Published:Updated:

மனைவிக்காகப் பழிவாங்கும் ஐ.பி.எஸ்... தக்க தருணத்துக்காகக் காத்திருந்த ஐ.எஃப்.எஸ்...

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளின் பின்னணி

மனைவிக்காகப் பழிவாங்கும் ஐ.பி.எஸ்... தக்க தருணத்துக்காகக் காத்திருந்த ஐ.எஃப்.எஸ்...

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளின் பின்னணி

Published:Updated:
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
கடந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் ரெய்டுகள் தூள்பறக்கின்றன. கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 6.96 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 33 அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 7.2 கிலோ தங்க நகைகளும், 9.8 கிலோ வெள்ளிப் பொருள்களும் இந்தச் சோதனைகளில் சிக்கியிருப்பது அதிகாரிகளே எதிர்பாராத ட்விஸ்ட். டாஸ்மாக், போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறைகளில்தான் அதிக அளவில் ரெய்டுகள் நடைபெற்றிருக்கின்றன. லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் வேகத்துக்குக் காரணமென்ன என்பதுதான் அதிகாரிகள் வட்டாரத்தில் எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி!

சமீபத்தில், சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரியும் பாண்டியனின் சென்னை வீடு, அலுவலகத்தைச் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 1.37 கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கோடி ரூபாய் பெறுமானமுள்ள 18 சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். தொழிற்சாலைகளின் லைசென்ஸ் தொடங்கி, தடையில்லாச் சான்றிதழ் வரை சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள்தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதால், அதற்கு லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாகக் கைமாறுவதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த அதிரடிகள் அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருந்தாலும், ரெய்டுக்கான பின்னணியில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் ஆக்ரோஷமும் இருப்பதாகக் கூறுகிறார்கள் துறையின் உள்விவரம் அறிந்தவர்கள்.

மனைவிக்காகப் பழிவாங்கும் ஐ.பி.எஸ்... தக்க தருணத்துக்காகக் காத்திருந்த ஐ.எஃப்.எஸ்...

ஐ.பி.எஸ் அதிகாரியின் கோபம்!

இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சிலர், ‘‘சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவி சுற்றுச்சூழல் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். ஐ.எஃப்.எஸ் அதிகாரியான அந்தப் பெண்மணி நேர்மையானவர் என்பதால், சுற்றுச்சூழல் துறையில் வசூலிக்கப்படும் கப்பங்களைக் கண்டித்தார். துறையின் கண்காணிப்பாளரான பாண்டியன்தான், துறைக்கே பவர் ஏஜென்ட். பல்வேறு நிறுவனங்கள் பாண்டியன் மூலமாகத்தான் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும். அந்தப் பெண் அதிகாரியின் கட்டுப்பாடுகள் வசூலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வெகுண்டெழுந்த பாண்டியன், ‘நீங்களும் சம்பாதிக்க மாட்டேங்கு றீங்க. எங்களையும் சம்பாதிக்க விட மாட்டேங்குறீங்க. இதெல்லாம் சரிப்படாது. ஒரு மாசத்துல நீங்க இந்த டிபார்ட்மென்ட்ல இருக்க மாட்டீங்க’ என்று அவரிடம் சவால் விட்டிருக்கிறார். பாண்டியன் சொன்னபடியே, கடந்த செப்டம்பர் மாதம் அந்தப் பெண் அதிகாரி வேறொரு துறைக்கு மாற்றப்படவே, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பினார் அந்தப் பெண் அதிகாரி.

இதற்கு சில மாதங்கள் முன்பாக நடந்த நிகழ்வு இது... ஒரு சில நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் உயரதிகாரி களை வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும். இதற்கான ஏற்பாடுகளை பாண்டியன்தான் கவனிப்பாராம். 2020 புத்தாண்டை ஒட்டி, சில ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுடன் அந்தமானுக்குச் சென்ற பாண்டியன், அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்திருக்கிறார். பாண்டியனின் ஏற்பாட்டில் திருப்தியடையாத ஓர் அதிகாரி, அங்கேயே அவரிடம் சண்டையிட, வார்த்தை தடித்து விவகாரமாகியிருக்கிறது. கோபம் தணியாமலேயே அந்த அதிகாரி தக்க தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இப்போது சம்பந்தப்பட்ட பெண் ஐ.எஃப்.எஸ் அதிகாரி மூலமாக அனைத்து விஷயங்களையும் போட்டுக்கொடுத்து பழிவாங்கிவிட்டார்.

இன்னொரு பக்கம் தன் மனைவி மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், கொதித்துப்போயிருந்த அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் இந்த விவரங்கள் கிடைக்கவே... மனிதர் விஸ்வரூப மெடுத்துவிட்டார். இது வெறும் ஆரம்பம்தான். பாண்டியனுடன் சேர்த்து மேலும் ஐந்து பேர் தன் மனைவிக்கு நெருக்கடி கொடுத்ததாக சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கொதிப்பில் இருக்கிறார். அவர்கள்மீதும் நடவடிக்கை பாய்ந்தே தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்’’ என்றார்கள்.

கடந்த அக்டோபர் மாதம், வேலூர் மண்டல மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி பன்னீர்செல்வத்திடமிருந்து 3.25 கோடி ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் ஆட்டம் இங்கேயிருந்துதான் ஆரம்பித்தது என்கிறார்கள். ஓர் அதிகாரியின் ஆக்ரோஷத்தால் இந்த ரெய்டுகள் ஆரம்பித்திருந்தாலும், இதன் மூலமாக சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. சுற்றுச்சூழல் துறையில் இவ்வளவு பெரிய லஞ்ச முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருப்பது இதுவே முதன்முறை.

மனைவிக்காகப் பழிவாங்கும் ஐ.பி.எஸ்... தக்க தருணத்துக்காகக் காத்திருந்த ஐ.எஃப்.எஸ்...

சிக்கலில் தி.மு.க எம்.பி...

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்தவரான பாண்டியன், தி.மு.க எம்.பி ஒருவருடன் நெருக்கமாக உள்ளாராம். அந்த எம்.பி மூலமாகப் பல நிறுவனங்களுக்குச் சட்ட விரோதமாக தடையில்லாச் சான்றுகளை பாண்டியன் பெற்றுத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாண்டியனை லாக் செய்வதன் மூலமாக, அந்த எம்.பி-யையும் வளைப்பதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்கெட்ச் போட்டுள்ளதாம்.

சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியம் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. எலைட் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்ற குற்றச்சாட்டில், வேலூர் டி.ஐ.ஜி ஜெயபாரதியின் கணவரும், சென்னை டாஸ்மாக் மேலாளருமான முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அவரது வேலூர் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு சில துறைகளை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் இந்தச் சோதனைகள், கரை வேட்டிகளையோ, பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் முக்கிய துறைகளையோ குறிவைத்து நடத்தப்படாதது சில சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

பாண்டியன்
பாண்டியன்

லஞ்ச ஒழிப்புத்துறையின் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘பாண்டியன், ஒரு சிறிய மீன்தான். அவருக்குப் பின்னாலிருக்கும் திமிங்கிலங்கள் இனிமேல்தான் மாட்டப்போகின்றன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 1996-ம் ஆண்டு 10,000 ஏக்கர் பரப்பரளவுகொண்ட கடலோரப் பகுதியை கடலோர மேலாண்மை மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த இடத்தில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தக் கூடாது. மத்திய அரசின் வரைபடத்தையே மாற்றிய ஒரு கும்பல், அதில் வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல்துறை மூலம் அனுமதி பெற்றிருக்கிறது. அந்த அனுமதியைக் கொடுத்தது யாரென விசாரிக்க ஆரம்பித்திருக்கிறோம். பாண்டியனுடன் எந்தெந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் அந்தமானுக்குப் பறந்தார்கள் என்கிற லிஸ்ட்டும் தயாராகிறது. அவர்கள்மீதும் விசாரணை நடத்தப்படும். மற்றபடி, யாருடைய அழுத்தம் காரணமாகவும் இந்த ரெய்டுகள் நடத்தப்படவில்லை’’ என்றார்.

சுற்றுச்சூழல்துறை மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை எனப் பணம் அதிகமாகப் புழங்கும் துறைகளிலும் திடீர் ரெய்டுகளை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

*****

“தேர்தல் ஸ்டன்ட்டா?”

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இந்த ரெய்டுகள் குறித்து சில சந்தேகங்களைக் கிளப்புகிறார்... ‘‘2014 ஜனவரி முதல் 2017 ஜூலை வரை நான்கு ரெய்டுகளை மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தியிருந்தது. இப்போது திடீரென கடந்த இரண்டரை மாதங்களில் 127 ரெய்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்சியின்மீது லஞ்சக்கறை படிந்திருப்பதால், ‘நாங்கள் லஞ்சத்துக்கு எதிரானவர்கள்’ என்று தேர்தல் ஸ்டன்ட் அடிப்பதற்காக ஆட்சியாளர்கள் இந்த ரெய்டுகளை நடத்தச் சொல்கிறார்களா... அல்லது நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டு வதற்காக இந்த ரெய்டுகளை நடத்தி பயமுறுத்துகிறார்களா என்பது தெரியவில்லை.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

மாவட்டம்தோறும் அலுவலகங்கள், 400 பணியாளர்களை வைத்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, இன்று ரெய்டு நடத்துவதுபோல மாதத்துக்கு நூறு ரெய்டு நடத்தியிருந்தாலே அதிகாரி களுக்கு பயம் ஏற்பட்டிருக்கும். நெடுஞ் சாலைத்துறையில் 12,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. பெரும் தொகை லஞ்சமாகக் கைமாறியிருக்கிறது. தமிழகத்திலேயே சி.எம்.டி.ஏ துறையில்தான் லஞ்சம் அதிகமாகப் புழங்குகிறது. அங்கே யெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த ரெய்டும் நடத்துவதில்லையே... ஏன்? சம்பிரதாயச் சடங்காகவும், சிலரை மிரட்டுவதற்காக மட்டும் இந்த ரெய்டுகளை நடத்தாமல், அனைத்துத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் மட்டுமே லஞ்சம் கட்டுக்குள் வரும். அதிகாரிகளுக்கும் பயம் ஏற்படும்’’ என்றார்.