Published:Updated:

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?

சர்ச்சை
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சை

சர்ச்சை

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?

சர்ச்சை

Published:Updated:
சர்ச்சை
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சை

‘தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019’ என்ற சட்டத்தை தமிழக அரசு இயற்றியிருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இப்படியொரு சட்டம் இல்லை. தமிழகம்தான் இதை இயற்றும் முதல் மாநிலம். கரும்பு, மூலிகைப் பயிர்கள், விவசாயப் பயிர்கள், இறைச்சிக்கோழி போன்றவற்றை இந்தச் சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யலாம். இந்தச் சட்டப்படி, கொள்முதல் செய்பவர்களும் பண்ணையாளர்களும் சாகுபடிக்கு முன்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அறுவடை நேரத்தில் விலை வீழ்ச்சி இருந்தாலும், ஒப்பந்தத் தேதியில் குறிப்பிட்டுள்ள விலைக்கு விளைபொருள்களை கொள்முதல் நிறுவனம் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக நியமிக்கப்படும் அரசு அலுவலர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற வேண்டும். இதனால் நிறுவனம் நிர்ணயித்த விலையைக் கொடுக்க மறுத்தாலோ, கொள்முதல் செய்ய மறுத்தாலோ பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இந்தச் சட்டம் செயல்படும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்; பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்’ என்கிறது அரசின் அறிவிப்பு.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?

இந்த நிலையில், `ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத்தான் பயனளிக்கும். விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இந்தச் சட்டம் தொடர்பாக விவசாயச் சங்க பிரமுகர்களிடம் கேட்ட கருத்துகள் இங்கே இடம்பெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்

சாந்தகுமார் குழு பரிந்துரையின் எதிரொலி

கி.வெங்கட்ராமன்,

வேளாண் பொருளியல் ஆய்வாளர்.

‘‘தமிழக விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழிப்பதற்காகவும் மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு இந்தச் சூழ்ச்சியான சட்டத்தைக் கொண்டுவருகிறது. `வேளாண் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், கால்நடைகள் வளர்ப்பவர்களும் அவை தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றில் ஈடுபடலாம்’ என இந்தச் சட்டம் சொல்கிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்வதுதான் இதன் சாராம்சம். அதேபோல, `கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனை செய்வதற்குப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு உத்தரவாதமான சந்தையைப் பெறலாம்’ எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான். ஏற்கெனவே மத்திய அரசின் சாந்தகுமார் குழு, `வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.

அதை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சூழலுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

வேளாண் விளைபொருள்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் இங்கு ஒத்து வராது.’’

நாராயணசாமி
நாராயணசாமி

விவசாயிகளை அடமானம் வைக்கும் அபாயகரமான சட்டம்.

ஓ.ஏ.நாராயணசாமி,

மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

“இதுவரை விவசாயிகளாக இருந்தவர்கள் இனி முதலாளிகளுக்கு வேலைக் காரர்களாகத்தான் இருப்பார்கள். தங்களது உற்பத்திப் பொருளைத் தாங்களே பல மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

வரும் 13-ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 2017-18-ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படாத ’நியூ இந்தியா இன்ஷூரன்ஸ்’ கம்பெனியைக் கண்டித்துச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தச் சட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்ய வலியுறுத்தவிருக்கிறோம். தொடர்ந்து அனைத்து விவசாயிகள் சங்கத்தை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 ராமச்சந்திர ராஜா
ராமச்சந்திர ராஜா

விவசாயிகளுக்குக் குழிபறித்த அரசு!

ராமச்சந்திர ராஜா,

தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர்.

“ ‘விளைபொருள்களுக்கு விலை கிடைக்கும்’ என்று சொல்வது வெறும் கண்துடைப்புதான். விவசாயிகள் தொடர்பான எத்தனையோ சட்டங்கள் நிலுவையிலுள்ள நிலையில் விவசாயிகளிடம் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் இந்தச் சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டதற்கு என்ன காரணம்? இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலவே தோன்றுகிறது. இது பெரு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டும் சாதகமாக இருக்குமே தவிர விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை.’’

கே.வி.ராஜ்குமார்
கே.வி.ராஜ்குமார்

விவசாயிகளை அடிமையாக்கும் சட்டம்!

கே.வி.ராஜ்குமார்,

மாநிலத் தலைவர், தென்னிந்தியக் கரும்பு விவசாயிகள் சங்கம்.

“ஒப்பந்தப் பண்ணை என்பது ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் விஷயம்தான். கடந்த பல ஆண்டுகளாக, சர்க்கரை ஆலைகளிடம் கரும்பு விவசாயிகள் ஒப்பந்தம் போட்டு, விளைந்த கரும்பை வெட்டி ஆலைகளுக்கு அனுப்பிவருகிறார்கள். ஒப்பந்தப் பண்ணைய முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளின் நிலை மற்ற பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வேறு வடிவில் வரலாம். உங்கள் கிணற்று நீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரம்பத்தில் ஒப்பந்த விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் இருப்பதுபோல் தெரியும். ஆசையைத் தூண்டி அடியோடு சுரண்டும் கார்ப்பரேட்கள் விவசாயிகள்மீது நடத்தும் சதுரங்க வேட்டைதான் ஒப்பந்தப் பண்ணை முறை.’’

 ராம கவுண்டர்
ராம கவுண்டர்

தரிசு நிலங்கள் குறையும்!

ராம கவுண்டர்,

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

“இந்தச் சட்டத்தால் தரிசு நிலங்கள், விவசாயம் செய்யப்படாத நிலங்கள் வெகுவாகக் குறையும். உணவு தானியங்களின் உற்பத்தி இப்போதிருப்பதைவிட அதிகரிக்கும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் கம்பெனிகள் தாங்கள் போட்ட முதலீட்டின் மூலம் லாபம் எடுக்கத் துடிக்கும். விளைச்சலைப் பெருக்குவதற்காக நிலத்தடியிலிருந்து அதிக அளவு நீர் உறிஞ்சப்படும். ஏற்கெனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோயிருக்கும் நிலையில், தண்ணீர்ப் பிரச்னை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும். ஒப்பந்தப்படி எல்லா நிறுவனங்களும் நடந்துகொள்வது சிரமம். அதனால் நிறைய வழக்குகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.”

சி.வையாபுரி
சி.வையாபுரி

யாரைக் கேட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது!

சி.வையாபுரி,

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர், சேலம் மாவட்டம்.

“யாரை கேட்டு இந்தச் சட்டத்தை கொண்டுவந்தது தமிழக அரசு... பணக்கார விவசாயி, ஏழை விவசாயி எல்லோருமே விவசாயம் செய்ய முடியாமல் கஷ்டத்திலிருக்கிறார்கள். அதற்குத் தீர்வு என்னவென்று யோசிக்காமல், மேலும் மேலும் சட்டத்தைக் கொண்டு வருவதிலேயே இருக்கிறது தமிழக அரசு. டெல்டா மாவட்டங்களுக்கு இன்னும் போதுமான காவிரி நீர் போய்ச் சேரவில்லை. மற்ற பகுதிகளிலும் போதுமான மழை கிடைக்கவில்லை. இப்படியிருக்கும் நிலையில் நீர் சிக்கனத்துக்கு வழிகாட்டும் பயிர்வாரி முறைக்குச் சட்டம் கொண்டு வருவதை விடுத்து, தேவையில்லாத சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகள்மீது திணிக்கிறது அரசு.”

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

யாரோ சொல்லித்தான் இந்தச் சட்டம்!

அறச்சலூர் செல்வம்,

ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.

“இந்தச் சட்டத்தின் மூலம் வேளாண்துறை செய்துகொண்டிருக்கும் வேலையை நாளை கம்பெனிகள் செய்துகொண்டிருக்கும். கம்பெனிகளுக்கு எந்தப் பயிர் லாபமாக இருக்குமோ, அதைதான் விவசாயிகள் விளைவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்தச் சட்டத்தை தமிழக அரசு மட்டுமே யோசித்துக் கொண்டு வந்திருக்க முடியாது. யாரோ சொல்லித்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அண்மையில் தமிழ்நாடு கால்நடை இனவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம் ஆணையம் ஒன்றை அமைப்பதாகவும், அதன் கீழ் கால்நடை வளர்ப்போர் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி விவசாயிகளையோ, மக்களையோ கலந்தாலோசிக்காமல் ஒரு சட்டத்தை ஏன் கொண்டு வர வேண்டும்... ஒப்பந்தச் சட்டத்தின் கீழ் வரும் கம்பெனிகள் பெரிய கம்பெனியா, சிறிய கம்பெனியா என்பது தெரியவில்லை. எந்த அமைப்பு கம்பெனிகளைக் கட்டுப்படுத்தும்... விவசாயிகளுக்கு ஏதாவது பாதிப்பென்றால் யார் பொறுப்பேற்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தச் சட்டத்தில் தெளிவுப்படுத்தபடவில்லை.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வியாபாரிகளுக்கு மட்டுமே கடிவாளம்; விவசாயிகளுக்கு அல்ல!”

மிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மைச் செயலாளருமான ககன்தீப்சிங் பேடியிடம் பேசினோம். “ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தைப் பற்றி விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தை விவசாயிகள் விரும்பினால் மட்டுமே ஒப்பந்தம் போடப்படும். எல்லா விவசாயிகளையும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. விலை வீழ்ச்சியடையும் காலங்களில் சிறு குறு விவசாயிகளைக் காப்பாற்றவே இந்தச் சட்டம் வெகுவாக உதவும்.

 ககன்தீப்சிங் பேடி
ககன்தீப்சிங் பேடி

ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, ஒப்பந்தம் போட்ட இரண்டாம் நபர் ஒப்பந்தத்தில் பேசியபடி விவசாயிகளுக்குப் பணம் கொடுத்தே ஆக வேண்டும். ஒருவேளை விவசாயிகள் ஏமாற்றப்பட்டால், இரண்டாம் நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை வாய்மொழியாக ஒப்பந்தம் செய்துவிட்டு, இறுதியில் குறைவான விலையைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றும் செயல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கப்படும்.

எங்களது இணையதளத்தில் முழுவதுமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். அதை முழுமையாகப் படித்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்தச் சட்டத்தில் இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமானால், விவசாயிகளைக் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீடு வழங்கப்படும். அதேபோல மரபணு மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்ய இந்தச் சட்டத்தில் அனுமதி இல்லை. இந்தச் சட்டத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யும் வியாபாரிகளுக்குத்தான் கடிவாளம் போட்டிருக்கிறோம். அதனால் விவசாயிகள் பயப்படத் தேவையில்லை. இந்தச் சட்டம் குறித்து சந்தேகமிருந்தால் எங்களை தாராளமாக அணுகலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism