Published:Updated:

`கொள்ளிடத்தில் மிதந்துவந்த பெண்ணின் உடல்; 2 பேர் எங்கே?' - அரியலூர் படகு விபத்தில் தொடரும் துயரம்

எம்.திலீபன்

ஆற்றின் நடுவில் மணல் திட்டில் நின்றிருந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 15 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மேலராமநல்லூர் தீவுக்கு மீட்டு வந்தனர்.

அரியலூர் கலெக்டர்
அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்டம், மேலராமநல்லூரிலிருந்து நேற்று இரவு கொள்ளிடம் ஆற்றில் கருப்பூர் கிராமத்துக்குப் படகில் 45 பேர் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அணைக்கரை தெற்கு ராஜன் வாய்க்காலில் ராணி என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

மணல் திட்டில் நிற்கும் மக்கள்
மணல் திட்டில் நிற்கும் மக்கள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீவுக்கிராமம் மேலராமநல்லூர். கொள்ளிடம் ஆற்றில் உள்ள இத்தீவு கிராமத்துக்கு அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து போக்குவரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

வெள்ளக்காலங்களில், மேலராமநல்லூர் தீவிலிருந்து கருப்பூர் கிராமத்துக்கு மக்கள் படகில் சென்றுவருவார்கள். கொள்ளிடம் ஆற்றில் தற்போது மேலணை மற்றும் முக்கொம்பில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மேலராமநல்லூரில் நேற்று விநாயகர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்துள்ளனர்.

உடலைத் தேடும் மக்கள், உறவினர்கள்
உடலைத் தேடும் மக்கள், உறவினர்கள்

விழா முடிந்து மாலையில் மேலராமநல்லூர் கிராமத்திலிருந்து படகுமூலம் 41 பேர் கருப்பூர் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். படகில் பாரம் அதிகமாக இருந்ததால் படகோட்டி கிருஷ்ணமூர்த்தி, 15 பேரை ஆற்றின் நடுவிலிருந்த திட்டில் இறக்கிவிட்டு, மீதி உள்ளவர்களைப் படகில் கருப்பூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது படகின் புரப்பெல்லர் பழுதடைந்ததால், படகிலிருந்தவர்களை தண்ணீரில் இறங்கிக் கரையேறச் சொல்லியுள்ளார்.

இதனால், படகிலிருந்த மக்களும் பயத்தில் அலறி ஒரேபக்கம் சாய்ந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து, ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்த 10-க்கும் மேற்பட்டவர்களைப் படகில் வந்தவர்களும் ஆற்றோரம் இருந்தவர்களும் காப்பாற்றியுள்ளார்கள். இதனால் படகில் வந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

உயிரிழந்த பெண் ராணி
உயிரிழந்த பெண் ராணி

இரவு நேரமாகிவிட்ட நிலையில், மழை பெய்ததால் ஆற்றின் நடுவில் இறக்கிவிட்டவர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அரியலூர் தீயணைப்பு வீரர்கள் மழை சற்று நின்றவுடன் ஆற்றின் நடுவில் மணல் திட்டில் நின்றிருந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 15 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மேலராமநல்லூர் தீவுக்கு அழைத்துவந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் வினய், மீட்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தநிலையில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேர் மாயம் என அரியலூர் மாவட்ட தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராணி
ராணி

கொள்ளிடம் ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வருவதாகப் பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸாருடன் தீயணைப்புத் துறையினரும் இணைந்து, தஞ்சை மாவட்ட பகுதியான அணைக்கரை தெற்கு ராஜன் வாய்க்காலில் இறங்கி காவிரி ஆற்றிலிருந்து வந்த பெண்ணின் சடலத்தைக் கயிறு கட்டி கரை சேர்த்தனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் நேற்று இரவு காணாமல் போன ராணி தான் இது என்று உறுதி செய்தனர். மேலும், இரண்டு ஆண்களின் உடல்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.