Published:Updated:

சரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்!

சரஸ்வதி மகால் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
சரஸ்வதி மகால் நூலகம்

மீட்கப்படுமா பொக்கிஷம்?

தஞ்சாவூரிலிருக்கும் சரித்திரப் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், களவாடப்பட்ட அறிவுப் பொக்கிஷங்கள் குறித்தெல்லாம் சமூக ஆர்வலர்கள் கவலை பொங்கப் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஜூ.வி 29.7.2020 தேதியிட்ட இதழில், ‘களவுபோன பொக்கிஷங்கள்... திகைக்கவைக்கும் முறைகேடுகள்... அழிவை நோக்கிச் செல்கிறதா சரஸ்வதி மகால் நூலகம்?’ என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதியிருந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்றைக்குக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில், உலகில் உயிர்ப்புடன் இருக்கும் அதி முக்கியமான நூலகங்களில் சரஸ்வதி மகால் நூலகமும் ஒன்று. அதனால்தான், மிகுந்த பொருட்செலவில் தமிழக அரசே அதைப் பராமரித்துவருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஆய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என இங்கே குவிகிறார்கள். இத்தகைய சூழலில், அதன் சீர்கேடுகள் குறித்த நம் கட்டுரையைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இந்த விஷயத்தில் தன் பார்வையைத் தீவிரமாகவே பதித்திருக்கிறார். இதையடுத்து, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

கோவிந்த ராவ்
கோவிந்த ராவ்

அது பற்றி கோவிந்த ராவிடம் கேட்டோம். ‘‘தற்போதுள்ள புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கையேடாகப் பராமரிக்கப்பட்டு வந்த பழைய இன்டெக்ஸுடன் ஒப்பிட்டுப் பார்க்கவிருக்கிறோம். ‘ஏற்கெனவே கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல்களோடு ஒப்பிடலாம்’ என சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் சொன்னதை நான் ஏற்கவில்லை. புத்தகங்கள் காணாமல் போயிருந்தால், இந்தக் கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். தவறு நடந்திருப்பது உறுதியானால், உரிய விசாரணை நடத்தப்பட்டு, அந்தந்தக் காலகட்டங்களில் பொறுப்பிலிருந்த ஊழியர்கள் அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

‘இங்கு பணியாற்றிக்கொண்டே சுதர்சன், வீரராகவன் இருவரும் முழுநேர முனைவர் பட்டம் பெற்றார்கள்’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடம் இது தொடர்பாக அதிகாரபூர்வ விளக்கம் கேட்டிருக்கிறேன். விரைவில் அது கிடைத்துவிடும். விதிகளை மீறி அவர்கள் பட்டம் பெற்றது உறுதியானால், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

சரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்!

பழைமையான தமிழ் அச்சு நூல் காணாமல்போயிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இது குறித்த விசாரணை அறிக்கையை, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கேட்டிருக்கிறேன். அது கைக்கு வந்ததும், ஜெர்மனியிலிருக்கும் இந்திய தூதருக்குக் கடிதம் எழுதி அந்தப் புத்தகத்தை மீட்டுக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் கட்டாயம் மேற்கொள்ளப்படும்’’ என்றவர், ‘‘சரஸ்வதி மகால் என்பது நம்முடைய பாரம்பர்யப் பொக்கிஷம். அதைக் காப்பாற்றுவதற்காக பாரபட்சமற்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்’’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

சரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்!

இந்தநிலையில் முன்னாள் நூலகர் பெருமாள், வழக்கறிஞர் மூலமாக ஜூ.வி-க்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘பெருமாள் விடுமுறையில் இருந்தபோதுதான் பழைமையான தமிழ் அச்சு நூல் களவுபோனது. என்றாலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பெருமாள், சுதர்சன் ஆகியோரின் ஊதிய உயர்வு இரண்டாண்டு களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு பெருமாள் ஓய்வும் பெற்றுவிட்டார். அப்படியிருக்க, இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடைய புகழுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல இந்தச் செய்தி வேண்டுமென்றே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘குறிப்பிட்ட அந்தப் புத்தகம் களவுபோனதாகக் கூறப்படும் 7.10.2005 அன்று, பெருமாள் பணியில் இருந்திருக்கிறார். அரசாங்க உத்தரவுப்படி சரஸ்வதி மகால் நூலகம், மியூசியம் இரண்டும் மாலை 5:30 மணிக்குப் பூட்டி சீல் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அன்றைய தினம், இரவு 7:30 மணி வரை மியூசியம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. ஜெர்மனிக்காரர்கள் அப்போதுதான் அங்கே புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் புத்தகம் திருடப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நாள்களில்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது’ என்று நூலக ஊழியர்கள் சிலரே காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்துதான் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்து விசாரித்துவருகிறார்கள்.

பெருமாள் , சுதர்சன் , வீரராகவன்
பெருமாள் , சுதர்சன் , வீரராகவன்

அதேசமயம், ‘இந்த விஷயத்தில் காவல்துறையின் விசாரணையை மேலும் விரைவுபடுத்த வேண்டும்’ என்று தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர் ‘குடவாயில்’ பாலசுப்ரமணியன், உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கே தொடர்ந்துவிட்டார். சமூக ஆர்வலர் ‘சமத்துவன்’ என்கிற ராமதாஸ் மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பிவருகிறார்.

நடந்திருப்பது மாபெரும் பொக்கிஷக் கொள்ளை. ஆனால், இதுவரை துறைரீதியான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. புத்தகம் மீட்கப்பட்டாக வேண்டும். அதேபோல, இந்த மாபெரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், துணைபோனவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியம். அதுவரையில், அக்கறையுள்ள பொதுமக்கள் குரல் எழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள். ஜூ.வி-யும் அதற்குத் துணை நிற்கும்!