மாநகராட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டேபோகிறது தமிழக அரசு. ஆனால், பெயரில் இருக்கும் முன்னேற்றம் அடிப்படை வசதிகளில் இருப்பதில்லை. அதிலும் தஞ்சாவூரின் நிலை படுமோசம். இதில் இன்னோர் அநீதியாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்க்காமலேயே அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அ.ம.மு.க-வின் தஞ்சை மத்திய ஒன்றியச் செயலாளர் செந்தில்வேலன் இதுகுறித்து நம்மிடம் பேசினார்.

‘‘தஞ்சாவூர் நகராட்சியை 2014–ம் ஆண்டில் மாநகராட்சியாக அறிவித்தார் ஜெயலலிதா. தஞ்சையையொட்டி உள்ள வல்லம், மாரியம்மன் கோயில், நாஞ்சிக்கோட்டை, கடகடப்பை, விளார் உள்ளிட்ட 14 ஊராட்சிகளும் மாநகராட்சி எல்லைக்குள் இணைக்கப்பட்டன. அப்போது தஞ்சாவூர் நகராட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த சாவித்திரி கோபால், மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மாநகராட்சிக்கு இணையாக உயர்த்தப் பட்டன. மாநகராட்சி மக்களுக்குக் கிடைக்கும் குடிநீர், கழிவுநீர் வடிகால், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட வசதிகள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் மக்கள் அதைச் செலுத்துகின்றனர். ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் புதியதாக இணைக்கப்பட்ட கிராமங்களில் எந்த வளர்ச்சிப்பணியும் நடைபெற வில்லை. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடக்கும் பணிகளும் பழைய நகராட்சிப் பகுதியில்தான் நடைபெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிரிவாக்கப் பகுதிகளைச் சேர்த்து வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலையையும் அரசு செய்யவில்லை. பழைய 51 வார்டுகளை மட்டும் மாநகராட்சிப் பகுதியாக எடுத்துக்கொண்டு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அப்படி நடந்தால், 14 ஊராட்சிகளிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் எந்த வேலையும் நடக்காது. எனவே, புதிய பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் அல்லது இதுவரை கூடுதலாக வசூல் செய்த வரிப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்குவோம்’’ என்றார்.
தி.மு.க-வின் மாவட்ட இளைஞரணி அமைப்பா ளரான சண்.ராமநாதன், ‘‘மாநகராட்சியுடன் இணைத்த பகுதிகளைச் சேர்த்து இந்த ஐந்து ஆண்டுகளில் வார்டு மறுவரையறை செய்திருக்க முடியும். ஆனால், இதில் அ.தி.மு.க அரசுக்குத் துளியும் விருப்பமில்லை. மாநகராட்சியாகிவிட்டதாகக் கூறி 100 சதவிகிதம் வரை வரியை உயர்த்தி வசூல் செய்யும் அரசு, உள்ளாட்சித் தேர்தலையும் அதன் அடிப்படையில்தானே நடத்தவேண்டும்?’’ என்று கேள்வியெழுப்பினார்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி, ‘‘வார்டு எல்லைகள் மறுவரையறை செய்யாததால் பழைய முறைப்படியே தேர்தல் நடக்கவிருக்கிறது. இணைக்கப்பட்ட 14 ஊராட்சிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலிக்கவில்லை. அந்தந்த ஊராட்சி நிர்வாகம்தான் வரி வசூல் செய்கிறது. எங்கள் நிர்வாகத்தின்கீழ் அந்தக் கிராமங்கள் வராததால், வரி உயர்த்தப்பட்டது எங்களுக்குத் தெரியாது’’ என்றார்.
உள்ளாட்சித் துறை நிர்வாகம் படுமோசமாக இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.