Published:Updated:

டெல்லிக்குப் போன காசி!

டெல்லிக்குப் போன காசி!
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்லிக்குப் போன காசி!

ஜூன் 25 நெருக்கடிநிலையின் 45-ம் ஆண்டு

காசி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமரான மோடியைப் பற்றியதல்ல இது. மதுரை சமயநல்லூரில் வீடுபுகுந்து கொள்ளையடித்து சிறையிடலடைக்கப்பட்ட காசியின் வழக்கு பற்றியது.

73 நாள்கள் சிறைக்குப் பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பிணை மனுத்தாக்கல் செய்தார் காசி. அவரது மனுவில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதால், சட்டப்படி பிணை கொடுக்க வேண்டும்’ என்று கோரினார்.

ஆனால், ‘தொற்றுநோய் காலத்தில் இந்தக் காலவரையறையைக் கணக்கில்கொள்ள முடியாது’ என்று கூறிய நீதிபதி, ‘தொற்றுநோயால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால், காவல் அதிகாரிகளால் தங்களது கடமையைச் செய்ய காலவரையைக் கையாள முடியாது’ என்றும் தீர்ப்பில் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் நெருக்கடிநிலை விதிக்க முடியும். ஆனால், நெருக்கடி காலகட்டத்தில் நீதிமன்றங்கள் அரசின் செயல்பாடுகளுக்குத் தளர்வு அளிக்க முடியாது. தொற்றுநோய் ஊரடங்கும் நெருக்கடி நிலைமை பிரகடனத்துக்கு ஒப்பானதே!

கே.சந்துரு, 
மேனாள் நீதிபதி, 
சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனம் தளராத காசி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை ரத்து செய்ததுடன், உயர் நீதிமன்றத்துக்கு நெருக்கடி நிலைமை பற்றி ஒரு பாடம் எடுத்தது. அதை இங்கே விவரிக்கிறேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1975-1977... இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, `அவர் அலகாபாத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவும், நாடு தழுவிய எதிர்ப்பு அலைகளைச் சமாளிக்கவும் குடியரசுத் தலைவர் பெயரில் நாட்டில் நெருக்கடி நிலைமையை அரசமைப்பு சட்டம் பிரிவு 352-ன்கீழ் பிரகடனப்படுத்தினார். பிறகு இது பற்றி விசாரித்த நீதிபதி ஷா ஆணையம், ‘குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அஹமதுக்கு அமைச்சரவை கூடி ஆலோசனை வழங்கவில்லை’ என்ற மிகப்பெரிய சதியை அம்பலப்படுத்தியது.

1975-ம் வருடம், ஜூன் 25-ம் தேதி நள்ளிரவில் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடிநிலைதான் இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றிலேயே அழிக்க முடியாத மிகப்பெரிய கறையாகிப் போனது. அன்றைய நாள்களில் இன்றைய பிரதமர் மோடி, இன்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் ‘மிசா’ சட்டத்தின்கீழ் விசாரணையின்றி, சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. செய்திகள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மக்களின் பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

விசாரணையின்றி சிறையில் அடைக்கப் பட்டவர்களில் சிலர் அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றைப் பரிசீலித்த நீதிமன்றங்கள் சிலருக்கு விடுதலை அளித்தன. உடனே அந்த மனுக்களையெல்லாம் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியது மத்திய காங்கிரஸ் அரசு.

அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘நெருக்கடி நிலைமை உள்ளபோது, அடிப்படை உரிமைகளான சுதந்திரமாக வாழும் உரிமையைக் கேட்டு (பிரிவு 21)-ன்படி நீதிமன்றத்தை அணுக முடியாது’ என்று தீர்ப்பளித்தது (ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கு). இது இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1976, ஜனவரி 31-ம் தேதி தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியிலிருந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு எந்தக் காரணமும் இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப் பட்டது. தி.மு.க, தி.க, மார்க்சிஸ்ட், நக்ஸலைட் கட்சியினர் பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைக்குள்ளாயினர்.

சென்னைச் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்ட ‘மிசா’ கைதிகள் குண்டாந்தடியால் தாக்கப்பட்டதைப் பற்றி நீதிபதி இஸ்மாயில் ஆணையம் விசாரித்தது. தொடர்ந்து அதன் அறிக்கையில், ‘மிசா கைதிகள் தாக்கப்பட்டது உண்மை; அதற்குக் காரணமான சிறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த அறிக்கையைப் பெற்ற எம்.ஜி.ஆர் அரசு சிறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தது.

டெல்லிக்குப் போன காசி!

இதுதான் நமது நாட்டைப் பிடித்த சாபக்கேடு. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது கட்சி மாச்சரியங்களின்றி அவற்றைக் கண்டித்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை.

சமீபத்தில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற ஒரு கறுப்பரை கழுத்தை நெறித்துக் கொன்ற காவலர்களின் பதவியை அமெரிக்க அரசு பிடுங்கியதுடன், நான்கு காவலர்கள்மீதும் கொலைக்குற்றம் சுமத்தி சிறையில் தள்ளியது.ஆனால், தமிழ்நாட்டிலோ சாத்தான்குளம் காவலர்கள் நடத்திய சாத்தான் செயல்களுக்கு தற்காலிகப் பதவி நீக்கம் மற்றும் கூண்டோடு இடமாற்றம் என்பதோடு தமிழக அரசு ஒதுங்கிக்கொண்டது. இனி உயர் நீதிமன்றம் இது பற்றிச் சுயமாக எடுத்துள்ள வழக்கில் நீதி கிட்டும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.

1975-77 ஆண்டுகளில் நெருக்கடிநிலையின் உச்சகட்டத்தில் அப்போது நடைபெற்ற அடக்குமுறைகள் வெளியில் வரவில்லை. பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. அந்தப் புதிய அமைச்சரவை யிலிருந்த பெரும்பான்மையினர் மிசா கைதிகளாக இருந்தவர்களே. அதனால், `மறுபடியும் நெருக்கடி நிலைமை வந்தால், நீதிமன்றங்களை அணுகி மக்கள் நிவாரணம் பெற வழி வகை செய்ய வேண்டும்’ என்பதே அந்தப் புதிய அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது.

இதற்காக 44-வது அரசமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத் திருத்தத்தின்படி, `நெருக்கடி நிலைமை பிறப்பிக்கப்பட்டாலும், மக்கள் நீதிமன்றங்களை அணுகி தங்களது சுதந்திர உரிமைகளான பிரிவு 21 மற்றும் 22-ன்கீழ் நிவாரணம் பெறலாம்’ என்பது நிலைநாட்டப்பட்டது. இதனால் நெருக்கடி நிலைமையின்போது பிறப்பித்த தீர்ப்பு சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் ‘நெருக்கடி நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த தீர்ப்பை வழங்கியதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். பிறிதொரு சமயத்தில் ஆதார் அட்டை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நெருக்கடி நிலைமையின்போது கொடுத்த தீர்ப்பு தவறு. அது அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது. மக்களின் அடிப்படை உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது’ என்று கூறி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.

டெல்லிக்குப் போன காசி!

இந்த வரலாற்றையெல்லாம் மீண்டும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘சமயநல்லூரைச் சேர்ந்த காசியின் பிணையை மறுத்தது தவறு. காவல் அதிகாரிகள் தொற்றுநோய் ஊரடங்கால் தங்களது கடமையைச் செய்யாமல் இருக்க முடியாது. உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை ரத்துசெய்கிறோம். நெருக்கடிநிலை காலத்தில் மக்களுக்குண்டான உரிமைகள் பற்றிய அறியாமையைக் கண்டிக்கிறோம். தொற்றுநோய் ஊரடங்கு இருப்பினும், மக்களின் ஆதார உரிமைகளைப் பறிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தனர்.

காசி பிணை கேட்டு டெல்லிக்குப் போனது நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டு, 45-ம் ஆண்டில் நுழையும் நமக்கு ஒரு நினைவூட்டலாக அமைந்துவிட்டது.

`90-களில் பிறந்த குழந்தைகள்’, `2000-ம் வருடத்துக்குப் பிந்தைய குழந்தைகள்’ என்றெல்லாம் பல மலரும் நினைவுகளைச் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். அநேகமாக இன்று 65 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் நெருக்கடிநிலை மிகவும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

நெருக்கடிநிலையைவிட மோசமான புதிய பாடங்களை இன்று நமக்குக் கற்றுக்கொடுத்து வருகிறது கொரோனா தொற்றுநோய். `ஊரடங்கு’ என்ற பெயரில் போராட்டங்கள் அடக்கப்பட்டு, காவல்துறையாலும் அதிகாரிகளாலும் அரசு நடத்தப்பட்டு வருகிறது. அரசை எதிர்த்துப் பேசியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்ததற்காகச் சதி வழக்குகள் போடப்படுகின்றன. மக்கள் நடமாட்டங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் போக்குவரத்துத் தடைகள் விதிக்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறை, வேலையிழப்பு, ஊதியமற்ற நிலை தொடர்கிறது. 1975-77 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலை காலத்தை விட இன்று அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை காலத்தை நேரில் காண்கிறோம். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றங்கள் மூடிக்கிடக்கின்றன; காணொளியில் விசாரிக்கிறார்கள். `அரசின் செயல்களில் தலையிட மாட்டோம்’ என்கிறார்கள்.

அன்றைய மிசா கைதிகளில் பலர் அமைச்சரவையில் இருக்கின்றனர். ஆனால், அவர்களே இன்று நெருக்கடிநிலைக்கான அதிகாரங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த உச்ச நீதிமன்றத்தின் (ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கு) தீர்ப்பு செல்லாது என்றாலும், அதன் தாக்கம் இன்றைய நீதிமன்றங்களில் தவழ்வதையும் பார்த்து வேதனைப்படுகிறோம்.

அதனால்தான் வருடந்தோறும் ஜூன் 25-ம் தேதியை, கறுப்பு நாளாக நினைவு கூர்கிறோம். 45-ம் ஆண்டில் காலடிவைக்கும் இந்த ஆண்டில் ஒரு சபதம் ஏற்போம். என்னதான் நெருக்கடிநிலை வந்தாலும், ஜனநாயகத்தை தடம்புரள விட மாட்டோம்!