Published:Updated:

``நிலத்தை அபகரிக்க முயற்சி செய்றாங்க!” - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பட்டா இடத்தை வேறு சிலர் அபகரிக்கப் பார்ப்பதாகக் கூறி திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற முதியவர்
தீக்குளிக்க முயன்ற முதியவர் ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சேவகன் தெருவைச் சேர்ந்தவர் பெரியதம்பி (68) என்ற முதியவர் தன் மனைவி சின்னப்பொண்ணுடன் கையில் மனு ஒன்றை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென பெரியதம்பி தான் சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார் உடனடியாக பெரியதம்பியின் மீது தண்ணீரை ஊற்றித் தடுத்தனர்.

மனைவியுடன் பெரியதம்பி
மனைவியுடன் பெரியதம்பி
ஆர்.வெங்கடேஷ்

இதையடுத்து, திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்த மனுவில், ``சேவகன் தெரு பகுதியில் எங்களுக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரான பழனிகண்ணு என்பவர் தனக்கு அங்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்குச் சொந்தமான அந்த நிலத்தில், தங்களுக்கும் சொந்தம் உள்ளதாகப் போலி ஆவணங்கள் தயார் செய்து, கூட்டுப்பட்டாவாக மாற்றி உத்தரவு பெற்றார்.

இது தவறான பட்டா மாறுதல் உத்தரவாகும். இதுபற்றி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு நான் ஆதாரத்தோடு புகார் அளித்தேன். அதன் பின்பு வருவாய் கோட்டாட்சியர், கறம்பக்குடி தாசில்தார் மற்றும் நில அளவையர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, இந்த இடம் எனக்குச் சொந்தமானது எனக்கூறி, பழனிக்கண்ணு மற்றும் அவரது தந்தை ஆண்டி செய்து வைத்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டுச் சென்றனர்.

தீக்குளிக்க முயன்ற முதியவர்
தீக்குளிக்க முயன்ற முதியவர்
ஆர்.வெங்கடேஷ்

ஆனாலும், கொஞ்ச நாள்களில் எனது பட்டா இடத்தை மீண்டும் பழனிக்கண்ணு மற்றும் ஆண்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது தொடர்பாக, நான் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. வழக்கின் இறுதி உத்தரவு வரும்வரை ஆண்டி என்பவர் எனது இடத்தில் செய்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸார் முழுவதுமாக அகற்றிக் கொடுக்க வேண்டும்" என அதில் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கெனவே, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டுவிட்டன. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி முதியவரை அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர்.