Published:Updated:

கடைக்கோடி கிராமம்: குழிதோண்டி ஊத்துத்தண்ணியைத்தான் குடிக்குறோம்!

பெத்தனாட்சி வயல்
பிரீமியம் ஸ்டோரி
பெத்தனாட்சி வயல்

- இருளில் மூழ்கிக்கிடக்கும் பெத்தனாட்சி வயல்!

கடைக்கோடி கிராமம்: குழிதோண்டி ஊத்துத்தண்ணியைத்தான் குடிக்குறோம்!

- இருளில் மூழ்கிக்கிடக்கும் பெத்தனாட்சி வயல்!

Published:Updated:
பெத்தனாட்சி வயல்
பிரீமியம் ஸ்டோரி
பெத்தனாட்சி வயல்

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதி பேராவூரணி. இந்தக் கடைமடையிலும் கடைசியில் இருக்கிறது பெத்தனாட்சி வயல் கிராமம். குடிநீர், மின்விளக்கு தொடங்கி குடியிருக்கும் வீடு வரை எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அந்தக் கிராம மக்கள் அவதிப்படுவதாக நமக்கு வந்த தகவலை அடுத்து பெத்தனாட்சி வயல் கிராமத்துக்கு நேரில் சென்றோம்.

பனை மரங்கள், கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டுக்கு நடுவே பனையோலைகளால் வேயப்பட்ட சிறு சிறு குடிசைகள் நம்மை வரவேற்றன. இரண்டடி உயரம் தாண்டாத அந்த குடிசை வாசலில் குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குடிசைகளில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களைத் தவிர வேறெதுவும் இல்லை. பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் உடல் மெலிந்தே காணப்படுகிறார்கள்.

கடைக்கோடி கிராமம்: குழிதோண்டி ஊத்துத்தண்ணியைத்தான் குடிக்குறோம்!

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினரான குமார் என்ற இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தோம்... “எங்க கிராமத்துல 900 பேர் வசிக்குறோம். அம்புலியாறுங்கிற காட்டாறை ஒட்டித்தான் எங்க வீடுங்க இருக்கு. மூணு தலைமுறைக்கு மேல இங்கதான் வாழ்றோம். விவசாயக் கூலி வேலை, கடல்ல கையால மீன் புடிக்கறது மட்டும்தான் எங்க வாழ்வாதாரம். இங்க இருக்குற 150 குடும்பங்கள்ல 80 குடும்பங்களுக்கு எங்க அப்பாரு காலத்துலேயே பட்டா கொடுத்துட்டாங்க. மீதிப் பேருக்கு பட்டா தர்றதா சொல்லி பல வருஷம் ஆச்சு. இன்னும் கைக்கு வரலை. கருணாநிதி முதல்வராக இருந்தப்போ பத்து பேருக்கு மட்டும் தொகுப்பு வீடு கட்டி கொடுத்தாங்க. அதுவும் இப்ப இடிஞ்சு விழுற நிலைமையில இருக்கு.

எங்க ஊருக்குனு தனியா நீர்த்தேக்கத் தொட்டி இல்லை. மூணு கிலோமீட்டர் தொலைவுல இருக்குற ஊமத்த நாடு கிராமத்திலிருந்துதான் குழாய் வழியா எங்களுக்குத் தண்ணி வருது. 150 வீடுகளுக்கு ஏழு குடிநீர் பைப் மட்டுமே இருக்கு. அதுலயும் சரியா தண்ணி வராது. ரேஷன் கடைக்கு நாலு கிலோமீட்டர் தூரம் நடக்கணும். அஞ்சாவது வரைக்கும்தான் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்குமேல படிக்கணும்னா பல கிலோமீட்டர் தூரம் நடக்கணும்னு குழந்தைங்க அஞ்சாப்போட படிப்பை நிறுத்திட்டு கூலி வேலைக்குப் போயிடுறாங்க. பக்கத்துல இருக்குற டவுனுக்கு போகவே அஞ்சு கிலோமீட்டர் நடந்துபோய்த்தான் பஸ் பிடிக்கணும்.

கடைக்கோடி கிராமம்: குழிதோண்டி ஊத்துத்தண்ணியைத்தான் குடிக்குறோம்!

ஊருக்குனு போட்டிருக்கற பொது லைட் எரிஞ்சதே இல்லை. சாயங்காலத்துக்கு மேல ஊரே கும்மிருட்டா கிடக்குது. ஒத்த லைட்டாச்சும் போட்டுக் கொடுங்கனு கேட்டோம்; யாரும் செய்யலை. இங்கிருக்கற 420 ஓட்டுகளுக்காக தேர்தல் நேரத்துல மட்டும் எட்டிப் பார்க்குற அரசியல்வாதிகள் இனிக்க இனிக்கப் பேசிட்டுப் போயிடுறாங்க. எங்க கோரிக்கைகள் மட்டும் அப்படியே இருக்கு. இப்ப இருக்குற ரெண்டு கிலோமீட்டர் ரோட்டையே பல வருஷமா போராடித்தான் வாங்கியிருக்கோம். பாக்கியிருக்குற மண் ரோடு குண்டும் குழியுமா கெடக்கு. அரசோட பார்வை எங்கமேல பட்டு என்னைக்கு எங்களுக்கு முழுமையான அடிப்படை வசதி கிடைக்குமோன்னு தெரியலை...’’ என்றார் கவலையுடன்!

இதே ஊரைச் சேர்ந்த அமுதா என்பவரோ, “ரெண்டு மினி டேங்க் வெச்சுருக்காங்க. அதுல வர்ற தண்ணி உப்பு கரிக்குது. அந்தத் தண்ணியில சோறு வடிச்சா மஞ்ச கலர்ல மாறிடுது. ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து போயி காட்டாறு கரையில குழி தோண்டி ஊத்து தண்ணியைத்தான் எடுத்து வந்து குடிக்குறோம். கோடைக்காலத்துல அதுக்கும் வழியில்லை. மழைக்காலத்துல காட்டாறு தண்ணி குடிசைக்குள்ளாற வந்துடும். எங்க கிராமத்தை டவுனோட இணைக்குற சின்னப் பாலம் ஒவ்வொரு வருஷமும் மழைக்கு உடைஞ்சு ஊரைத் துண்டிச்சுடுது. அந்தப் பாலத்தை நல்லபடியா கட்டிக் கொடுங்கனு கேட்குறோம்... ஒண்ணும் நடக்கலை. ரேஷன் கடையில 600 மில்லிதான் மண்ணெண்ணெய் தர்றாங்க. அதுல பாதி நாள் மட்டும் வீட்டுல விளக்கு எரிப்போம். மற்ற நாள்கள்ல இருட்டுலதான் எங்க வாழ்க்கை ஓடுது. காட்டுக்குள்ள இருக்குறதால பாம்பு, நட்டுவாக்காலின்னு விஷப்பூச்சிங்க கடிச்சுடும். ஆம்புலன்ஸ் வர தாமதமாகி பலர் இறந்தும் போயிருக்காங்க. ஆஸ்பத்திரி வசதி இல்லாததால பிரசவம் எல்லாம் வீட்டுலயேதான் நடக்குது. கையெடுத்து கும்பிடுறோம்... எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு கொடுக்கச் சொல்லுங்க!” என்றார் கண்ணீர்மல்க!

அமுதா
அமுதா
குமார்
குமார்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு இவற்றை எடுத்துச் சென்றோம். அனைத்தையும் கேட்டுக்கொண்டவர், “உடனடியாக குடிநீர் வசதி செய்து தருகிறேன். விரைவில் அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பி, ஊரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருகிறேன்” என்றார் உறுதியாக.

பெத்தனாட்சி வயல் கிராமத்தின் கனவு கைகூடுமா என்று பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism