Published:Updated:

`எதிர்ப்புகளைச் சந்திக்கும் இம்ரான் அரசு!’ - அதிரடிகாட்டும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ( Fareed Khan )

எதிர்க்கட்சிக் கூட்டணி, இம்ரானையும் ஜெனரல்களையும் குறிவைத்து, அரசியல்ரீதியாக நடத்தும் தாக்குதல்களால் ராணுவம் பதற்றமடையக்கூடும். அதை எதிர்கொள்ள, சிவிலியன்-ராணுவக் கூட்டணியில் ராணுவம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் பரவலையும் மீறி, அக்டோபர் 16 அன்று பஞ்சாப் மாகாணம், குஜ்ரான்வாலாவிலும், நேற்று முன்தினம் கராச்சியிலும் அடுத்தடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் கூட்டு எதிர்க்கட்சிகளின் இரண்டு பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள், இம்ரான் கான் பதவியிலிருந்த இரண்டரை ஆண்டுக்காலத்தை கடுமையாக விமர்சித்து எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML), பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan peoples party - PPP), பலுசிஸ்தான் தேசியக் கட்சி (BNP), ஜமாயத் உலேமா இஸ்லாம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து விலைவாசி உயர்வு, மின்வெட்டு, வணிகங்கள் மூடப்படுவது, பிற பொருளாதார சிரமங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் அதிருப்தியை முன்னிறுத்தி, புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இதற்கு, `பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ (Pakistan Democratic Movement - PDM) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்

`ஜமாயத் உலேமா இஸ்லாம்’ என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான மௌலானா பஸ்லுர் ரெஹ்மான், கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மதத் தலைவர், ஒருவர் கூட்டணிக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களின் வம்சங்களுக்கான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காரணம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ன் (PML) நவாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சி-யின் (PPP) ஆசிப் அலி சர்தாரியும் ஊழல் வழக்குகளின் பின்னணியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் என்பதால் இருவரின் வாரிசுகளான மரியம் நவாஸ், பிலாவால் பூட்டோ இருவருக்கும் பி.டி.எம்-ஐ வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

`கோவிட்19  சூழலை பாகிஸ்தான் கூட சிறப்பாக கையாண்டுள்ளது!’ - சர்வதேச அறிக்கை குறித்து ராகுல்

`பாகிஸ்தான் ராணுவத்தால் 2018 தேர்தலில் இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டதை, சரியான தேர்வாக எடுத்துக்கொள்ள முடியாது’; `பி.எம்.எல் மற்றும் பி.பி.பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளும், ஊழல் வழக்குகளும் மட்டுமே இம்ரான் கானை தேர்வு செய்வதற்குக் காரணமாக இருந்தன’; - இப்படி இம்ரான் கானுக்கு எதிராகச் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம். அதோடு, இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என்பதையே இலக்காகவைத்துச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்திவருகிறது.

மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் செல்ல ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு அவரை தகுதியற்றவராக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் அவரின் அரசியல் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்

லண்டனிலிருந்து, நவாஸ் ஷெரீப் நாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்குக்கு எதிராகவும், ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு எதிராகவும் தன் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறார்.

செப்டம்பர் 20 அன்று, எதிர்க்கட்சிக் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அக்டோபர் 16-ம் தேதி குஜ்ரான்வாலாவில் பேசிய நவாஸ் ஷெரீப் ராணுவத்தையும், குறிப்பாக ஜெனரல் பஜ்வாவையும், நீதித்துறையையும் குற்றம் சாட்டினார். மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுக்கு மேல் செயல்படும் தனி அரசாங்கம் என்று கடுமையாக விமர்சித்தார்.

`பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆண்மை நீக்கமே தண்டனை!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசாங்கம் பொறுப்பில் இருக்கும்போது எதிர்க்கட்சிகளிடமிருந்து இது போன்ற தாக்குதல் வருவது இதுவே முதன்முறை. வழக்கமாக சிவில் அரசாங்கமே ராணுவத்துடன் பலவீனமான போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறது. 2008 முதல் 2013 வரை பிபிபி-சர்தாரி அரசாங்கத்திலும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் (என்) அரசாங்கத்திலும் இதே நிலை இருந்தது.

எதிர்க்கட்சி கூட்டணி இம்ரான் மற்றும் ஜெனரல்களைக் குறிவைத்து, அரசியல்ரீதியாக நடத்தும் தாக்குதல்களால் ராணுவம் பதற்றமடையக்கூடும். அதை எதிர்கொள்ள, சிவிலியன்-ராணுவக் கூட்டணியில் ராணுவம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

`எதிர்ப்புகளைச் சந்திக்கும் இம்ரான் அரசு!’ - அதிரடிகாட்டும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்

பாகிஸ்தானை வளமான நாடாக மாற்றுவதற்கான இம்ரான் கானின் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை மீறவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது என இம்ரான் அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேயிருக்கும் பி.டி.எம்-ன் எதிர்ப்பு பேரணிகள் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றன. அடுத்த வார இறுதியில், குவெட்டாவில், ஃபஸ்லூர் ரஹ்மான் தலைமையிலான பேரணி, அவருடைய மத வலதுசாரி பழமைவாத அமைப்பு மற்றும் பழமைவாத எண்ணம் கொண்ட பாகிஸ்தானியர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி.எம்-ன் இறுதித் திட்டமாக, ஜனவரி மாதம் மிகப்பெரிய அணிவகுப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக இம்ரான் கானுக்கு ராணுவம் உதவியிருந்தால், அவரை நீக்குவதற்கான முடிவையும் அது எடுக்கக்கூடும். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இதே வேகத்தில் தொடர்ந்தால், அவை இம்ரான் கான் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும், எதிர்க்கட்சியைக் கையாள்வதில் மட்டுமே இம்ரானை ஆர்வத்துடன் வைத்திருக்கச் செய்யும். மேலும், அவரை ஆட்சியிலிருந்து திசைதிருப்பும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்!!

அடுத்த கட்டுரைக்கு