Published:Updated:

பேரறிவாளன் விடுதலையும்... அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பும்...

அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பு

என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?

பேரறிவாளன் விடுதலையும்... அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பும்...

என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?

Published:Updated:
அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பு

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, ‘மற்ற ஆறு பேரின் விடுதலை எப்போது?’ என்ற எதிர்பார்ப்பு மிகுந்த கேள்வி படபடக்க ஆரம்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த (ஏழு பேரில்) பேரறிவாளனை மட்டும் உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம் தேதி விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து வழக்கிலுள்ள மற்ற ஆறு பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்கள், அரசு உயரதிகாரிகளுடன் கடந்த 21-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார் தமிழ்நாட்டு முதல்வர். ஆனாலும்கூட இது குறித்து எந்தவோர் அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில், ‘ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானம் சரியானதுதான்’ என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதால், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசே மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்றைய தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த மனுமீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவே, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பேரறிவாளன். இதையடுத்து, ஏழு பேர் விடுதலை குறித்த ஆவணங்களைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்துபோன ஆண்டுகளில் ஆளுநர்கள் மாறினாலும் தீர்மான மனுமீது மட்டும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டுவந்தது.

இதையடுத்து, ``முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது சட்டப்படி தவறு. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப விருப்பமில்லை. 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே விடுதலை செய்கிறது’’ எனக் கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரறிவாளன் விடுதலையும்... அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பும்...

இந்த நிலையில், ஆறு பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் ‘தன்னைத் தமிழ்நாடு அரசே விடுதலை செய்ய வேண்டும்’ என முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். ஆறு பேர் விடுதலை குறித்து முதல்வருடன் ஆலோசனையில் கலந்துகொண்டவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரபுவிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம், ``உச்ச நீதிமன்றம் இரண்டு விஷயங்களை மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டது. ஒன்று, மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது, தமிழ்நாடு அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அடுத்ததாக, மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் ஆளுநர், அதைத் தாண்டி அவர் சிந்திக்க முடியாது. அதாவது ஏழு பேர் விடுதலையில், தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். அந்தவகையில் பேரறிவாளனின் விடுதலை குறித்த தீர்ப்பு, மற்ற ஆறு பேரின் விடுதலையைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது. எனவே, இந்த விஷயங்களைக் குறிப்பிட்டு, மற்ற ஆறு பேரின் விடுதலையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு ஒரு கடிதம் எழுத வேண்டும். மற்றபடி ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தமிழக அரசே நேரடியாக விடுதலை செய்தால், சட்டச் சிக்கல்கள் வர வாய்ப்புண்டு’’ என்கிறார் எச்சரிக்கையுடன்.

இதையடுத்து தமிழக அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம், ``இந்த வழக்கிலுள்ள ஆறு பேர் மட்டுமல்ல... நீண்டகாலமாகச் சிறையில் இருக்கும் மற்ற சிறைவாசிகள் குறித்தும் புரிதலுடன்கூடிய கொள்கை முடிவைத் தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும். முதல்வர் ஏற்கெனவே அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து இன்னும் முழுமையாக ஆலோசனை நடத்தி, கூடிய விரைவில் மற்ற ஆறு பேரின் விடுதலை அறிவிப்பு வெளிவரும்’’ என்றார்.

சட்டப்படி அரசும் ஆளுநரும் தங்களின் கடமையைச் செய்யட்டும்!

*****

பேரறிவாளன் விடுதலையும்... அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பும்...

``என் மகன் உள்ளிட்ட மற்ற ஆறு பேருக்கும் பெரிய அளவில் அரசியல் ஆதரவோ, தனியாக வழக்கு நடத்துவதற்கான பொருளாதார வசதியோ, உதவியோ கிடையாது. அதேவேளையில் விடுதலை செய்வதற்குச் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தமிழக முதல்வர் விடுதலை செய்வார் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறோம்!’’ - ராஜேஸ்வரி (ரவிச்சந்திரனின் தாயார்)

பேரறிவாளன் விடுதலையும்... அறுவர் விடுதலைக்கான எதிர்பார்ப்பும்...

``அண்ணன் பேரறிவாளனின் விடுதலை, எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அற்புதம்மாளின் மிக நீண்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வழக்கை முதல்வர் கையாண்டவிதம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மற்ற ஆறு பேரையும் விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு!’’ - மதிசுதா (சாந்தனின் சகோதரர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism