Published:Updated:

கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கலாமா..? - என்ன சிக்கல்... என்ன லாபம்?

சுரேஷ் பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பார்த்தசாரதி

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கலாமா..? - என்ன சிக்கல்... என்ன லாபம்?

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

Published:Updated:
சுரேஷ் பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பார்த்தசாரதி
கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குவது, அதற்கான பணத்தைச் செலுத்துவது தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி (Myassetsconsolidation.com) பதிலளிக்கிறார்.

நான் கிரெடிட் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். எல்லா நிலுவை தொகைகளையும் சரியான நேரத்தில் செலுத்திவருகிறேன். இது எனது சிபில் ஸ்கோரை பாதிக்குமா?

- செந்தில் குமார், முகநூல் மூலம்

“பாதிக்காது. நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் சரியாகத் திருப்பிச் செலுத்தும் வரை அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கவே செய்யும்.”

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

`கிரெடிட் கார்டு கேட்டு ஒன்றுக்கு இரண்டு நிறுவனங்களில் விண்ணப்பித்தாலே கிரெடிட் ஸ்கோர் குறையும்’ என்கிறார்களே... அது உண்மையா?

- இசக்கி முத்து, கடையநல்லூர்.

“அது உண்மையல்ல. சில கம்பெனிகளில் விசாரித்தால், உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வோர் அணுகுமுறை வைத்திருப்பார்கள். மேலும், அவர்கள் உங்களுடைய விண்ணப்பத்தை ரிஜெக்ட் செய்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறையாது.”

அதிக விலையுள்ள பொருள்களை கிரெடிட் கார்டு் மூலம் வாங்கிவிட்டு, அந்தத் தொகையை இ.எம்.ஐ-ஆக மாற்றிச் செலுத்துவது லாபமாக இருக்குமா?

- ஆ.சுந்தரி, தச்சநல்லூர்

‘‘ஒவ்வொரு மாதமும் பில்லிங் சைக்கிளுக்குள் கிரெடிட் கார்டு கடனைத் திருப்பிச் செலுத்துவது எப்போதும் நல்லது. பெரிய தொகையாக இருந்து, அடுத்த பில்லிங் சைக்கிளுக்குள் செலுத்த முடியவில்லை யென்றால் கடனாக மாற்றி, இ.எம்.ஐ-ஆகச் செலுத்துவது சிறந்த வழி.’’

நான் கேட்காமலேயே என் சம்பளக் கணக்கு இருக்கும் தனியார் வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு ஒன்றை அனுப்பிவைத்திருக்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை. எப்படித் திருப்பிக் கொடுப்பது?

- வி.சம்பந்த மூர்த்தி, திருநீர்மலை

‘‘உங்கள் அனுமதியின்றி உங்களுக்கு கிரெடிட் கார்டை அனுப்பியிருந்தால், அது உங்களுக்குத் தேவையில்லையென்றால், அதைப் பயன்படுத்த வேண்டாம். அந்த கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி குறுக்குவாக்கில் இரண்டாக வெட்டி, உங்களுக்கு கார்டு நடந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிவைக்கவும்.’’

கிரெடிட் கார்டு கேட்டு வங்கிக்கு விண்ணப்பிக்க ஏதாவது தகுதியிருக்கிறதா?

- சத்தியக் குமார், ஊட்டி

‘‘ஆம், விண்ணப்பதாரர் வாங்கும் சம்பளம் மற்றும் வேலை விவரங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தால் கிரெடிட் கார்டு வழங்கும்போது கவனிக்கப்படும். மாதச் சம்பளம் குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இருக்க வேண்டும்.இது நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். மேலும், வயது 21 - 60-க்குள் இருக்க வேண்டும்.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரெடிட் கார்டு மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் 40,000 ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கினேன். ரூ.5,000 மட்டும் செலுத்தினேன். அதன் பிறகு செலுத்த முடியவில்லை. இப்போது வீட்டுக் கடன் வாங்கப் போனால், அந்தக் கடனை செட்டில்மென்ட் செய்தால்தான் கடன் கிடைக்கும் என்கிறார்கள். நான் பாக்கி வைத்தது 35,000 ரூபாய்தான். ஆனால், இப்போது வட்டிக்கு வட்டி, அபராதம் எல்லாம் போட்டு சுமார் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை. என்னால் 60,000 ரூபாய்தான் கட்ட முடியும். நான் என்ன செய்வது?

- சாந்தினி கண்ணன், திருச்செந்தூர்.

‘‘கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முயலாமல் இருப்பது மோசமான கலாசாரம். வங்கிகள் வைப்புத் தொகையாகக் கடன் வாங்கி, அதிலிருந்துதான் கடனாகக் கொடுக்கின்றன. அதனால் நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவது மிக முக்கியம். நீங்கள் பணம் செலுத்தவில்லையென்றால், வைப்புத் தொகையாளர்களுக்கு எப்படிப் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள். மேலும், நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி, அந்தக் கடனைச் செலுத்தத் தயாராக இருக்கிறீர்களென்றால், உங்கள் நிதி நிலை நன்றாக இருப்பதாக அர்த்தம். உங்களுக்குக் கடன் தந்த நிறுவனத்திடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி, கட்டணங்கள் மற்றும் அபராதங்களைக் குறைக்கும்படி கேட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும். கிரெடிட் கார்டு கடன்களுக்கு சுமார் 35% வட்டி வசூலிக்கப்படும் என்பதை இனியாவது தெரிந்துகொள்ளுங்கள்.’’

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுக்கான நிலுவைத் தொகையை வங்கியில் ரொக்கமாகச் செலுத்தினால், கூடுதலாக சுமார் ரூ.200 செலுத்த வேண்டும் என்பது உண்மையா?

-அ.கீர்த்தனா, மேற்கு தாம்பரம், சென்னை

‘‘நீங்கள் ரொக்கப் பணமாகச் செலுத்தினால் வங்கிகள் சில கட்டணங்களை வசூலிக்கின்றன. காரணம், அவர்களுக்கு இது கூடுதல் வேலை. தற்போது ஆன்லைன் தொழில்நுட்பம் வந்துவிட்டதால், கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.’’

தேவைக்கு கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாமா... இதற்குப் பொருள்களை வாங்குவதுபோல் சுமார் 45 நாள்களுக்கு வட்டி எதுவும் கிடையாதா?

- ஜெயந்தி, கீழப்பாவூர்.

‘‘ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணத்தை எடுக்கும்போதும், ரொக்கமாகக் கடன் வாங்குவதாகவே எடுத்துக்கொள்ளப்படும். பொதுவாக, எடுக்கப்பட்ட தொகையில் 2.5% முதல் 3% வரை குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை கிரெடிட் கார்டு மூலம் ரொக்கப் பணம் கடனாக வாங்கியதற்குக் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும். மேலும், எப்போது பணம் எடுத்தீர்களோ, அப்போதே வட்டி போட ஆரம்பித்துவிடுவார்கள். பொருள்களை வாங்கும்போது அளிக்கப்படும் வட்டியில்லா காலம், ரொக்கப் பணம் எடுப்பதற்குக் கிடையாது. எனவே, பணம் எடுக்க வேண்டாம்.’’

கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு 45 நாள்களுக்கு வட்டி எதுவும் கிடையாது என்ற போது, இதில் கிரெடிட் கார்டு கம்பெனிக்கு என்ன லாபம் என்று விளக்க முடியுமா?

- ச.செல்வி, இலஞ்சி

‘‘கிரெடிட் கார்டு நிறுவனங்கள், பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கின்றன. இந்த விற்பனை மூலம் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சில நன்மைகளைப் பெறுகின்றன. தவிர, பரிவர்த்தனைத் தொகை மதிப்பில் வணிக நிறுவனங்களிடமிருந்து சுமார் 1-2% பெறுகின்றன.’’

கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் எங்கெல்லாம் ஜி.எஸ்.டி வரும் என விளக்கிச் சொல்ல முடியுமா?

‘‘கிரெடிட் கார்டுகளில் நிலுவையிலுள்ள மொத்தத் தொகைக்கும் ஜி.எஸ்.டி வசூலிக்க மாட்டார்கள். கிரெடிட் கார்டுகளில் வசூலிக்கப்படும் வட்டி மற்றும் கட்டணங்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி போடுவார்கள். எடுத்துக்காட்டாக வட்டி, தாமதக் கட்டணம் அல்லது வருடாந்தரக் கட்டணம் போன்றவற்றின் மீது ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். நீங்கள் நுகர்வோர் பொருள்கள் வாங்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், பொருள்களுக்குச் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி வரியை, பொருள்களை விற்கும் நிறுவனம் உங்களிடம் வசூலித்து, அதை அரசுக்குக் கட்டும்.’’

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு தொடர்புடைய ‘Billing Cycle, Credit Limit, Late Fee, Minimum Payment’ ஆகியவற்றுக்கு விளக்கம் தரவும்.

- சித்தாரா, சித்தூர்

‘‘பில்லிங் சுழற்சி பொதுவாக 45 நாள்களுக்கு இருக்கும். இந்தக் காலத்துக்குள் தொகையைச் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது. ஆனால், நீங்கள் சுழற்சியின் நடுவில் பொருள்களை வாங்கினால், வட்டி இல்லா காலம் 45 நாள்கள் கிடைக்காது. சுழற்சியில் மீதமுள்ள நாள்களுக்கு மட்டுமே வட்டியில்லா சலுகைக் காலம் கிடைக்கும். கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம், கிரெடிட் கார்டு வாங்குபவரின் வருமானத் தகுதிக்கேற்ப ஒவ்வோர் அட்டைக்கும் ஒரு வரம்புத் தொகையை நிர்ணயிக்கும். இது `கிரெடிட் லிமிட்’ எனப்படும். இதில், கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-களில் எடுக்க அனுமதிக்கப்பட்ட ரொக்கப் பணமும் அடங்கும்.

நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பொருள்களை வாங்கினால், சுழற்சிக் காலத்துக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், பொருள்களை வாங்கிய பரிவர்த்தனை நாளிலிருந்து தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். கூடவே வட்டியும் செலுத்த வேண்டும். குறைந்தபட்சத் தொகை (Minimum Payment) என்பது, பாக்கித் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்துவது. கிரெடிட் கார்டு நிறுவனத்தில் இது பாக்கித் தொகையில் 5 சதவிகிதமாக இருக்கும். அசாதாரண அவசரநிலைகளில் மட்டுமே நீங்கள் குறைந்தபட்சத் தொகை விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், கிரெடிட் கார்டு நிறுவனங்களின் வட்டி மிக அதிகம்.’’

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பத்திரப்பதிவு சந்தேகங்கள்..!

ஆ.ஆறுமுகநயினார்
ஆ.ஆறுமுகநயினார்

சொத்து பத்திரம் பதிவு தொடர்பாக உங்களுக்குப் பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். அவற்றுக்கு வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு அரசு முன்னாள் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்) ஆ.ஆறுமுகநயினார் பதிலளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.