Published:Updated:

ஆன்மிகப் பணி; சைவ நெறி; மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதி - அருணகிரிநாதர் காலமானார்!

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்.

தமிழகத்திலுள்ள தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் மதுரை ஆதீனம் மிக முக்கியமான ஒன்று. இந்த ஆதீனத்தின் 292-வது மடாதிபதியானார் குருமகா சந்நிதானம் அருணகிரிநாதர் (77) . 1,500 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்த மதுரை ஆதீனத்தை, திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். தற்போது இந்த மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

கடந்த 9-ம் தேதி, தற்போது மடாதிபதியாக இருந்துவரும் அருணகிரிநாதருக்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கிவந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். அவருக்கு வயது 77. இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டாரத்தைச் சேர்ந்த அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக 27.5.1975-ல் பொறுப்பேற்றார். 291-வது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் மரணமடைந்த பிறகு, 14.3.1980-ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் `மதுரை ஆதீனம் 292-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசார்ய சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.

Vikatan
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

ஆன்மிகப் பணிக்கு வருவதற்கு முன் `தமிழ் மாலை’ நாளிதழில் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆன்மிகப் பணியிலில் இருந்தாலும் அரசியல் விஷயங்களிலும் கருத்து சொல்லிவந்தார். 1980-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பிலிருக்கும் அருணகிரிநாதர், சைவ நெறி பரப்புதலுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பல நல்ல விஷயங்களைச் செய்துவந்திருக்கிறார். சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு