2021-ம் ஆண்டில், சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் ஸ்டாலின் கையால் பெற்றவர் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார். ஆனால், லோக்கல் தி.மு.க-வினரோ ‘அரசின் நற்பெயரைக் கெடுக்கிறார்’, `எதிர்க்கட்சித் தலைவர்களோடு உறவாடுகிறார்’ என்றெல்லாம் ஆணையர் மீது புகார் வாசிக்கின்றனர்!

இது குறித்துப் பேசுகிற சமூக ஆர்வலர் ரஜினி கணேசன், ‘‘நெருக்கடியான சூழலில், தஞ்சை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றவர் சரவணக்குமார். அவர் வந்த பிறகு பாதாளச் சாக்கடை அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை வசதி போன்ற பணிகள் துரிதமாக நடந்தன. பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட சுமார் 100 கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் நடத்த அவர் முயன்றார். கடை பெற்றுத்தருவதாக பலரிடமும் உறுதி கொடுத்திருந்ததால், ஓப்பன் டெண்டர் முறை வேண்டாம் என்று தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், ஆணையாளரை நேரடியாகவே எதிர்த்தார். அந்த எதிர்ப்பை மீறி ஏலத்தை வெற்றிகரமாக நடத்தினார் ஆணையாளர். இதேபோல நகரின் மையப்பகுதியில் தி.மு.க பிரமுகர் வசம் இருந்த சுதர்சன சபா உள்ளிட்ட 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டெடுத்ததிலும் அவருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதனால் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து தொல்லையும் நெருக்கடியும் கொடுத்து வேலைகளை முடக்குவதுடன், அவரை மாற்றவும் முயல்கிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ-விடம் பேசியபோது, ‘‘தஞ்சாவூர் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் ஓப்பன் டெண்டர் நடத்தாமல், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கடைகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஏனெனில், பல மடங்கு அதிக தொகைக்கு கடை எடுத்தவர்கள் இன்று வாடகை செலுத்த முடியாமல் திணறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டப் பணியாக எடுத்துச் செய்து முடிக்காமல், ஒரே நேரத்தில் மொத்த ஊரையும் இடித்துப்போட்டு வைத்திருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர். அரசின்மீது மக்களுக்கு இருந்துவரும் நன்மதிப்பைக் கெடுப்பதாக சரவணக்குமாரின் செயல்பாடுகள் இருக்கின்றன.



அடுத்து, முதல்வரே புறக்கணித்த ஆளுநரின் தேநீர் விருந்தில் சரவணக்குமார் கலந்துகொண்டார். அண்ணாமலை, டி.டி.வி.தினகரன் போன்றவர்களுடனும் நெருக்கம் காட்டுகிறார். இவையெல்லாம் அவர்மீது எங்களுக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது. மற்றபடி அவருடைய பணிகளில் யாரும் குறுக்கிடுவதில்லை. ஆளுங்கட்சினரின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு அவர் செயல்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் விருப்பம்’’ என்றார்.

இறுதியாக ஆணையர் சரவணக்குமாரிடம் பேசினோம். ‘‘நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, மக்களுக்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய ஆலோசனை வழங்கி உற்சாகப்படுத்திவருகிறார். அதன் அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறேன்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.