Published:Updated:

சோஷியல் மீடியாவில் நீங்கள் எப்படி?

வேலை தேடுவோர் கவனத்துக்கு!

பிரீமியம் ஸ்டோரி

ந்த நாள்களில் சமூக வலைதளப் பக்கம்தான் ஒருவரின் குணாதிசயத்தைச் சரியாகப் பிரதிபலிக்கிறது. அதனால்தான் ஒருவர் வேலை கேட்டுப் போகும்போது அந்த நிறுவனம், அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைப் பரிசோதிக்கிறது. புதிதாக வேலை தேடுவோர், வேலை மாறுவோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைச் சொல்கிறார் போலாரீஸ் நிறுவனத்தின் முதன்மை ஹெச்.ஆர் பாலமுருகன்.

சோஷியல் மீடியாவில் நீங்கள் எப்படி?

வேலை தேடுபவர்கள் செய்ய வேண்டியவை!

1. முன்பெல்லாம் வேலைக்கு ஒருவரைச் சேர்ப்பதற்கு முன்னர் அவருடைய முன்அனுபவங்கள் குறித்து விசாரிப்பார்கள். ஆனால், இன்று வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தைவைத்தே அவர்களை எடைபோட்டுவிடுகிறார்கள். எனவே, வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்கள் வலைதளப் பக்கத்தை ஒரு முறைக்கு நான்கு முறை பரிசோதித்துக்கொள்வது நல்லது. உங்களின் நன்மதிப்பைக் கெடுக்கக்கூடிய பதிவுகள் இருந்தால், அவற்றை உடனே நீக்கிவிட வேண்டியது அவசியம்.

2. உங்களை இன்டர்வியூ செய்பவர் கேட்டால், ‘ஃபேஸ்புக் பயன்படுத்துவதில்லை’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. அதைவிட பெரிய தவறு எதுவும் இருக்க முடியாது. ஏனெனில், அதன் பிறகு உங்களுக்கு ஃபேஸ்புக் பக்கம் இருப்பது தெரியவந்தால் உங்கள் மீதான நம்பிக்கை பறிபோகும்.

3. உங்கள் பெயரை கூகுள் செய்து பாருங்கள். உங்களைப் பற்றி பர்சனலாகவோ, அவதூறாகவோ வரும் விஷயங்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்குங்கள். சமூக வலைதளங்களில் தேவையில்லாததைச் செய்யாமல், பயனுள்ள விஷயங்களைப் பகிர்வதும், பயனுள்ள பதிவுகளைப் போடுவதும் உங்கள் நன்மதிப்பை உயர்த்தும்.

சோஷியல் மீடியாவில் நீங்கள் எப்படி?

4. லிங்க்டுஇன் அக்கவுன்ட் ஒன்றை வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் பயோ டேட்டாவும் லிங்க்டுஇன்னிலுள்ள தகவல்களும் பொருத்தமாக இருக்கின்றனவா என்று சரிபாருங்கள். ட்விட்டர், லிங்க்டுஇன் போன்ற வளைதளங்களில் துறை சார்ந்த வல்லுநர்களை ஃபாலோ செய்யுங்கள். துறைரீதியாக உங்களுக்குத் தெரிந்தவற்றை அடிக்கடி போஸ்ட் செய்யுங்கள். துறைரீதியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள். அறிவுக்கான உங்களின் தேடல், உங்களுக்கு வேலை தர நினைப்பவர்களை நிச்சயம் கவரும்.

5. லிங்க்டுஇன், ட்விட்டர் போன்ற வளைதளங்களின் புரொஃபைலில் ஃபார்மல் போட்டோக்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த போட்டோக்கள் ஹை ரெசல்யூஷனில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் பரவும் வதந்திகளை எந்தக் காலத்திலும் சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்.

செய்யக் கூடாதவை!

1. சமூக வளைதளங்கள் வேலைவாய்ப்புகளைக் கண்டுபிடிக்க உதவும். அதே நேரம், கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவும் செய்யும். எனவே, உங்கள் சமூக வளைதளப் பக்கங்களை பிரைவேட்டாக வைத்துக்கொள்ளுங்கள். அக்கவுன்ட் பிரைவேட்டாக இருக்கிறது என்பதற்காக அவற்றில் அவதூறான, ஆபாசமான கருத்துகளையோ, புகைப்படங்களையோ போஸ்ட் செய்யாதீர்கள்.

Social Media
Social Media

2. உங்கள் முன்னாள் நிறுவனத்தைப் பற்றி அவதூறாக எழுதாதீர்கள். உங்களைப் பற்றிய பொய்யான தகவல்களை எழுதாதீர்கள்.

3. சமூக வளைதளங்களில் அதிக நண்பர்களை வைத்துக்கொள்வதைவிட, தரமான நண்பர்களை வைத்துக்கொள்வது சிறந்தது. ரெக்வஸ்ட் அனுப்பும் அனைவரையும் அக்செப்ட் செய்யாதீர்கள். நன்கு ஆலோசனை செய்த பிறகே ரெக்வஸ்ட்டை அக்செப்ட் செய்யுங்கள்.

4. தனிப்பட்ட முறையில் உங்களுக்கென அரசியல் கருத்துகள், சமூகம் சார்ந்த கொள்கை முடிவுகள் இருக்கும். அந்தக் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்தால், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

5. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் கம்பெனியின் மேலாளர், முதலாளி போன்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் தேவையற்ற மெசேஜுகள் அனுப்புவதையும், வேலை வழங்குமாறு தொல்லை செய்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

வேலையில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை!

1. நீங்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியராக இருக்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் சமூக வலைதளங்களில் நிறுவனத்தின் பிரைவசியை மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம் எதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது, எதை அமைதியாக வைத்திருக்க விரும்புகிறது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

2. உங்கள் நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் திட்டங்கள் குறித்த நற்கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்யுங்கள். நிறுவனத்தைப் பற்றிய நேர்மறையான கருத்துகளைப் பகிர்வது உங்கள் மேலதிகாரிகளை வெகுவாகக் கவரும்.

3. வேலை சார்ந்த புகைப் படங்களையும், பர்சனல் புகைப்படங்களையும் வேறுபடுத்தி வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக, உங்கள் நிறுவனத்தில் நடந்த பீட்சா பார்ட்டியைப் பற்றிய புகைப்படத்தை போஸ்ட் செய்கிறீர்கள் என்றால், #worklife போன்ற ஹேஷ்டாக்கு களைப் பயன்படுத்துங்கள்.

4. உங்கள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறதென்றால், அதைப் பற்றிய எதிர்பார்ப்பைச் சமூக வலைதளப் பக்கத்தில் சுவாரஸ்யமாக வெளியிட்டால் நல்லது.

5. உங்கள் நிறுவன ஊழியர்கள் சிறப்பாக ஒன்றைச் செய்தால், அவர்களைப் பகிரங்கமாகப் புகழ்ந்து பேசுங்கள். அந்த ஊழியரைச் சமூக வலைதளங்களில் டேக் செய்து, ‘சிறப்பான வேலை’ என்று புகழ்வது, மற்ற ஊழியர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்யக் கூடாதவை!

1. எந்த நிலையிலும் நிறுவனத்தின் தனியுரிமை தொடர்பான தகவல்களைப் பகிராதீர்கள். ஒவ்வொரு நிறுவனமும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் போட்டியாளர்களிடமிருந்து சில தகவல்களை மறைத்துவைக்க நினைக்கும். அது போன்ற செய்திகளை போஸ்ட் செய்யாமல் இருப்பது நல்லது.

Social Media
Social Media

2. நிறுவனத்தின் நிதித் தகவல் அல்லது தொடர்பு தகவலைப் பற்றி பொதுவெளியில் விவாதிப்பது வாடிக்கையாளர்கள், முதலாளிகள் மற்றும் பிறரைக் கடுமையாக எரிச்சலடையச் செய்யும். சில நேரங்களில் அவை கிரிமினல் குற்றமாகவும் மாறலாம். எனவே, அவற்றைப் பகிராமல் இருப்பது மிகவும் நல்லது.

3. முதலாளிகள் அல்லது அவர்களின் நடைமுறைகள் பற்றி இழிவாகப் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். எல்லோரும் எப்போதாவது பணியிடச் சூழ்நிலைகளைப் பற்றி பேச விரும்புகிறார்கள். ஆனால், அந்த நேரங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பகிராமல் இருங்கள். ஏனெனில், மோசமன கருத்துகள் உங்களை வேலையிலிருந்து நீக்கிவிடக்கூடும்.

4. வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சந்தேகத்தைப் பொதுவெளியில் தீர்க்காமல், இ-மெயில் மூலம் பதில் அனுப்புங்கள். அதேபோல ஒரு போட்டியாளரை பகிரங்கமாகத் தாக்குவதும் சரியானதல்ல.

5. அலுவலகத்தில் பரவும் வதந்திகளை எந்தக் காலத்திலும் சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் உங்களை எல்லோரும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வேலைக்கு எந்தப் பாதகமும் வராது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு