Published:Updated:

`பிளாஸ்டிக்கை கொடுங்கள்; சுவையான உணவைப் பெறுங்கள்!' -அம்பிகாபூர் நகராட்சியின் அசத்தல் முடிவு

சத்தீஸ்கரில் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஈடாக இலவச உணவுகள் வழங்கப்படுகின்றன.

கார்பேஜ் கஃபே
கார்பேஜ் கஃபே

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகின்றன. மனிதர்களினால் பயன்படுத்தப்பட்டுக் கழிவுகளாக வீசப்படும் பிளாஸ்டிக்குகள் நீர்நிலைகள் மூலம் கடலில் கலக்கின்றன. இதன்காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றன. கடந்தாண்டு இறந்தநிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம் ஒன்றுக்கு உடற்கூறாய்வு செய்யும் போது அதன் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திமிங்கிலத்தின் இறப்புக்கு பிளாஸ்டிக்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டது.

கார்பேஜ் கஃபே
கார்பேஜ் கஃபே

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்கின்றன. உணவுகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் உட்கொள்ளும் விலங்குகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றன. மனிதன் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்குகளால் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த வீடியோக்கள் யூடியூப்களில் அதிகம் பார்க்கலாம். இவை நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்திய அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் நகராட்சி சார்பில் ‘கார்பேஜ் கஃபே’ என்ற பெயரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை இந்த உணவகத்தில் கொடுத்து மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக்குகளை எடை போட்டு அதற்கு தகுந்த உணவை சூடாகப் பெற்றுச் செல்லலாம். சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ இந்த உணவகத்தை திறந்துவைத்தார்.

கார்பேஜ் கஃபே
கார்பேஜ் கஃபே

விழாவில் பேசிய அமைச்சர், ``அம்பிகாபூர் நகராட்சியின் இந்தத் தனித்துவமான முயற்சியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பிளாஸ்டிக் இல்லா நகரத்தை உருவாக்கும் முயற்சியில் முதலில் இறங்கிய அம்பிகாபூர் நகராட்சியின் முயற்சி பாராட்டத்தக்கது” என்றார். அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நகராட்சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், ``இந்த கஃபே குறித்து கேள்விப்பட்டதும், நான் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து அதை, என் வீட்டில் சேமிக்கத் தொடங்கினேன். இது ஒரு சிறந்த முயற்சி. மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த முயற்சியின் மூலம் எங்களுக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளலாம். இரண்டு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து சுவையான உணவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்

கார்பேஜ் கஃபேவில் ஊழியர்கள் பேசுகையில், ``எங்கள் உணவகத்தில் பெறப்படும் பிளாஸ்டிக்குகள் அனைத்தும் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அங்கு அதை மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள். மக்களிடம் இந்த உணவகத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.