Published:Updated:

நரம்பு துண்டிக்கப்பட்டு பலியான பச்சிளம் குழந்தை... என்ன நடந்தது?

newborn baby
newborn baby

''டெலிவரி தாமதமானால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். அதனால், ஃபோர்செப்ஸ் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க வேண்டி வரும்.''

'பிரசவத்தின்போது, மூளைக்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை பலி' என்ற செய்தி படிப்பவர்களையெல்லாம் பதற வைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் - லட்சுமி தம்பதிக்கு, சில தினங்களுக்கு முன்னால், புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையின் முகம் சற்று வீக்கமாக இருந்ததோடு, அழாமலும் இருந்திருக்கிறது.

குழந்தை
குழந்தை

இதனால், அங்கிருந்த மருத்துவர்கள் சொற்படி, குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் பிரசாந்த். அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் மூளைக்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டதுதான் மரணத்துக்குக் காரணம் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியதையடுத்து, தன் குழந்தையின் மரணத்துக்குக் காரணமான புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் பிரசாந்த். 'இப்படியும் பச்சிளம் குழந்தை மரணிக்குமா' என்று மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜிடம் கேட்டோம்.

ரகசியப் பேச்சு, அந்தரங்க பகிர்வு... ஆபத்தில் சிக்கும் பிள்ளைகள்... பெற்றோர்களே அலர்ட்!

''மருத்துவரீதியாக இதில் பல விஷயங்கள் தெரிந்தால்தான் இந்தச் சம்பவம் பற்றி முழுமையான பதிலைச் சொல்ல முடியும். உதாரணத்துக்கு, அந்தக் குழந்தையின் தாய்க்குப் பிரசவம் நடப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டதா அல்லது பிரசவம் நடக்கும்போது சிக்கல் ஏற்பட்டதா என்பது தெரிய வேண்டும்.

மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்
மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்

டெலிவரி தாமதமானால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். அதனால், ஃபோர்செப்ஸ் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க வேண்டி வரும். அப்படிச் செய்யும்போது, குழந்தையின் மூளையிலுள்ள ரத்தக்குழாய்க்குள் லேசான ரத்தக்கசிவு ஏற்படலாம். இந்த ரத்தக்கசிவு இரண்டு அல்லது மூன்று நாள்களில் சரியாகிவிடும். குழந்தையும் நார்மலாகி விடும். ஒருவேளை ரத்தக்கசிவு தொடர்ந்து இருந்தால், குழந்தைக்கு ஃபிட்ஸ் வரலாம். உடனே ஸ்கேன் செய்துபார்த்து அதற்கான சிகிச்சையைச் செய்வோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மிக மெல்லிய ரத்தக்குழாய்க்குள்தான் இப்படி ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நரம்பு துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை'' என்றார்.

கொரோனா: வேகமெடுக்கும் இரண்டாம் அலை - ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு!
அடுத்த கட்டுரைக்கு