Published:Updated:

`அந்த நேரத்தில் தோணுச்சி அப்படி செய்தேன்!'-இன்ஸ்பெக்டரின் உடலைச் சுமந்த சென்னை துணை கமிஷனர்

உடல்நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டரின் உடலை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் பெண் போலீஸாரே தூக்கிச் சென்றனர்.

துணை கமிஷனர் சுப்புலட்சுமி
துணை கமிஷனர் சுப்புலட்சுமி

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (48). இவர், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். கடந்த 11-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீதேவி இறந்தார். அவரின் இறுதி அஞ்சலி ராயபுரத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி இறந்த தகவல், அவருடன் பணியாற்றிவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி

கடந்த 12-ம் தேதி ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி பங்கேற்றார். அவருடன் வண்ணாரப்பேட்டை காவல் சரக போலீஸாரும் கலந்து கொண்டனர். காசிமேடு மயானத்துக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது துணை கமிஷனர் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரமணி, இந்திராணி, ஏட்டு வரலட்சுமி மற்றும் பெண் போலீஸார் அனைவரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடலை தோளில் சுமந்தபடி காசிமேடு மயானத்துக்கு கொண்டு சென்றனர். துணை கமிஷனர் சுப்புலட்சுமியின் இந்தச் செயல் காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகன் முனுசாமியிடம் பேசினோம். ``என்னுடைய அப்பா, அம்மா இறந்தபிறகு என்னை ஸ்ரீதேவி அம்மாதான் வளர்த்தாங்க. என்னை மாலி என்றுதான் கூப்பிடுவாங்க. எங்க அம்மா, பி.டி.லீ செங்கல்வராய நாயக்கரின் கொள்ளுபேத்தி. கடந்த 1991-ம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார்.

முனுசாமி
முனுசாமி

அப்போது ரயில்வே போலீஸில் அவருக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்வு எழுதி 2004-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டரானார். காசிமேடு, ராயபுரம், கீழ்ப்பாக்கம் டிராஃபிக் எனப் பணியாற்றினார். பிறகு இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடியில் பணியாற்றினார். அங்கிருந்து சென்னைக்கு இடமாறுதலாகினார். இறுதியாக தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு, அவரைப் பரிசோதித்தபோதுதான் கர்ப்பப் பையில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். வர்ஷினி என 6 வயதில் தங்கை உள்ளார். அவர், 1-ம் வகுப்பு படித்துவருகிறார். பணியிலும், குடும்பத்திலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். அவர் இல்லாமல் எங்கள் வீடே வெறிச்சோடி காணப்படுகிறது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அம்மாவை தகனம் செய்தார்கள்" என்றார் கண்ணீர்மல்க.

துணை கமிஷனர் சுப்புலட்சுமி
துணை கமிஷனர் சுப்புலட்சுமி

துணை கமிஷனர் சுப்புலட்சுமியிடம் கேட்டதற்கு, ``இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்தும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்றேன். தகன மையத்துக்கு ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கியபோது நானும் சுமந்து சென்றேன்" என்றவரிடம் உயரதிகாரியாக இருக்கும் நீங்கள் இன்ஸ்பெக்டரின் சடலத்தைத் தூக்கியது சக காவலர்கள் மத்தியில் உங்கள் மீதான மரியாதையை உயர்த்தியுள்ளதே? என்று கேட்டதற்கு, ``அந்த நேரத்தில் அப்படி தோணியதால் ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கிச் சென்றேன்" என்றார்.

ஸ்ரீதேவியுடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி. அதில் ஒருவர் சென்னை சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றுகிறார். இன்னொருவர் எல்.ஐ.சியில் பணியாற்றுகிறார். சகோதரி, குடும்பத் தலைவியாக உள்ளார். விளையாட்டு வீராங்கனையாக இருந்த ஸ்ரீதேவி தன் சிறுவயதிலிருந்தே காவல் துறையில் சேர வேண்டும் என்ற கனவோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.