Published:Updated:

“ரோடு போட்டு பஸ் விட்டிருந்தா சசிரேகா உயிரோட இருந்திருப்பா...”

உசிலம்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
உசிலம்பட்டி

ஒரு கிராமமே ஒதுக்கப்பட்ட துயரம்

“ரோடு போட்டு பஸ் விட்டிருந்தா சசிரேகா உயிரோட இருந்திருப்பா...”

ஒரு கிராமமே ஒதுக்கப்பட்ட துயரம்

Published:Updated:
உசிலம்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
உசிலம்பட்டி

‘‘மனசு மரத்துப்போறதுக்கு நோயும் மரணமும் தேவையில்லை. ஏமாற்றமே போதும்’’ - தங்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்காக இப்படி குமுறிக்கொண்டிருக்கிறார்கள் தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள உசிலம்பட்டி கிராம மக்கள். இதற்கிடையே அடிப்படை வசதியில்லாத காரணத்தாலேயே ஒரு சிறுமி மரணமடைய, கிராம மக்களின் வேதனை, கொந்தளிப்பாக மாறியிருக்கிறது.

தஞ்சையிலிருந்து செங்கிப்பட்டி, வளம்பக்குடி வழியாக புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது உசிலம்பட்டி. சாலைகள், பேருந்து, பள்ளிக்கூடம், நியாயவிலைக் கடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சொந்த ஊரிலேயே அகதிகளைப்போல் வசிக்கிறார்கள் மக்கள்.

 “ரோடு போட்டு பஸ் விட்டிருந்தா சசிரேகா உயிரோட இருந்திருப்பா...”

இவர்களின் துயரநிலையைக் கேள்விப்பட்டு உசிலம்பட்டிக்குச் சென்றோம். தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசைகளுக்கு நடுவில் அத்திபூத்தாற்போல் ஒன்றிரண்டு கான்கிரீட் வீடுகள் இருக்கின்றன. குடிசைகளின் கீற்றுகளிலிருக்கும் ஏராளமான பொத்தல்களே அந்த கிராமத்தின் வறுமையை வெளிக்காட்டின. கிராம மக்களிடம் பேசினால், அவர்களின் மொழியில் வழிகிறது வாழ்வின் வலி... ‘‘இங்கே 120 குடும்பங்கள்கிட்ட இருக்கோம். மாவட்டத்தோட எல்லையில இருக்குறதாலயோ என்னவோ, யாருமே எங்களைக் கண்டுக்கிடலை. மூணு, நாலு தலைமுறையா இங்கயேதான் இருக்கோம். கொஞ்சம்பேருக்கு விவசாய பூமியும் இருக்கு. ஆனா, அவங்ககிட்டேயும் கிணறுவெட்ட, போர் போட காசு இல்லை. ஏதோ தோண்டுன பள்ளத்துல வர்ற தண்ணியவெச்சு வெள்ளாமை பண்ணிக்கிறாங்க. தஞ்சாவூர் மாவட்டத்துல வானம் பார்த்த பூமின்னா அது எங்க ஊருதான்!

ஆம்பளைங்க வெறகு வெட்டுற வேலைக்குப் போறோம். பொம்பளைங்க காட்டுல இருக்குற சீவு குச்சியை அறுத்துக்கிட்டு வந்து வாருகோல் தயாரிச்சு விக்கிறாங்க. கிடைக்கிற வருமானத்துல வயித்துப் பசியையே போக்கிக்க முடியலை. வெளியூர் போய் கைநிறைய காசு சம்பாதிச்சுக்கிட்டு வந்து வீடு, வாசல்னு நாங்களும் மத்தவங்க மாதிரி வாழணும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா, எங்க ஊர்ல இருந்து வெளியில போயிட்டு வர்றதுக்கு ரோடுகூட சரியா போடலையே... அப்புறம் எப்படி பஸ் வரும்?

 “ரோடு போட்டு பஸ் விட்டிருந்தா சசிரேகா உயிரோட இருந்திருப்பா...”

எங்க ஊர்ல இருந்த தொடக்கப் பள்ளிக் கூடத்துக்கு டீச்சருங்களே வர மாட்டாங்க. அதனால, பத்து வருஷத்துக்கு முன்னாடி பூட்டுன பள்ளிக் கதவை இப்ப வரைக்கும் திறக்கலை. எங்க புள்ளைங்க அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற கிள்ளுக்கோட்டை கவர்மென்ட்டு ஸ்கூலுக்கு நடந்துபோயிட்டு வர்றாங்க. சுத்தியும் முள்ளுத்தோப்பா இருக்குது. பொம்பளப் புள்ளைங்களை அந்த வழியா அனுப்புறதுக்கே பயமா இருக்கு. அதனால, பொண்ணுங்களைப் படிக்க அனுப்புறதுக்கே பலரும் தயங்குறாங்க. பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு பல வருஷமா மனு கொடுத்துட்டு வர்றோம். எந்தப் பலனும் இல்ல. சுத்தமான குடிநீர் வசதியும் இல்லை. ஊருக்குனு மூணு குளங்கள் இருக்கு. அதை தூர்வாரச் சொல்லி பலமுறை மனு கொடுத்துட்டோம். கண்துடைப்புக்குக்கூட யாருமே வந்து எட்டிப் பார்க்கலை.

ரேஷன் கடையும் இல்லை. அஞ்சு கிலோமீட்டர் தள்ளியிருக்குற ஊர்ல இருக்கிற ரேஷன் கடைக்கு வயக்காட்டு வழியா போய் பொருளை வாங்கிக்கிட்டு வர்றோம். அங்கே போனா, அந்த ஊர்க்காரங்களுக்கு கொடுத்ததுக்குப் பிறகுதான் எங்களுக்குப் பொருள் தர்றாங்க. காலம் காலமா வசிக்கிற எங்களுக்கு, அடிப்படை வசதிகளை மட்டும் செஞ்சு கொடுத்தா போதும். நாங்க உழைச்சு பொழச்சுப்போம்’’ என்றவர்கள்,

‘‘கொரோனாவுல ஸ்கூல் திறக்காததால, சத்துணவுக்கு வந்த அரிசி, பருப்பு, முட்டையை வாங்கிட்டு வர்றதுக்காக, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏழாவது படிக்கிற சசிரேகாவும், சில பசங்களும் நடந்து போனாங்க. அரிசி, முட்டை வாங்கிக்கிட்டு ஊர் திரும்புறப்போ, அந்த வழியா வந்த லோடு வண்டியில லிஃப்ட் கேட்டு ஏறியிருக்காங்க. டிரைவரு போதையில இருந்தது பசங்களுக்குத் தெரியலை. இறக்கிவிட வேண்டிய இடத்துல ஆட்டோவை நிறுத்தாம அவன்பாட்டுக்கு வேகமா ஓட்டியிருக்கான். கடத்திக்கிட்டுப் போறானோனு பயத்துல பசங்க வண்டியில இருந்து எகிறி கீழே குதிச்சிருச்சுங்க. அதுல சசிரேகா தலையில அடிப்பட்டு செத்துப்போயிட்டா. எங்க ஊருக்கு பஸ்ஸு விட்டிருந்தா சசிரேகா இந்நேரம் உயிரோட இருந்திருப்பா. அவ சாவுக்கு யார் காரணம்?’’ என்று அழுகையோடு கேள்வி எழுப்பினார்கள்.

 “ரோடு போட்டு பஸ் விட்டிருந்தா சசிரேகா உயிரோட இருந்திருப்பா...”

பள்ளிக்கூடம், ரேஷன் இல்லாத ஊருக்கு டாஸ்மாக் மதுக்கடையைக் கொண்டுவர முயல்வதாகச் சொல்லி கொதிக்கிறார் சி.பி.எம் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார். ‘‘80 மாணவர்களுக்கு மேல படிக்குற ஊர்ல, தொடக்கப் பள்ளிக்கூடம் இல்லாதது வேதனை. ஆனா, டாஸ்மாக் கடையைத் திறக்கறதுக்கு தொடர்ந்து முயற்சி செய்யறாங்க. சொந்த ஊர்ல அடிப்படை வசதி கிடைக்காம, அகதியைப்போல வாழுறது பெரும் கொடுமை. அரசு உடனடியாக உசிலம்பட்டி கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு கொடுக்கணும்’’ என்றார்.

உசிலம்பட்டி மக்களின் பிரச்னைகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘‘உடனடியாக உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறேன். அதன் பிறகு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறேன்’’ என்று உத்தரவாதம் கொடுத்தார்.

விரைவில் விடியல் பிறக்கட்டும்!