Published:Updated:

மூணாறு: நீரோடையில் தேடும் பணி; குறுக்கிட்ட புலி! - அதிர்ச்சியில் மீட்புக்குழுவினர்

மீட்புக்குழு
மீட்புக்குழு

நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி 18=வது நாளாக இன்றும் நடைபெறுகிறது.

கேரள மாநிலம், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மண்ணில் புதையுண்டது. இந்தச் சம்பவத்தில் 70 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மழை, காற்று என மோசமான வானிலை மீட்புப் பணியில் குறுக்கிட்டாலும், மீட்புக்குழுவினர் தொடர்ந்து உடல்களைத் தேடிவருகின்றனர்.

மீட்புக்குழு
மீட்புக்குழு

சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருக்கும் ஓடைப்பகுதியில், கடந்த சில நாள்களாக மீட்புக்குழுவினர் உடல்களைத் தேடிவந்தனர். சிறுமி உடல் உட்பட சிலரின் உடல்கள் அந்த நீரோடையில் மீட்கப்பட்டன. இதுவரை 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேரின் உடல்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீரோடைவழியில் `பூதக்குழி’ எனும் அடர் வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மீட்புக்குழுவினர் உடல்களைத் தேடிவந்தபோது வனத்துக்குள்ளிருந்து திடீரென நீரோடையில் தண்ணீர் குடிக்க புலி ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. புலியைப் பார்த்த மீட்புக்குழுவினர் அச்சமடைந்திருக்கிறார்கள்.

மூணாறு நிலச்சரிவு: `நீரோடையில் 12 உடல்கள்...’ - கைவிடப்படுகிறதா தேடுதல் பணி?
பெட்டிமுடி
பெட்டிமுடி

`வன விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பூதக்குழி வனப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, மீட்புக்குழுவினரை ஆபத்தில் தள்ளுவது போன்றது’ என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நேற்று மூணாறில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூணாறு கலெக்டர் தினேசன், டி.எஃப்.ஓ கண்ணன், மூணாறு பஞ்சாயத்துத் தலைவர் கருப்பசாமி, மீட்புக்குழுவினர், பெட்டிமுடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வனப்பகுதியில் ஓடக்கூடிய நீரோடையில் பெரிய பாறைகள் இருப்பதாலும், அடிக்கடி புலி உட்பட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும், உடல்களைத் தேடும் பணியைக் கைவிட்டுவிடலாமா அல்லது தொடரலாமா என ஆலோசிக்கப்பட்டது. பிறகு, `தகுந்த பாதுகாப்போடு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடலாம்’ என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஐந்து பேரின் உடல்கள் கிடைக்கும் வரை மீட்புப் பணியைத் தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பெட்டிமுடி
பெட்டிமுடி
மூணாறு: `சிதைந்துபோன உடல்கள்; டி.என்.ஏ பரிசோதனை’ - சர்ச்சையாகும் பூங்கா திறப்பு

இந்நிலையில், குரங்கணி தீ விபத்தின்போது, சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து காட்டுத்தீயில் சிக்கி, உயிருக்குப் போராடிய நபர்களை மீட்ட கேரளா அட்வென்சர்ஸ் குழுவினர், பூதக்குழி வனப்பகுதியில் களமிறங்கியுள்ளனர். இவர்களோடு வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை என சுமார் 50 பேர் கொண்ட குழு, பூதக்குழி வனப்பகுதியில் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு