Published:Updated:

திருவிழாவில் பப்ஜி போட்டி... பரிசு ஒரு லட்சம்!

விளையாட்டா... விபரீதமா?

பிரீமியம் ஸ்டோரி

பப்ஜி என்கிற ஆன்லைன் கேம் சிறுவர்களையும் இளைஞர்களையும் எந்தளவுக்கு அடிமையாக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக, அவ்வப்போது துயரமான பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பப்ஜி விளையாடுவதைத் தடுத்ததற்காக தன் தந்தையையே கொன்ற மகன், பப்ஜி விளையாட பணம் கொடுக்க மறுத்த பாட்டியைக் கொன்ற பேரன், மணிக்கணக்காக பப்ஜி விளையாடியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சிறுவன்... என உலகெங்கும் நிகழ்ந்த சம்பவங்கள் நம்மைப் பதறவைக்கின்றன. ‘பப்ஜி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுக்கும் அளவுக்கு நிலைமை அச்சமூட்டுவதாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராம ஊர்த் திருவிழாவில் பப்ஜிக்கு எனப் பிரத்யேகமான போட்டி நடத்தப்போவதாக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர்.

திருவிழாவில் பப்ஜி போட்டி
திருவிழாவில் பப்ஜி போட்டி

சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தில் மாசி மாதத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் மாதம் 5-ம் தேதி பப்ஜி போட்டி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 300 ரூபாய் நுழைவுக்கட்டணம். அதை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். போட்டியில் வெல்பவர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 50,000 ரூபாய், மூன்றாம் பரிசு 20,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக பப்ஜி பார்ட்டிகள் ஒரு பக்கம் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர். ‘வீட்டுக்குள் இதை விளையாடிக்கொண்டிருப்பவர்களையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற பரிசுப் போட்டியெல்லாம் நடத்தி இதை ஊக்குவித்தால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும்’ என்று இன்னொரு பக்கம் இதற்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்தப் போட்டியை நடத்தும் செல்போன் கடை உரிமையாளர் நாகரத்தினத்திடம் இதுகுறித்துப் பேசினோம். “மாசி தேர்த் திருவிழாவை, இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து கொண்டாடுகிறோம். குதிரைப் பந்தயம், மாட்டுவண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு, கல் தூக்கும் போட்டி, கபடி, கிரிக்கெட், நீச்சல்போட்டி என ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டு கூடுதலாக, கல்லல் வர்த்தகச் சங்கத்தின் ஆதரவுடன் பப்ஜி போட்டியையும் நாங்கள் நடத்துகிறோம். ஓர் அணிக்கு நான்கு நபர்கள். அணிக்கு தலா 300 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்போம். தற்போது வரை வேலூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஆந்திரா, கோவை உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பப்ஜி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. ஆன்லைன் வர்த்தகத்தைத் தடுப்பதுதான் எங்கள் நோக்கம். பப்ஜி விளையாடும் இளைஞர்கள்தான் அதிகளவு ஆன்லைனில் பர்சேஸ் செய்கின்றனர். இதனால் குறு, சிறு தொழிலாளர்களும் வணிகர்களும் பாதிப்படைகின்றனர். இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன், பங்கேற்கும் நபர்களிடம் ஆன்லைன் வணிகத்தால் நாங்கள் எவ்வாறு பாதிப்படைகிறோம் என்பதை விளக்குவோம். இதனால் அவர்களிடம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.’’

என்றவரிடம் ``இளைஞர்களுக்கு ஆபத்தாக மாறியிருக்கும் ஒரு விஷயத்தைவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று சொல்கிறீர்களே...’’ என்று நாம் கேட்க,

“சென்ற ஆண்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தினோம். அதில் வெறும் மூன்றே மூன்று பேர்தான் கலந்துகொண்டனர். பப்ஜி போட்டி நடத்துகிறோம் என அறிவித்ததும் ஏராளமானோர் முன்பதிவு செய்கின்றனர். 2,500 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆன்லைனிலேயே இருக்கும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடத்தில் எங்கள் பிரச்னைகளைச் சொல்வதால் விழிப்புணர்வு ஏற்படும். வேறென்ன செய்வது முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இதில் பிரச்னை எழுவதற்கு வாய்ப்பில்லை. காவல்துறை அனுமதியுடன்தான் இந்தப் போட்டியை நடத்துகிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து காரைக்குடி மக்கள் மன்ற நிர்வாகி ராஜ்குமார் “பப்ஜி, மாணவர்களைச் சீரழிக்கும் ஒரு விளையாட்டு. மொபைல்போன்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவரும் நேரத்தில் அதை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டி நடத்துவது தவறான முன்னுதாரணம். விழிப்புணர்வுக்காக நடத்துகிறோம் என்று கூறுவதை, துளியும் ஏற்க முடியாது. சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏகப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இது முழுக்க முழுக்க பணம் சம்பாதிப்பதற்கான நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை அவசியம் தடைசெய்ய வேண்டும். விஷத்தில் கொஞ்சம் தேன் கலந்து உண்டால் அது அமிர்தமாக மாறுமா? அதைப்போல்தான் இதுவும். இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளிக்கவுள்ளேன். அப்படியும் இந்தப் போட்டியை நிறுத்தவில்லை என்றால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

ராஜ்குமார் - நாகரத்தினம்
ராஜ்குமார் - நாகரத்தினம்

இதுகுறித்து கல்லல் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் பேசினோம். “பப்ஜி விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதிகோரி, எங்களுக்கு எந்த விண்ணப்பக் கடிதமும் வரவில்லை. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களைப் பொறுத்து, பப்ஜி போட்டியை நடத்த அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்வோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு