Published:Updated:

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

சொத்து, நிதி...
நாமினி நியமனம்
ஏன் அவசியம்?
பிரீமியம் ஸ்டோரி
News
சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்?

நியமனதாரர் பணத்தைப் பெறலாமே தவிர, எந்த ஒரு நிதியத்திலும் பணத்தை அவர் உரிமை கோர முடியாது.

ரலாறு காணாத கொரோனாவின் கோரத்தாண்டவம், நமக்குள் பல சிந்தனைகளை எழுப்பியிருக்கிறது.

சொல்லப்போனால், சம்பாதிப்பவர்களைவிட சம்பாதிப்போரைச் சார்ந்து வாழும் குடும்பத்தாரிடையே கொரோனாவின் தாக்கம் கவலையை விதைத்திருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் எடுக்க வேண்டிய நடவடிக்கை ஒன்று உண்டு. அது, `வாரிசு நியமனம்’ என்று சொல்லப்படும் நாமினி நியமனம். முக்கியமான இந்த விஷயத்தை நாம் செய்தே ஆக வேண்டும், அப்படிச் செய்ய முற்படும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று விரிவாகப் பார்ப்போம்.

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாரிசுதாரர் நியமனம் அவசியம்!

பொதுவாக, சொத்து, சேமிப்பு, முதலீடு, காப்பீடு, அன்யூட்டி, பென்ஷன், குடும்ப பென்ஷன், கிராஜுவிட்டி எனப் பல வகையான நிதி ஆதாரங்களைக் குடும்பத் தலைவருக்கு அடுத்து அவருடைய வாரிசுகள் பெறுவதில் பலவிதமான விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் சிந்தும் வியர்வையைச் சிறிதும் பொருட்படுத்தாமல் உழைத்துச் சம்பாதிப்பவருக்கு, எதிர்பாராதவிதமாக இயற்கை நியதியான மரணம் சம்பவிக்கும்பட்சத்தில், அவர் கஷ்டப்பட்டுச் சேர்த்த நிதியும் சொத்தும் அவருடைய வாரிசுகளுக்கு அவரின் விருப்பப்படியே போய்ச் சேர, அவர் தனது ஆயுள் காலத்திலேயே `இன்னாருக்கு இன்ன நிதியத்தில், இவ்வளவு பங்கு’ என்று வாரிசு நியமனம் செய்துவைக்க வேண்டியது அவசியம். இதை அனைவரும் உணர வேண்டிய காலகட்டம் இது.

எனவே, வாரிசு நியமனம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளிலுள்ள நிதியும் சொத்துகளும், தனக்குப் பிறகு தனது சந்ததியினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதில் குறைபாடு மற்றும் முறைகேட்டைத் தவிர்க்க வாரிசு நியமனம் செய்வதற்கு, இன்றைய தேதி வரை திருத்தம் செய்யப்பட்டுள்ள விதிகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குடும்ப பென்ஷன்

பணியிலுள்ள ஊழியர் அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரால் அவரின் குடும்பத்துக்குக் கிடைக்கும் குடும்ப பென்ஷன், கிராஜுவிட்டி, பென்ஷன் கம்யூடேஷன் முதலான பணப் பலன்களுக்கு நாமினியை யார் என்று முடிவு செய்துவைப்பது முக்கியமான விஷயம். காரணம், இதர பணப் பலன்களெல்லாம் ஒரே தவணையில் (One Time Payment) கொடுத்துத் தீர்ந்துவிடுபவை. ஆனால், குடும்ப பென்ஷன் மட்டும்தான் வாழ்நாள் முழுக்கக் கிடைப்பது. எனவே, அரசு விதிகளின்படி, பென்ஷன் பெற வாய்ப்புள்ள குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

1. மனைவி அல்லது மனைவியர்-சட்டப்பூர்வமாகப் பிரிந்த மனைவி/ மனைவியர் உட்பட.

2. கணவர் - சட்டபூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்ட கணவர் உட்பட.

3. மகன்கள் - மாற்றுத்தாய்/ மாற்றுத்தந்தை மகன்கள், தத்தெடுத்த மகன்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான மனைவி மூலம் பிறந்த மகன்கள்.

4. மணமாகாத மகள்கள் – மாற்றுத்தாய்/ மாற்றுத்தந்தை மகள், தத்தெடுக்கப்பட்ட மகள்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான மனைவி மூலம் பிறந்த மணமாகாத மகள்கள்.

5. விதவை மகள்கள் – மாற்றுத்தாய்/ மாற்றுத் தந்தை விதவை மகள், தத்தெடுக்கப்பட்ட விதவை மகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான மனைவிக்குப் பிறந்த விதவை மகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியமனப் படிவம் (Nomination) இல்லாமலேயே பெறக்கூடிய ஒரே நிதியம் குடும்ப பென்ஷன் மட்டும்தான். ஏனென்றால் ஊழியர் ஆண் என்றால் அவரின் மனைவியும், பெண் எனில், அவரின் கணவருமே குடும்ப பென்ஷன் பெறத் தகுதியுள்ளவர்கள் .

எனவே, குடும்ப உறுப்பினர் என்ற படிவத்தில் யாருடைய பெயர் மனைவி அல்லது கணவர் எனப் பதிவு செய்யப் பட்டுள்ளதோ, அவருக்கே குடும்ப பென்ஷன் கிடைக்கும். ஆகையால் பிழையின்றி, மனைவி அல்லது கணவரின் முழுப்பெயரையும் படிவத்தில் பதிவுசெய்வது பாதுகாப்பானது. அதுமட்டுமல்ல... கணவர்/மனைவி இறந்துபோகும் நிகழ்வில் மறுமணம் செய்துகொண்டால் புதிய மனைவி/கணவர் பெயரை மேற்கண்ட குடும்ப உறுப்பினர் பட்டியலைப் புதுப்பித்து, பதிவு செய்வது முக்கியம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பணியில் இருக்கும்போது மட்டுமல்ல, பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் மனைவி/கணவர் இறந்துபோகலாம்; மறுமணம் செய்யலாம். அப்போது மனைவி/கணவர் பெயரை அலுவலகம் மூலம் மாநிலக் கணக்காயருக்கு மனுச் செய்து பதிவுசெய்வது இன்னமும் அவசியம். இதுமட்டுமல்ல, பணியில் இருக்கும்வரை திருமணமே செய்யாமல் இருந்துவிட்டு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளும் மனைவி /கணவருக்கும் குடும்ப பென்ஷன் உண்டு. இதற்கும் உடனடிப் பதிவு மிக மிக அவசியம்.

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

பணியில் இருக்கும்போதோ, பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகோ கணவன்-மனைவி இருவருமே இறந்துவிட்டால், மேலே கொடுக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் பட்டியலின் வரிசை எண் 3 முதல் 5 வரையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வயது மூப்பின்படி குடும்ப பென்ஷன் கிடைக்கும் (நிபந்தனை உண்டு).

மணமாகாத ஊழியர் இறந்துபோனால் தந்தை, தாய், மாற்றுத்தாய், தத்தெடுத்துக்கொண்ட மகன், மகள் ஆகியோரும் குடும்ப பென்ஷன் பெறலாம் (நிபந்தனை உண்டு).

கிராஜுவிட்டி, கம்யூடேஷன், விடுப்புச் சம்பளம்..!

மணமான ஊழியர் தனக்குச் சேர வேண்டிய கிராஜுவிட்டி, பென்ஷன் கம்யூடேஷன், விடுப்பு நாள்களுக்கான சம்பளம், சிறப்பு பிராவிடன்ட் ஃபண்ட் முதலானவற்றுக்கு குடும்ப உறுப்பினர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள 11 வகை உறவுகளில் யாரை வேண்டுமானாலும் ஒவ்வொன்றுக்கும் நியமனம் செய்து வைக்கலாம். ஏதேனும் ஓர் உறவுமுறைக்கே அனைத்தையும் பெற்றுக்கொள்ள நியமனம் எழுதலாம். கிராஜுவிட்டி போன்ற ஒரு வகை பணப்பலனுக்கே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுமுறைகளை நியமனம் செய்யலாம். ஆனால், நியமனம் செய்யாமல் இறந்துவிட்டாலோ, செய்யப்பட்ட நியமனம் முழுமையாக இல்லாவிட்டாலோ மேற்கண்ட நான்கு நிதியங்களும், குடும்ப உறுப்பினராக வரிசை எண் 1 முதல் 4 வரை உள்ள உறவுமுறையினருக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

சேர்த்துவைத்த நிதி யாருக்கு?

வங்கி டெபாசிட், காப்பீட்டுத் திட்டங்கள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் நியமன முறை வேறுபட்டதாக இருப்பதால் சற்றே கூடுதல் கவனத்துடன் நியமனம் செய்வதும், உயில் எழுதிவைப்பதும்கூட அவசியமாகிவிடுகிறது.

வங்கி டெபாசிட்டுகள்..!

சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்கு நியமனதாரரை நியமனம் செய்வது வாடிக்கையாளருக்குத்தான் அவசியமே தவிர, வங்கிக்கு அல்ல. ஒரு கணக்குக்கு ஒரு நியமனதாரர். அந்த நியமனதாரர், கணக்குத் தொடங்குபவரின் வாரிசாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தனிநபராக இருந்தால் போதுமானது. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிடும் நிலையில் நியமனதாரரை அடையாளம்கண்டு, இறந்தவரின் கணக்கிலுள்ள பணத்தை நியமனதாரருக்கு வழங்குவதுடன், வங்கியின் கடமை நிறைவு பெற்றுவிடும்.

நியமனதாரர், இறந்துபோனவரின் வாரிசுதானா என்ற சட்டச் சிக்கலில் வங்கி நுழையாது. எனவே, ஒருவர் இறந்துபோனால், வாரிசுதாரர் அணுக வேண்டியது நியமனதாரரையே தவிர, வங்கியை அல்ல. ஏனெனில், ‘நியமனதாரர்’ என்பவர் பணத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவரே தவிர பணத்துக்கு உரிமையாளரல்ல.

காப்பீட்டுத் திட்டங்கள்..!

இதிலும்கூட யாரை வேண்டுமானாலும் நியமனம் செய்யலாம். ஆயுள் காப்பீட்டுக்கும், நியமனதாரர் என்பவர் பணத்தைப் பெறுபவர்தானே தவிர எடுத்துக்கொள்ளும் உரிமை பெற்றவரல்ல. இதனால் எழும் பூசல்களைத் தவிர்க்கும் வகையில், பயன்பெறும் நியமனதாரர் முறை 2015-ம் ஆண்டு முதல் காப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆயுள் காப்பீடு செய்பவர் தனது, மனைவி, குழந்தைகள் போன்ற வாரிசு உரிமை பெற்றவர்களை நியமனம் செய்யலாம்.

பணம் பெறுவதும், பெற்ற பணத்தைச் சொந்தம் கொண்டாடுவதும் பயன்பெறும் நியமனதாரர்களாகவே இருப்பார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பயன் பெறும் நியமனதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுதாரர் மட்டுமே பணம் பெறலாம். விடுபட்ட வாரிசுதாரர் கோரிக்கை எழுப்ப முடியாது.

சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம்

நிறுவனப் பங்குகள்..!

நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, நியமனதாரர் கட்டாயமல்ல. என்றாலும், அதற்கான படிவம் SH-13-ல், இரு பிரதிகளில் நியமனதாரரைக் குறிப்பிட்டு படிவத்தைத் தாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் பங்குப் பத்திர நியமனம், முந்தைய பத்திகளில் விவரிக்கப்பட்ட நியமனங்களிலிருந்து இரண்டு வகைகளில் வேறுபடுகிறது .

அதாவது, 1.பங்குப் பத்திரங்களைப் பொறுத்தவரை, பலரும் சேர்ந்து வாங்கியிருக்கும் பங்குப் பத்திரத்துக்கு ஒருவரை மட்டுமே நியமனம் செய்யலாம். 2.பங்குப் பத்திரத்துக்கு நியமனம் செய்யப்படும் ‘நாமினிக்கு’ அந்தப் பங்கின் மீது முழு உரிமையும் உண்டு. அதாவது, பங்கை வாங்கியவர் இறந்துவிட்டால், நாமினி பங்கை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது மற்றொரு நபர் பெயருக்கு மாற்றிவிடலாம்.

நிறுவனச் சட்டம் (Companies Act) 1956-ன்படியான நிலைப்பாடு இது. ஆனால், தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பு என்னவென்றால், ‘உயிலில் உள்ளவரின் வாரிசு உரிமையை நியமனத்தின் மூலம் ரத்து செய்ய முடியாது’ என்பதே. எனவே, இதில் கூடுதல் கவனம் தேவை.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் போன்ற இதர நிதியங்களிலும் நியமனப் படிவம் தாக்கல் செய்வது நடைமுறையில் உள்ளது. என்றாலும், நியமனதாரர் பணத்தைப் பெறலாமே தவிர, எந்த ஒரு நிதியத்திலும் பணத்தை அவர் உரிமை கோர முடியாது.

ஆனால், நியமனப் படிவத்தை எழுதிவைத்து இறந்துபோனவர், அத்துடன் இன்னின்னாருக்கு இன்னது என்று குறிப்பிட்டு ‘உயில்’ ஒன்றையும் எழுதி வைத்திருந்தால், நியமனதாரரிடமிருந்து பணத்தைப் பெற்று உயிலில் கண்ட வாரிசுகளுக்குப் பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிடலாம். உயில் இல்லாமல், நியமனப் படிவம் மட்டுமே உள்ள நிதியங்களுக்கு, இறந்துபோனவரின் மதம் சார்ந்து நிதியமானது பங்கிடப்படும். உதாரணமாக, இறந்துபோனவர் ‘இந்து’ சமயத்தைச் சார்ந்தவர் என்றால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி நிதியம் பகிர்ந்து அளிக்கப்படும்.

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், வாரிசுஸ்ரீதாரர்கள் கிளாஸ் I, கிளாஸ் II என இரு பிரிவாக உள்ளனர். கிளாஸ் I-ல் எவரும் இல்லையென்றால், கிளாஸ் II-ல் உள்ள உறவு முறையினர் பணத்தைப் பெறும் தகுதி உடையவராகிறார்கள். இதேபோல் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கும் வாரிசுரிமைச் சட்டம் உண்டு. அதன்படி நிதியானது பகிர்ந்தளிக்கப்படும்.

சிக்கல் இல்லாமல் சொத்தை அனுபவிக்க..!

கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்த சொத்தைச் சந்ததியினர் சண்டை சச்சரவின்றி நிம்மதியாக அனுபவிக்க வேண்டுமெனில், வாரிசுதாரர்களைத் தெளிவாக, எந்தக் குழப்பமும் இன்றி, நியமிப்பது அவசியம்.

கோவிட் 19-க்குப் பிறகு திடீர் மரணங்கள் ஏற்படும் நிலையில், வாரிசு நியமனம் குறித்து தெளிவாக அறிந்து செயல்படுவது நல்லது!

அசையும் மற்றும் அசையாச் சொத்துகள்..!

வீடு, மனை, தோட்டம், தங்க நகைகள் முதலான சொத்துகளைப் பொறுத்தவரை சொத்துக்கு உரியவர் இறந்துவிட்டால், எந்த வாரிசுதாரருக்குச் சொத்து சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தாரோ... அந்த வாரிசுதாரருக்கே சொத்து போய்ச்சேரும்.

உதாரணமாக ‘A’ என்பவர், தான் சம்பாதித்துச் சேர்த்த பலவித சொத்துகளுக்கும் தன் ‘B’ என்கிற தம்பியை நியமனம் (Nominate) செய்கிறார் என வைத்துக்கொள்வோம். நாமினேஷனை தம்பி பெயருக்கு எழுதி வைத்தவர், தனது உயிலில் `எனது சொத்து முழுவதும் தன் பிள்ளைகளுக்கே சேரும்’ என்று எழுதிவிட்டு இறந்துபோயிருந்தால், பிள்ளைகளுக்குத்தான் அந்தச் சொத்துகள் போய்ச்சேரும்.

இறந்துபோனவர் உயிர் எழுதி வைக்காமலேயே இறந்துவிட்டாலும், ‘B’ என்பவர் சொத்தை பிள்ளைகளுக்குத்தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர, அவரே எடுத்துக்கொள்ள முடியாது.

இந்திய வாரிசு உரிமைச்சட்டம், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதச் சட்டம் அனைத்துக்குமான நடைமுறை இதுதான். அதேநேரம், இறந்துபோன சொத்துதாரர் தனது சொத்து முழுவதும் தனது தம்பி ‘B’ க்குத்தான் என்று உயில் எழுதியிருந்தால், அந்தச் சொத்து ‘B’ க்குத்தான் போய்ச்சேரும்.

எனினும், அந்தச் சொத்து பூர்வீகச் சொத்தாக இருந்தால், இறந்துபோனவரின் சொத்து ‘B’க்கு சேரும்படி உயில் எழுதியிருந்தாலும், சொத்து அது அவருக்குக் கிடைக்காது; உடனடிக் குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் (Immdiate Family Members) கிடைக்கும்.

இறந்துபோனவர் தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ கடன் கொடுத்திருந்தாலும், வாரிசுதாரர்கள் நீதிமன்றச் சான்று பெற்று கடனை வசூலித்துக்கொள்ளலாம்.