Published:Updated:

அத்துமீறுகிறதா அமேசான்?

உண்மை என்ன என்பது விசாரணைகளில்தான் தெரியவரும்.

பிரீமியம் ஸ்டோரி
சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, அத்தியா வசியப் பொருள்கள் தொடங்கி ஆடம்பரப் பொருள்கள் வரை நேரடியாகக் கடைகளுக்குச் சென்றே வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போதோ, எடுத்ததற்கெல்லாம் அமேசான், ஃபிளிப்கார்ட் என்று ஆன்லைன் ஆர்டர்கள் தான்.

அமேசான் நிறுவனம் 2004-ம் ஆண்டே இந்தியாவுக்குள் வந்துவிட்டாலும், விற்பனைச் செயல்பாடுகளைத் தொடங்கியது 2013 ஜூன் மாதம்தான். முதல் நாளில் 10,000 ஆர்டர்களைப் பெற்ற அமேசான், 2019-ல் மட்டும் சுமார் 10,000 கோடி டாலர் வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ 2016-ல் தொடங்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 18 மாதங்களில் இரண்டு மடங்காகியிருக்கிறது.

நாடு முழுவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில்லறை விற்பனையாளர்கள் அமேசானில் தங்களை இணைத்துக்கொண்டு இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாலும், இந்தியச் சில்லறை வர்த்தகம் என்பது இன்னும் நேரடியாக சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகர்களை மையப்படுத்தியே இயங்குகிறது. சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட, இந்தியச் சில்லறை வர்த்தகச் சந்தையில் இணைய வர்த்தகத்தின் பங்கு, நான்கு சதவிகிதம். இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றாலும், ஸ்மார்ட்போன் விற்பனைகளில் இணைய வர்த்தகம் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது.

அத்துமீறுகிறதா அமேசான்?

இப்படி இணைய வர்த்தக நிறுவனங்களின் அசுர வளர்ச்சி மற்ற சில்லறை வணிகர்களை பாதிக்கிறது. எனவே, சிறு-குறு வணிகர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அந்நிய நேரடி முதலீட்டின் விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை இந்திய அரசு தொடர்ந்து திருத்தியும் மாற்றியும் வந்தது. இருந்தாலும், அமேசான் நிறுவனம் அந்த விதிகளை மீறும்வகையிலான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அமேசான் போன்ற வெளிநாட்டு இணைய வர்த்தக நிறுவனங்கள், விற்பனை யாளர்களி டமிருந்து கட்டணம் பெற்றுக்கொண்டு அவர்கள் பொருள்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதி தருகிறது. அவர்கள் தங்கள் பொருள்களை நேரடியாக விற்க முடியாது. ஆனால், இந்த அடிப்படை விதியை மீறும் வகையிலும், பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான விற்பனையாளர்களை ஏமாற்றும் வகையிலும் அமேசான் இத்தனை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. 2012-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான அமேசானின் ஆவணங்கள் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

2019-ல் அந்நிய முதலீடுகள் குறித்து இந்திய அரசு அறிவித்த வரைமுறைகள் அமேசானுக்கு நெருக்கடியை ஏற்படுத்த இருந்தன. அந்த நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி ஜே கார்னேவும் அமெரிக்கா வுக்கான இந்தியத் தூதராக அப்போது இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் வாஷிங்டனில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. இந்தச் சந்திப்பில் என்ன பேச வேண்டும், பேசக் கூடாது என்பது குறித்து கார்னேவுக்கு அமேசான் அறிவுறுத்தி இருந்த ஆவணத்தை ராய்ட்டர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

ஜே கார்னே, ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா
ஜே கார்னே, ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

அதன் அடிப்படையில், இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமேசான் முதலீடு செய்திருப்பதாகவும், அதன்மூலம் நான்கு லட்சத்துக்கும் அதிகமான சிறு வணிகர்கள் அமேசானில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் Catamaran Ventures நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் தொடங்கப்பட்ட Cloudtail மற்றும் 2017-ல் தொடங்கப்பட்ட அசோக் பட்னியின் Appario என்ற இரண்டு நிறுவனங்களும் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவிகிதம் வரை பெற்றிருக்கின்றன. இந்தியத் தூதரிடம் பகிரக்கூடாத செய்தியாக இது ஆவணத்தில் பதிவாகியிருக்கிறது. அமேசான் மறைமுகப் பங்குதாரராக இருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களும் முறையே ‘சிறப்பு விற்பனையாளர்’, ‘சிறப்பு விற்பனையாளர் 2’ என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

விற்பனையாளர்கள் அனைவருமே சமமாக நடத்தப்படுவதாகப் பொதுவில் அறிவித்த அமேசான், இந்த இரண்டு நிறுவனங்களுடன் மறைமுகமாகப் பங்குவகித்து லாபம் சம்பாதித்திருக்கிறது. இதுதான் இப்போதைய பிரச்னையின் பின்னணி.

ஏற்கெனவே இந்திய வணிகர் குழு ஒன்று அளித்த புகாரின் பேரில், அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியப் போட்டி ஆணையத்தின் விசாரணைக்குள் இருந்தன. இந்த விசாரணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், நான்கு முக்கியக் குற்றச்சாட்டுகளை ஆணையம் இந்த நிறுவனங்கள்மீது வைத்தது: 1) இணைய வர்த்தகத் தளங்களில் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு வெளியீடு; 2) குறிப்பிட்ட விற்பனையாளர்களை மட்டும் பிரபலப்படுத்துவது; 3) அளவுக்கு அதிகமான தள்ளுபடி; 4) விற்பனையாளர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவது.

இந்த அத்துமீறலால் அமேசான் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இணைய வர்த்தக நிறுவனங்களின் மீதும் இந்திய அரசின் பிடி இறுகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவில் முதன்முறையாகத் தன்னுடைய பொருள்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி மூலம் ‘ஃபயர் ஸ்டிக்’ கருவியின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் தொடங்க இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸின் கட்டுரை குறித்த அமேசான் தரப்பு விளக்கத்தைப் பெற மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டபோது நமக்குக் கிடைத்த பதில்: “ராய்ட்டர்ஸிடம் உள்ள ஆவணங்களை நாங்கள் பார்க்கவில்லை, அவற்றின் ஆதாரத்தை ராய்ட்டர்ஸ் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதால், கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் கோருதல்களின் உண்மைத்தன்மையை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. கட்டுரை ஆதாரமற்ற, முழுமையற்ற, தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறது. இந்தத் தகவல்கள் அமேசானை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டிருக்கலாம். அனைத்து இந்தியச் சட்டங்களுக்கும் அமேசான் கட்டுப்படுகிறது. ராய்ட்டர்ஸ் கட்டுரை காலாவதியான தகவல்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் நுகர்வோருக்கு முதல் தர சேவையை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.”

உண்மை என்ன என்பது விசாரணைகளில்தான் தெரியவரும்.

“இந்தியா தன்னிறைவு பெற வேண்டுமென்றால், தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். சர்வதேச முதலீடுகளைக் கவர, இந்தியா தொழில் செய்ய உகந்த நாடாக இருக்க வேண்டியது அவசியம். அதை உறுதிசெய்ய 1,500 சட்டங்களை மத்திய அரசு நீக்கியிருக்கிறது” என்று பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் 6-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசியதை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

அத்துமீறுகிறதா அமேசான்?

“பிரதமர் மோடி ஓர் அறிவுஜீவியோ கல்வியாளரோ கிடையாது. ஆனால் வலுவான நிர்வாகமும் ஆட்சிமுறையும் வெற்றிகரமான அரசாங்கத்துக்கு அடிப்படை என்று நம்புபவர்” என்று பிரதமர் மோடியை அமேசானின் ஆவணங்களில் ஒன்று மதிப்பிடுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களின் விதிமீறல்கள் ஒருபுறம்... மத்திய அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பது, பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு வழிவகுத்திருப்பது ஆகியவை மறுபுறம் என எல்லாம் இணையும் புள்ளி அபாயகரமானது.

விழித்துக்கொள்ள வேண்டும் இந்தியா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு