Published:Updated:

மெக்கானிக்கல் இன்ஜினீயர் டு புட்டு கடை... சுயதொழிலில் கலக்கும் தஞ்சாவூர் இளைஞர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புட்டு வியாபாரம் செய்யும் பாரத்
புட்டு வியாபாரம் செய்யும் பாரத் ( ம.அரவிந்த் )

``நான் அப்பா மாதிரி புட்டு வியாபாரம் பார்க்கப் போறேன்’’ன்னு சொன்னவுடனே அவங்க அதிர்ந்து போயிட்டாங்க. ``உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு பி.இ வரை படிக்க வச்சது நீ புட்டு விக்கவா?’’ன்னு கேட்டாங்க.

தஞ்சாவூரில் பி.இ படித்துள்ள பட்டதாரி இளைஞர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பார்த்த வேலையை உதறிவிட்டு, சொந்தத் தொழிலாகத் தற்போது தஞ்சையில் குழாய் புட்டு வியாபாரம் செய்துவருவதுடன், கை நிறைய வரும் வருமானத்தின் மூலம் பெற்றோரையும் நன்றாகக் கவனித்து வருகிறார் என்று கேள்விப்பட்டு, அவரை தேடிச் சென்று சந்தித்தோம்.

சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் பூ போன்ற புட்டை தேங்காய்த் துருவலுடன் கலந்து பாக்கெட் கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பலரும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருந்து புட்டு வாங்கிச் சென்று கொண்டிருக்க, அவருக்காக நாம் காத்திருந்தோம். சட்டென்று வந்தவர், தன் கதையை மின்னல் வேகத்தில் சொல்ல ஆரம்பித்தார்.

``என் பேரு பாரத். என் அப்பா ஜெயப்பிரகாஷ், 15 வருஷமா புட்டு வியாபாரம் செஞ்சு வந்தாரு. என் அம்மா சகுந்தலா அவருக்கு ஒத்தாசையா எல்லா வேலையும் செஞ்சு தருவாங்க. என் தங்கச்சி யாழினி காலேஜ்ல மூன்றாம் ஆண்டு படிக்கிறாங்க. நான் 2016-ல் ஒரு தனியார் கல்லூரில பி.இ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சேன். அதுக்குப் பிறகு சென்னையில உள்ள தனியார் நிறுவனத்துல ரூ.15,000 மாத சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன்.

வேலையில பல்வேறு நெருக்கடி இருந்தது. வாங்கின சம்பளம், தங்கும் அறைக்கான வாடகை, உணவு, அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லவே சரியா இருந்துச்சு. கையில கால் காசு மிஞ்சவில்லை. வீட்டுக்கும் பைசா காசு தர முடியவில்லை. ``மகன் கை நிறைய சம்பாதித்து குடும்பத்தின் கஷ்டத்தில் பங்கெடுப்பான்’’ன்னு என்மேல நம்பிக்கை வச்சிருந்த எங்க அம்மா, அப்பா என் நிலைமையைப் பார்த்துட்டு ரொம்ப வருத்தப்பட்டாங்க.

ராஜா குழாய் புட்டு
ராஜா குழாய் புட்டு
ம.அரவிந்த்

இந்த நிலைமையில திடீர்ன்னு ஒரு நாள் நான் பார்த்துக்கிட்டு இருந்த வேலையை உதறிவிட்டு தஞ்சாவூருக்கே வந்துட்டேன். ``நான் அப்பா மாதிரி புட்டு வியாபாரம் பார்க்கப் போறேன்’’ன்னு சொன்னவுடனே அவங்க அதிர்ந்து போயிட்டாங்க. ``உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு பி.இ வரை படிக்க வச்சது நீ புட்டு விக்கவா?’’ன்னு கேட்டாங்க. ``படிச்ச வேலையை செய்யுறதைவிட புடிச்ச வேலையை செய்யுறதே சரி’’ன்னு என் அம்மா, அப்பாவை சமாதானம் செஞ்சேன். அப்பாகிட்ட இருந்த சாமான் செட்டுகளை எடுத்து, கடை போட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிளாட்பாரம்ல கடை வைக்கிறதைவிட, ஒரு ஆட்டோவைத் தயார் பண்ணி, அதுல கடை வைக்கலாம்னு ஐடியா. கடைக்குள்ள புட்டு செஞ்சு தர்றப்ப, சுத்தபத்தமா இருக்கும். தூசிதும்பு புட்டுமேல வந்து விழாது. அதானால ஒரு ஆட்டோவைத் தயார் செஞ்சு, அதுல சாயங்கால நேரத்துல தஞ்சை பெரிய கோயிலுக்குப் பக்கத்துல உள்ள மேம்பாலம் இறக்கத்தில் வியாபாரத்தைத் தொடங்கினேன். அரிசி, கம்பு, கேழ்வரகு, சிவப்பு அரிசி புட்டுகளையும், சுண்டல் கிரேவி, வாழைப்பூ வடை, இனிப்பு பனியாரம்ன்னு பல வெரைட்டிகள் என் கடையில இருக்கும். மொதல்ல கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்துச்சு. பின்னாடி வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கினவுடனே, பழகிடுச்சு’’ என்றவர், மீண்டும் கடைக்குள் நுழைந்து, நாலு பார்சல் கட்டித் தந்துவிட்டு வந்து தொடர்ந்தார்.

புட்டு வாங்க நிற்கும் வாடிக்கையாளர்கள்
புட்டு வாங்க நிற்கும் வாடிக்கையாளர்கள்
படம்: ம.அரவிந்த்

``காலையில 9 - 1 மணி வரை இதற்கான தயாரிப்பு வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்வேன். சாயங்காலம் 5 - 9 மணி வரை வியாபாரம் செய்வேன். தினமும் சராசரியாக ரூ.4,000 வியாபாரம் ஆகும். இதுல எல்லா செலவும் போக ரூ. 1,000-த்துக்குமேல லாபம் கிடைக்கும். மாதம் ரூ.30,000 - ரூ.40,000 வரை வருமானம் வருது. கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இதைச் செய்றேன்.

இப்போ பழைய ஹவுஸிங் யூனிட் ரவுண்டானாகிட்ட வியாபாரம் செஞ்சுகிட்டிருக்கேன். தரம், சுவை இதுல எந்த காம்பரமைஸும் செய்ய மாட்டேன். சுத்தத்துக்கு முதல் மரியாதைங்கிறதால, எனக்குன்னு ரெகுலர் கஸ்டமர் வட்டம் உருவாயிடுச்சு.

ஆரம்பத்துல கவலைப்பட்ட என் அம்மா, அப்பா இப்ப நான் கை நிறைய சம்பாதிக்கிறதைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க. 10 மாசத்துக்கு முன்னால என் அப்பாவுக்கு நெஞ்சு வலிக்காக ஆஞ்சியோ ஆபரேஷன் செஞ்சோம். இதற்குப் பெரிசா செலவு செய்ய வேண்டியிருந்துச்சு. அந்தச் செலவை எல்லாம் நானே செஞ்சேன். அதைவிட முக்கியமா அவரைப் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டதுல தனி திருப்தி. தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுகிட்டுருந்தா, இதெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது. அப்பா, இப்ப வேலைக்குப் போறதில்லை. என் சம்பாத்தியத்துல குடும்பம் மகிழ்ச்சியா இருக்கு.

அப்பா, அம்மாவுக்கும் இப்ப என் மேல நிறைய நம்பிக்கை வந்திருக்கு `நீ பெருசா வருவடா’ன்னு அப்பா என்னைப் பாராட்டுனது பெரிய சந்தோஷம். சொந்தமா தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு உழைச்சேன். அதுக்கான பலன் இப்ப கிடைச்சிருக்கு’’ என்றபடி, நமக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, மீண்டும் கடைக்குள் புட்டு மாவை எடுத்து குழாயில் வைக்க ஆரம்பித்தார் பாரத்.

உழைப்பு என்றும் வெற்றி தரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு