Published:Updated:

பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு?

Economy
பிரீமியம் ஸ்டோரி
Economy

பொருளாதாரம்

பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு?

பொருளாதாரம்

Published:Updated:
Economy
பிரீமியம் ஸ்டோரி
Economy

டந்த சில நாள்களாக செய்தித்தாள்களைத் திறந்தாலே, ‘இன்று ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு’, ‘மாதத்துக்கு பத்து நாள்கள் உற்பத்தி நிறுத்திவைப்பு’ என்கிற செய்திகளைப் படிப்பது வாடிக்கையான விஷயமாகிவிட்டது.

ஐந்து ரூபாய் மட்டுமே மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கக்கூட பொதுமக்கள் இரண்டுமுறை யோசிக்க முக்கியக் காரணம், பொருளாதார நெருக்கடிதான் என முன்னணி நிறுவனமான பிரிட்டானியாவின் தலைவர் வருண் பெர்ரி சொல்லியிருக்கிறார். மற்றொரு முன்னணி பிஸ்கெட் நிறுவனமான பார்லேஜியில் பத்தாயிரம் பேர் வரை வேலையிழக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நமது பொருளாதாரம் சுணக்கம் காணத் தொடங்கியிருப்பதற்கான பல தகவல்கள் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட நிதி மதிப்பாய்வு அறிக்கையில் உள்ளன.

Economy
Economy

இந்த மந்தநிலை இப்போது உருவானதல்ல. உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் சில, சின்னச் சின்னதாக உருவாகி, கடந்த பல மாதங்களாக நீறுபூத்த நெருப்பாக வளர்ந்து, தற்போது எரிமலைபோல வெடித்துச் சிதறியிருக்கிறது. பொருளாதார மந்தநிலைக்கான சர்வதேசக் காரணங்களை முதலில் பார்ப்போம்.

காரணம் 1: வல்லரசுகளுக்கிடையிலான வர்த்தகப் போர்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டபிறகு, அமெரிக்காவிற்கான மற்ற நாடுகளின் ஏற்றுமதிகள் மீது ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துவருகிறார். அமெரிக்காவை ஓர் உற்பத்திக் கேந்திரமாக மீண்டும் மாற்றுவேன் என்ற கோஷத்துடன் வலம்வரும் ட்ரம்ப்பின் முக்கிய இலக்கு சீனாவாக இருந்தாலும், இந்தியா போன்ற நட்பு நாடுகளும் அவருடைய தாக்குதல் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. குறிப்பாக, இந்தியா கடந்த நாற்பதாண்டுகளாக அனுபவித்து வரும் சிறப்புச் சலுகைகள் டிரம்ப்-ன் அதிரடி நடவடிக்கையால் நீக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

உள்நாட்டில் அரசியல்ரீதியான சவால்களைச் சந்தித்துவரும் சீனாவும் அமெரிக்காமீது பதில் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. சீனாவின் கரன்சியான யுவானின் மதிப்பு குறைப்பு, அமெரிக்க விவசாயப் பொருள்கள் மீதான தடை எனப் பதிலடி கொடுத்துவரும் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. இந்த வர்த்தகப் போரின் விளைவாக மட்டும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பாண்டில் 0.3% குறையும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

காரணம் 2: பிரெக்ஸிட் பீதி

எந்தவொரு ஒப்பந்தமும் இறுதிசெய்யப்படாத நிலையிலும் ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வருகிற அக்டோபர் 31-ம் தேதியன்று உறுதியாக வெளியேறும் என்ற அந்த நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டுக் கணக்கின்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 85 பில்லியன் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.75 லட்சம் கோடி) மதிப்புள்ள பலவிதமான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளனது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்லும்பட்சத்தில் இந்தியாவின் ஏற்றுமதி பெரும்பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. தவிர, பிரிட்டனில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் அனைத்துமே மாறுதலுக்கு உள்ளாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்தப் பாதிப்புகள்தான் தற்போது நமக்குத் தெரியத் தொடங்கியிருக்கின்றன.

காரணம் 3: அச்சுறுத்தும் அரேபியப் பிராந்தியம்

ஈரான் மீதான வர்த்தகத் தடைகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அமெரிக்கா. குறிப்பாக, ஈரானிலிருந்து உலகின் எந்த நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என நிபந்தனை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி யிருக்கிறது. இதனால் அரேபியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல்கள் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரச் சுமூகநிலையைப் பாதித்திருப்பதுடன் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறையை ஏற்படுத்தியிருப்பதுடன், டாலரின் மதிப்பு கடுமையாக உயரவும் காரணமாக அமைந்திருக்கிறது.

பொருளாதார மந்தநிலைக்கான உள்நாட்டுக் காரணங்களை இனி பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காரணம் 4: வளர்ச்சிக்கு உலைவைத்த வேலை வாய்ப்பின்மை

பொருளாதார மந்தநிலைக்கு முக்கியக் காரணம், வேலைவாய்ப்பின்மைதான். வாகனங்கள், டிவிகள், ரியல் எஸ்டேட் போன்று அதிக செலவினம் பிடிக்கும் நீண்ட காலப் பயன்பாட்டுப் பொருள்கள் மட்டுமல்லாமல், எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் குறுகிய கால நுகர்பொருள்களின் விற்பனையும் பாதித்திருப்பது வேலைவாய்ப்பின்மையின் தீவிரத்தையே காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (6.1%) வேலை வாய்ப்பின்மை உக்கிரம் அடைந்திருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசாங்கம் இருக்கிறது.

பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு?

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாகிய ‘மேக் இன் இந்தியா’ எதிர்பார்த்த அளவிற்குப் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று கவலை தெரிவித்திருக்கிறார் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக், இதற்கு முக்கியக் காரணம், இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்திக்குப் பதிலாக இறக்குமதி செய்ய அதிகம் விரும்பியதுதான் என்று அவர் சொல்லியிருக்கிறார். இந்திய நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், வேலைகளை ஏற்றுமதி செய்வது ஏன் என்பதை அரசு கவனமாக ஆராயவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆண்டு தோறும் ஒரு கோடிக்கும் மேலான இளைஞர்கள் வேலை சந்தையில் கால்வைக்கும் இன்றைய நிலையில் நாயக் சொன்னது கவனிக்கத்தக்கது.

காரணம் 5: இடியாப்பச் சிக்கலில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள்

ஐ.எல்.எஃப்.எஸ், டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளில் சிக்கி, மீண்டுவர முடியாத நிலையில் உள்ளன. இந்த இரு நிறுவனங்கள் வாங்கிய கடன் மட்டுமே சுமார் ரூ.2 லட்சம் கோடிக்குமேல். இந்தக் குளறுபடி வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடு பெரும் கேள்விக்குள்ளாகி யிருக்கிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குப் புதிய முதலீடு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக வாகனக் கடன், வீட்டுக்கடன் என எந்தக் கடனையும் தரமுடியாத நிலையில் இருப்பதால், இந்த நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளது.

காரணம் 6: பெரும் கடனில் இந்தியத் தொழில் நிறுவனங்கள்

இந்தியத் தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன் அளவு ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது. ஒரு நிறுவனம் வாங்கிய கடனுக்கான வட்டியைத் திரும்பச் செலுத்துவதில் எந்த அளவுக்குத் திடமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்கள் உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் 2007-க்குப்பிறகு கடன் அளவைக் குறைத்துக்கொண்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் கடன் வாங்கி, அந்தக் கடனை எப்படித் திரும்பக் கட்டப்போகிறோம் என்று தெரியாமல் தவிக்கின்றன.

2008-ல் எப்படிச் சமாளித்தோம்?

கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கியபோது, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் அதன் பாதிப்பு கடுமையாக எதிரொலித்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசின் துரித நடவடிக்கை யால் இந்தியா வெகுவிரைவில் பொருளாதார சுணக்கத்திலிருந்து மீண்டதுடன், ஒரே ஆண்டில் 8% வளர்ச்சியையும் எட்டியது. சுங்க வரியில் 4% வரிக் குறைப்பு, ரூ.20,000 கோடி திட்டச் செலவினம் மற்றும் ரூ.10,000 கோடி அடிப்படை கட்டுமானத் திட்டங்களில் முதலீடு எனச் சில அதிரடி நடவடிக்கைகளை அப்போதைய அரசாங்கம் எடுத்தது.

ஆனால், பொருளாதார ஊக்குவிப்பால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக, பல பொருள்கள் விலை உச்சத்தைத் தொட்டது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையோ 8 சதவிகிதமாக அதிகரித்தது. மேலும், ரியல் எஸ்டேட் போன்ற உற்பத்தியற்ற துறைகளில் தேவையற்ற பண நடமாட்டம் பெருமளவு அதிகரித்ததுடன், தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினங்களும் கடுமையாக உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நோயைவிட நோயைப் போக்கத் தரப்பட்ட மருந்து அதிக பாதிப்பை உருவாக்குவதாக அமைந்துவிட்டது அன்றைய நடவடிக்கை. இந்தக் கசப்பான அனுபவத்தின் விளைவாகவே தற்போதைய அரசு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்கத் தயங்குகிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. தற்போதைக்கு மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதுபோலத் தோன்றினாலும், நுகர்பொருள்கள் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ள சூழ்நிலையில், வரி வருவாய் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே. எனவே, அதிகப்படியான செலவினத் (பட்ஜெட்) திட்டங்கள் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு?

வட்டிவிகித மாற்றங்கள்

வட்டி விகிதக் குறைப்பு நுகர்வோர் விருப்பத்தைத் தூண்டக்கூடியவை என்பதால் மத்திய வங்கி தன் பங்கிற்கு வட்டி விகிதங்களை அதிரடியாகக் குறைத்துவருகிறது. மேலும், வட்டிவிகிதக் குறைப்பு, தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினத்தைக் குறைத்து சர்வதேச அரங்கில் திறம்படப் போட்டியிட உதவும். ஆனால், மத்திய வங்கியின் வட்டிக் குறைப்பானது நுகர்வோரை முழுமையாகச் சென்றடைய வேண்டும்.

கொள்கை சீர்திருத்தங்களின் அவசியம்

எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை அதிகமாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், பொருளாதாரத் தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவர நம்மிடம் உள்ள ஒரே வழி, அதிரடியான கொள்கைச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதுதான். வாஜ்பாய் அரசிற்குப் பிறகு (சிலவற்றைத் தவிர) முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்.

தாராளமயப் பொருளாதாரம், பணியாளர் சட்டத் திருத்தங்கள், வங்கிச் சீரமைப்பு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, எளிமையான வரி விதிமுறைகள், தொழில் முனைவுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, ஒற்றைச் சாளர அனுமதிகள் எனப் பல முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவை நோக்கி இன்னும் அதிகமாக ஈர்க்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் மற்றும் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள சீனா உருவாக்கவுள்ள வெற்றிடத்தை இந்தியா திறம்பட அணுகி, அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். மத்திய அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைச் சரியாகப் பயன்படுத்தி, பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் நமது பொருளாதார தேக்கநிலையும் முடிவுக்கு வரும்.

ஆட்டோ ஜி.எஸ்.டி... ‘‘18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்!’’

இளங்கோ, இயக்குநர், ஆர்.எஸ்.எம். ஆட்டோகேஸ்ட், கோவை

பொருளாதார மந்தநிலை... என்ன காரணம், என்ன தீர்வு?

‘‘இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு முக்கியமான காரணம், ஆட்டோமொபைல் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதுதான். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கனரக வாகனங்களான லாரி மற்றும் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங் களுக்கான உதிரிபாகங்களுக்கு ஜி.எஸ்.டி வரி 28% விதிக்கப்படுகிறது. ஆடம்பரமான பொருள்களுக்கு 28% வரி விதித்தால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், லாரிகளோ, பஸ்களோ அல்லது இருசக்கர வாகனங்களோ ஆடம்பரமானவை அல்ல; இன்றைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. ஆட்டோ உதிரிபாகங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால், அதிக விலைக்கு விற்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். எனவே, ஆட்டோ உதிரி பாகங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism