Published:Updated:

பணி ஓய்வுக்கு ஊரே திரண்டு சீர் கொடுத்தாங்க! - சத்துணவு டீச்சர் விஜயா

விஜயா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயா

ஊருல பலர், நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு என்கிட்ட பேசாம இருந்தாங்க. அப்புறம் என் நெலமையை புரிஞ்சுக் கிட்டாங்க

செய்யும் வேலையில் அர்ப்பணிப்பும் சுற்றி யுள்ள மனிதர்களிடம் அன்பும் காட்டுபவர்கள், எந்த ஊருக்கு, என்ன வேலைக்குச் சென்றாலும் கொண்டாடப்படுவார்கள். அப்படித்தான் வேங்கராயன் குடிக்காடு கிராம மக்களால் கொண்டாடப்படுகிறார் விஜயா. தன் 26 வயதில் இந்த ஊர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாள ராகப் பணியில் சேர்ந்த விஜயாவை, இந்த வருடம் அவரது பணி ஓய்வின்போது சீர்வரிசை, ஊர்வலம், பத்து விரல்களுக்கும் மோதிரம் என அன்பால் வழியனுப்பி வைத் திருக்கிறார்கள் ஊர்மக்கள். ஏன் என்ற கேள்விக்கான பதில்தான் இந்தக் கட்டுரை.

தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வேங்கராயன் குடிக்காடு கிராமம். கிராமப் பள்ளியில் சத்துணவு அமைப் பாளராகப் பணிபுரிந்த விஜயா, மீதமாகும் உணவை ஏழைக் குழந்தைகளுக்கு இரவு உணவாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்த ஊர்ப் பெண்களிடம் சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, சுய உதவிக்குழு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அம்மக்களின் சுக, துக்கங் களில் உடன் நின்று வீட்டில் ஒருவராக இருந் திருக்கிறார். பணி ஓய்வுக்குப் பிறகும் விஜயாவுக்கும் ஊருக்குமான பந்தம் அப்படியே தொடர்கிறது.

பணி ஓய்வுக்கு ஊரே திரண்டு சீர் கொடுத்தாங்க! - சத்துணவு டீச்சர் விஜயா

‘`தஞ்சாவூர்லதான் எங்க வீடு. என்னோட 26 வயசுல இந்த ஊருப் பள்ளியில வேலை கிடைச்சது. எங்கூடப் பொறந்தவங்க ரெண்டு அக்கா, ரெண்டு தம்பி. அப்பாவுக்கு வயசாகிட்டதால ரெண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் பண்ணின கடன் வீட்டை அழுத்துச்சு. தம்பிங்களும் சின்னப் பசங்க. வீட்டுல சம்பாத்தியம் உள்ள ஒரே ஆளா இருந்த நான், எல்லா சுமைகளையும் ஏத்துக் கிட்டேன்’’ என்று ஆரம்பித்தார் விஜயா.

‘`வேலையைப் பொறுத்தவரைக்கும், பள்ளிக்கூடத்துல பிள்ளைகளுக்குச் சத்தான சாப்பாடு போடணும்னு, தினமும் வர்றப்ப தஞ்சாவூர்ல இருந்து நல்ல காய்கறிகள் வாங்கி, தலையில வெச்சு தூக்கிட்டு வருவேன். சமையல் முடிஞ்சதும் நிறை குறை எல்லாம் பார்த்துட்டுதான் பிள்ளைகளுக்குப் போடுவேன். சமையல் ஆயாவும் அக்கறையோட சமைப்பாங்க. வேலை செஞ்ச 33 வருஷத்துல, ஒரு நாள் கூட நான் வீட்டுச் சாப்பாடு எடுத்துட்டுப் போனதில்ல. எம்புள்ளைங்க சாப்பிடுறதுதான் எனக்கும். அவங்ககூடதான் உக்காந்து சாப்பிடுவேன். மீதமாகுற சாப்பாட்டை, கஷ்டப்படுற வீட்டுப் புள்ளைகளுக்கு ராத்திரிக்குக் கொடுத்துவிடுவேன்’’ என்றவர், ஊர்ப் பெண்களிடம் தான் ஏற்படுத்திக் கொண்ட உறவு பற்றிக் கூறினார்.

‘`பள்ளிக்கூடம், வேலைனு நிக்காம, ஊருல இருக்குற குடும்பத் தலைவிகளுக்கு எல்லாம், சேமிப்போட அவசியத்தை எடுத்துச் சொல்லி நானே எல்லாருக்கும் அவங்கவங்க பேர்ல போஸ்ட் ஆபீஸ்ல கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்தேன். அதேபோல, ஆயுள் காப்பீடு போட்டா நமக்கு ஏதாச்சும் ஒண்ணுனாலும் நம்ம புள்ளைகளுக்கு அந்தப் பணம் கைகொடுக்கும்னு எடுத்துச் சொல்லி பலரையும் போட வேச்சேன். அப்படித்தான் நான் சொல்லி, ஜோதினு ஒருத்தவங்க பாலிசி போட்டிருந்தாங்க. ஆனா, அவங்களால நடுவுல பணம் கட்ட முடியாம போச்சு. இந்த நிலையில திடீர்னு ஜோதிக்கு உடம்பு சரியில்லாமப் போக, நான் உடனடியா என் கையில இருந்த பணத்தைப் போட்டு பாலிசியைக் கட்டிட்டேன். கொஞ்ச நாள்ல ஜோதி இறந்துட்டாங்க. அப்போ இன்ஷூரன்ஸ் மூலமா கிடைச்ச பணம், அவங்க மகள் அபிராமி கல்யாணத்தை நடத்திவெச்சுச்சு. அபிராமி என் கையப் பிடிச்சுக்கிட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டது இப்பவும் என் கண்ணுலேயே நிக்குது.

அந்தச் சம்பவத்தைப் பார்த்துட்டு, ஊருல இன்னும் பலர் தாங்களாவே இன்ஷூரன்ஸ் போட முன் வந்தாங்க, அவங்களுக்கு நான் உதவினேன். அதேபோல, ஊருல இருக்குற பெண்களை எல்லாம் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிச்சு சேரவெச்சேன். அதுல குறைஞ்ச வட்டியில கிடைச்ச பணம், அவங்களுக்கு ரொம்பவே கைகொடுத்துச்சு’’ என்று அக்கறையுடன் பேசுபவர், வேலை, மக்கள் சேவை என்று ஓடியதில் திருமணத்தைத் தவிர்த்திருக்கிறார்.

‘` ‘வயசு ஏறிக்கிட்டே போகுது விஜயா...’னு அதட்டின ஊருக்காரங்க, அவங்களே எனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாங்க. எனக்கு அதுல விருப்பம் இல்ல. இன்னொரு பக்கம், தன் வீட்டுக்காரர் விட்டுட்டுப் போயிட்டதால என் பராமரிப்புல இருந்த என்னோட அக்கா, அவங்க குழந்தைகளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் என்கிட்ட இருந்துச்சி. என் தம்பிங்க, அக்கா பொண்ணுகெல்லாம் நானே முன்ன நின்னு கல்யாணம் பண்ணிவெச்சேன். என் வாழ்க்கையைப் பத்தி நெனைக்கக்கூட நேரமில்ல.

ஊருல பலர், நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு என்கிட்ட பேசாம இருந்தாங்க. அப்புறம் என் நெலமையை புரிஞ்சுக் கிட்டாங்க. 33 வருஷங்கள் ஓடுனதே தெரியல. இந்த வருஷம்தான் பணி ஓய்வு’’ எனும் விஜயாவை, பணி ஓய்வு நிகழ்வில் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளனர் ஊர் மக்கள்.

‘`என்னோட பணி ஓய்வு நிகழ்ச்சிக்காக, ஊர்க்காரங்களையெல்லாம் பத்திரிகை வெச்சு அழைச்சேன். ஆனா அவங்க, ‘அதுக்கு முன்னால, வில்லாயி அம்மன் கோயில்ல நாங்க உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துறோம், உங்க குடும்பத்தை கூட்டிக்கிட்டு வாங்க’னு சொன்னாங்க. சரி, சின்னதா ஏதாவது செஞ்சிருப்பாங்கன்னு போய் நின்னா, பந்தல், விருந்துனு தடபுடல் பண்ணிட்டாங்க. ‘எங்க ஊரோட தாய்’னு சொல்லி என்னைய வாழ்த்தினப்போ, எனக்கு மட்டுமில்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் குடும்பத்தினருக்கும் கண்ணு கலங்கிடுச்சு.

பணி ஓய்வுக்கு ஊரே திரண்டு சீர் கொடுத்தாங்க! - சத்துணவு டீச்சர் விஜயா

தொடர்ந்து, நான் மண்டபத்துல நடத்துன பணி ஓய்வு நிகழ்ச்சிக்கு ஊர் மக்களெல்லாம் சேர்ந்து கோலாட்டம், தாரை, தப்பட்டைனு வெச்சு பித்தளை குத்து விளக்கு, பாத்திரங்கள்னு ஊர்வலமா வரிசை எடுத்துட்டு வந்தாங்க. அதைப் பார்த்து வியந்த சிலர், ‘பெரிய டீச்சரா’னு ஊர்க் காரங்ககிட்ட கேட்க, ‘இல்ல அவங்க எங்க சத்துணவு டீச்சர்’னு சொல்ல ஆச்சர்யத்துல உறைஞ்சிட்டாங்க. மேடையில, ஊர்ல பலரும் எனக்கு மோதிரம் போட்டாங்க... எனக்கு விரலே பத்தலை. ‘மாப்பிள்ளை மட்டும் தான் இல்ல, கல்யாணம் மாதிரியில்ல நடக்குது’னு பலரும் சொல்லிச் சிரிச்சாங்க’’ என்று விஜயா சிரிக்க, ஊர் மக்கள் நெகிழ்ச்சியான ஒரு தருணத்தை பகிர்ந்துகொண்டனர்.

‘`பணி ஓய்வு நிகழ்ச்சியில, ‘உங்ககிட்ட இப்ப ஓர் உண்மையைச் சொல்றேன். எனக்குப் பதவி உயர்வு கிடைச்சது. உங்களை பிரிய மன சில்லாம அதை வேண்டாம்னு சொல்லிட்டேன்’னு விஜயா சொன்னதும், நாங்க நெகிழ்ந்து போயிட்டோம். ஓய்வு பெற்றதுக்கு அப்புறமும், இப்பவும் தினமும் ஊருக்கு வந்துடுவாங்க விஜயா. சேமிப்பு, சீட்டுனு ஏதாச்சும் யோசனை சொல்லிட்டே இருப்பாங்க. ரெண்டு நாள் வரலைன்னா, ‘என்ன காணோம்..?’னு நாங்க போன் பண்ணிடுவோம். நல்லது, கெட்டது எதுவும் அவங்களை விட்டுச் செய்ய மாட்டோம். எல்லா வீட்டுலயும், ஏதாச்சும் விசேஷம்னா பொறந்த மகளுக்குப் புடவை எடுத்துக் கொடுக்குற மாதிரி அவங்களுக்கும் எடுத்துக் கொடுத்துடுவோம்’’ என்கின்றனர் ஊர்மக்கள் நிரம்பும் பாசத்துடன்.

ஊரோடு, பேரோடு ஒரு வாழ்வு... வாழ்த்துகள் விஜயா!