந்தப் பகுதி மக்களுக்கு இதுவே குடிநீர் ஆதாரமாக இருந்ததால் குளத்தைச் சுத்தமாகப் பராமரித்திருக்கிறார்கள். வீடுகளுக்கே குழாயில் தண்ணீர் வந்த பிறகு, குளிக்கும், துணி துவைக்கும் இடமாகக் குளம் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாகப் பராமரிப்பு குறைந்து, எல்லோரும் அதைக் குப்பை கொட்டும் இடமாக மாற்றினர். கடைசியில் குளம் இருந்த சுவடே தெரியாமல்போய்விட்டது. இந்தக் குளத்தைச் செல்லபெருமாள் மீட்டிருக்கிறார்.

இப்படியிருந்த புதரிலிருந்து...
இப்படியிருந்த புதரிலிருந்து...
அழகிகுளம் மீட்கப்பட்டது..!
அழகிகுளம் மீட்கப்பட்டது..!

செல்லபெருமாள் பற்றிப் பேசும்போதே நெகிழ்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ‘‘ரெண்டு தலைமுறையா குளத்துல குப்பை கொட்டி, அது குப்பைமேடாவே மாறியிருந்தது. ஆனால், தான் குளித்து மகிழ்ந்த குளம் இப்படி ஆகிருச்சேன்னு கவலைப்பட்ட செல்லபெருமாள், பலருடன் பேசி அதைத் தூர் வார முயன்றார். எங்க ஏரியா மக்களே, ‘குப்பைமேட்டுக்குள்ள குளத்தைத் தேடப்போறியா’ன்னு கிண்டல் அடிச்சாங்க. ஆனால், அவர் உறுதியா இருந்தாரு. அவர் நடத்தற மெஸ்ஸை மனைவி கோடீஸ்வரியைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, தனியாளாக வந்து முதலில் கருவேல மரங்களை வெட்டினார். யாரும் உதவிக்கு வரலே. ஆனால் கவலைப்படாம அவர் வேலை செஞ்சார்.

புதர்களை வெட்டின பிறகு குளத்தின் முழு அளவும் வெளியே தெரிஞ்சுது. அப்புறம் மண்வெட்டியால தோண்டி, குப்பைகளை அள்ள ஆரம்பிச்சாரு. அப்பவும் யாரும் அவர் செய்வதைப் பெருசா எடுத்துக்கல. அவர் தனியா போராடுறதைப் பார்த்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஆறுமுகம்ங்கறவர் உதவிக்குப் போனாரு. ரெண்டு பேரும் சேர்ந்து குப்பைகளை அகற்றினாங்க. இவங்க கஷ்டப்படறதைப் பார்த்துட்டு ஒருத்தர் ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். அதன்மூலம் குப்பைகளை அகற்றியதும் குளத்தின் அடிப்பகுதி தென்பட்டது. ஆச்சர்யப்பட்ட மக்கள் அதன்பின் உதவி செய்ய வந்தாங்க. குப்பைகளை அள்ளி, கரை பலமாக்கப்பட்டுச்சு’’ என்கிறார்கள் மக்கள்.

மக்களின் ஒத்துழைப்பால் குளத்தை மீட்டாயிற்று... ஆனால் குளத்துக்குத் தண்ணீர்? ‘இது வெட்டி வேலைன்னு அப்பவே சொன்னோம்ல’ என மீண்டும் ஏளனக் குரல்கள். காரணம், சாலையிலிருந்து மழைநீர் செல்ல முடியாதபடி குளத்தின் கரை மேடாக இருந்தது.

செல்லபெருமாள் சோர்ந்துவிடவில்லை. சாலையிலிருந்து குளத்துக்குப் பள்ளம் எடுத்து, மழை நீர் வழிய ஏற்பாடு செய்தார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. அடுத்த மழையின்போது குளத்தில் ஏழு அடி ஆழத்துக்குத் தண்ணீர் நிரம்பியது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் தண்ணீரைப் பார்த்த மக்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி பிறந்தது.

இப்படியிருந்த புதரிலிருந்து...
இப்படியிருந்த புதரிலிருந்து...
 கருணாசாமி கோயில் குளம்  மீட்கப்பட்டது!
கருணாசாமி கோயில் குளம் மீட்கப்பட்டது!

இது தற்காலிக ஏற்பாடுதான். குளத்துக்கு எப்போதும் நீர் வர என்ன செய்வது? ``அழகிகுளத்தின் நிரந்தர நீர்வழிப்பாதையைத் தேடினேன். பாதிக்கும் மேலான இடங்கள்ல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்துச்சு. அதை ஒட்டியே பிளாஸ்டிக் குழாய்கள் பதிச்சு தற்காலிக நீர்வழிப்பாதை அமைச்சேன். கால் வைக்கவே முடியாத அளவுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடமா மாறியிருந்த இடங்களைச் சுத்தம் செய்து குழாய்களை அமைச்சோம். இப்போது ஒன்பதரை அடிக்கு தண்ணீர் இருக்கும் அளவுக்குச் செய்து விட்டோம். இனி மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாகத் தண்ணீர் வர வழி செய்ய வேண்டும்” என்கிறார் செல்லபெருமாள்.

அழகிகுளம் மீட்கப்பட்டதை அறிந்த தஞ்சாவூர் அருள்நெறி அறக்கட்டளையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், கரந்தை பகுதியில் 1,400 ஆண்டுப் பழைமையான கருணாசாமி கோயில் குளத்தைச் சுத்தம் செய்து கொடுக்குமாறு செல்லபெருமாளிடம் கேட்டுள்ளார். அந்தக் குளத்திலும் செல்லபெருமாளின் முயற்சியால் இப்போது நீர் ததும்பி நிற்கிறது.

சுரங்க நீர்ப்பாதையில் செல்லபெருமாள்
சுரங்க நீர்ப்பாதையில் செல்லபெருமாள்

இதுபற்றிப் பேசிய செல்லபெருமாள், ‘‘அந்தப் பகுதி மக்கள் நான் போனதுமே, ‘உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 125 மீட்டர் பிளாஸ்டிக் குழாய் அமைத்துத் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செஞ்சும் எந்தப் பலனுமில்லை. நீ என்ன செய்துட முடியும்’னு கேட்டாங்க. மக்களிடம் நம்பிக்கையோ ஒத்துழைப்போ இல்லாதபோதும் நான் வேலையைத் தொடங்கினேன். அதைப் பார்த்த ஜோதிபிரகாஷ் என்பவர், ‘எதுக்கு இப்படிக் கஷ்டப்படுறீங்க’ன்னு ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். அதுக்குப் பிறகு நிறைய பேர் உதவிகளைச் செய்யத் தொடங்கினாங்க. சிலர் உடல் உழைப்பைக் கொடுத்தாங்க. காடா இருந்த குளம் சுத்தமாச்சு.

அந்தக் குளத்துக்கு வடவாற்றிலிருந்து சுரங்கப்பாதை மூலம் தண்ணீர் வந்ததற்கான கண், குளத்தின் தென்பகுதியில் இருந்ததைக் கண்டுபிடிச்சோம். அந்தக் கண் வழியா பார்த்ததுல, 32 அடி தூரத்துக்குச் சுரங்க நீர்ப்பாதை தெரிஞ்சுது. அதே திசையில நீர் வரும் வழியைத் தேடினேன். ஒரு இடத்தில் பெரிய மலைவேம்பு மரம் இருந்துச்சு. அது நின்ற இடம் நீர்வழிப்பாதையாக இருக்கும் என்ற சந்தேகம் வந்துச்சு. அந்த இடத்தில் குழி எடுத்துப் பார்த்தப்ப, அங்கே நீர்வழிப்பாதை இருந்தது. அதே நேர்க்கோட்டிலேயே அடுத்தடுத்து இருந்த மலைவேம்பு மரங்களை வைத்தே நீர்வழிச் சுரங்கப்பாதையைக் கண்டுபிடிச்சோம். சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சுடுதட்டு ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்த அதன் உறுதியை நினைச்சா இப்போதும் பிரமிப்பா இருக்கு. அதுக்குள்ள அடைச்சிருந்த களிமண்ணைச் சுத்தம் செய்யப் பல மாதங்கள் ஆச்சு.

சில இடங்களில் நீர்வழிப்பாதைக்கு மேலே பாதாளச் சாக்கடைக் குழாய் போனது. மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கிட்ட உதவி கேட்டேன். அவர் பாதாளச் சாக்கடைக் குழாய்களை மாற்றிக் கொடுத்தார். அதன்பிறகு, வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நீர்வழிச் சுரங்கப்பாதையைச் சிதைக்காமல், அதற்குள் பிவிசி குழாய் பொருத்தினோம். கோவையைச் சேர்ந்த குமார் என்பவர் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் குழாய் வாங்கிக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட நீர்வழிச் சுரங்கப்பாதை சீரானது. 20 வருடங்களுக்குப் பிறகு கருணாசாமி குளத்தில் வடவாற்றிலிருந்து தண்ணீர் வந்து நிரம்பியது. ஆரம்பத்துல ‘இவன் என்ன லூசா’ன்னு திட்டுனவங்க எல்லாம் என் கையைப் பிடித்து நன்றி சொன்னாங்க” என்று நெகிழ்கிறார் செல்லபெருமாள்.

இவரின் பணிகளைப் பார்த்துத் தஞ்சை மாநகராட்சி நிர்வாகமும் ‘நம் ஊர் நம் குளம்’ திட்டத்தில் 21 குளங்களை மீட்கத் திட்டமிட்டுவருகிறது. நீரின்றி அமையாது உலகு... செல்லபெருமாள்களால் அமைகின்றது நீர்!