Published:Updated:

`முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு விதிகள் பழைமையானவை!’ - உச்ச நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு

அணையின் பராமரிப்பு விதிகள் பழைமையாக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.

தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இருக்கிறது முல்லைப்பெரியாறு அணை. அதைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை இன்றளவும் நினைக்கும் தேனி மக்கள், அவரது பிறந்தநாளில், பொங்கல்வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், பென்னிகுவிக்கின் 180-வது பிறந்தநாள் 10 நாள்களுக்கு முன்னர் தேனியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், அணை விவகாரம் தொடர்பாக புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்விதத்தில், கேரளா அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது விவசாயிகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
பெருமைமிகு முல்லைப்பெரியாறு அணை - 125 வது ஆண்டு சிறப்புப் பகிர்வு

முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அணை அமைந்திருக்கும் இடம், கேரளாவின் பகுதியாக இருந்தாலும், அணையைப் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் தமிழக அரசு மற்றும் தமிழக பொதுப்பணித்துறை கவனித்துவருகின்றன. இந்தநிலையில், `அணையின் பராமரிப்பு தொடர்பான தமிழக அரசின் விதிகள் மிகவும் பழைமையானவை. அணை தொடர்பான முழு விவரங்களை எங்களிடம் கொடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பைக் கருதி, அணைப் பராமரிப்பு தொடர்பாக புதிய விதியை வகுக்க வேண்டும்’ என்று கேரளா அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
Vikatan

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``அணையின் பராமரிப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அணை பலமாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறது. புதிய விதிகள் வகுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றனர்.

தேனி மாவட்ட விவசாயிகள் கூறும்போது, ``அணை விவகாரத்தில் ஏதாவது பிரச்னை செய்துகொண்டேஇருப்பதுதான் கேரளாவின் வேலை. தமிழக அரசு வலுவான பதிலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அணை உறுதியாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் இறுதித் தீர்ப்பை மீறும் செயலாக கேரளா அரசு நடந்துகொள்வதாகத் தங்களது கண்டனத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு