Published:Updated:

மர்மங்களின் கதை : அமெரிக்காவை உலுக்கிய வைரஸ் - என்ன நடந்தது? | பகுதி 14

மர்மங்களின் கதை

ஜார்ஜ் சோப்பர் அடுத்ததாக மேரியின் வீட்டையும் கண்டுபிடித்தார். அங்கும் சென்று அவரிடம் பேசி டைஃபாய்டு இருக்கிறதா இல்லையா என பரிசோதிக்க சிறுநீர் மற்றும் கழிவை கொடுக்குமாறு சொல்கிறார். மேரி அப்போதும் உடன்படவில்லை

மர்மங்களின் கதை : அமெரிக்காவை உலுக்கிய வைரஸ் - என்ன நடந்தது? | பகுதி 14

ஜார்ஜ் சோப்பர் அடுத்ததாக மேரியின் வீட்டையும் கண்டுபிடித்தார். அங்கும் சென்று அவரிடம் பேசி டைஃபாய்டு இருக்கிறதா இல்லையா என பரிசோதிக்க சிறுநீர் மற்றும் கழிவை கொடுக்குமாறு சொல்கிறார். மேரி அப்போதும் உடன்படவில்லை

Published:Updated:
மர்மங்களின் கதை

1906-ம் ஆண்டில் ஒரு முக்கியமான திருப்பம் உலக சுகாதார வரலாற்றில் நேர்ந்தது. மனித குலத்தை டைஃபாய்டு நோய் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

நியூ யார்க்கின், ஆய்ஸ்டர் பேவில் முக்கிய பணக்காரராக இருந்த ஜார்ஜ் தாம்ப்சனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் டைஃபாய்டு நோய் கண்டறியப்பட்டது. ஜார்ஜ் தாம்ப்சன் அவருக்கு உரிமையான வீட்டை இன்னொரு பணக்காரரான ஜெனரல் வில்லியம் ஹென்றி வாரனின் குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர்களின் குடும்பத்துக்குதான் டைஃபாய்டு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அதுவரை ஏழைகளுக்கு வரும் நோயாக அறியப்பட்டிருந்த டைஃபாய்டு பணக்கார குடும்பங்களுக்கும் வந்தது நகரத்துக்கே பெரும் அதிர்ச்சி. 1906-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அந்த வீட்டில் இருந்த பதினொரு பேரில் ஆறு பேர் நோய்வாய்ப்பட்டனர். உடனடியாக நோய் ஆராயப்பட்டது. காரணம் மட்டும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. டைஃபாய்டு நோய் எப்படி அந்த குடும்பத்தினருக்கு வந்தது என்பதை கண்டறியாமல், புது குடித்தனக்காரர்களை கொண்டு வர முடியாது என்கிற பிரச்சினை வீட்டு உரிமையாளருக்கு. மர்ம முடிச்சை அவிழ்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். தன் வீட்டில் டைஃபாய்டு எப்படி வந்தது என கண்டறிய ஜார்ஜ் தாம்ப்சன், ஜார்ஜ் சோப்பரை பணித்திருந்தார்.

என்ன காரணம்?

வழக்கமாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் உத்திகளை சோப்பர் பயன்படுத்தினார். டைஃபாய்டு தொற்று குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நாட்கள், கண்டறியப்பட்ட நாட்கள், சிகிச்சை முறைகள் போன்றவற்றையும், எங்கிருந்து வந்திருக்கலாம், என்னென்ன வழிகளில் வந்திருக்கலாம் போன்றவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தார். எந்த துப்பும் கிடைக்கவில்லை. சமீபத்தில் மீன் சாப்பிட்டிருந்தார்கள். ஆனால் அதுவும் பெரியளவு பாதிப்பு கொடுத்ததாக தெரியவில்லை. ஆகவே வீட்டிலிருக்கும் பல பகுதிகளை சோப்பர் ஆய்வு செய்தார். கிணறு, நீர் சேமிப்பு தொட்டி, செடிகளுக்கு போடப்படும் உரம், உணவு, குளியலறை, வீட்டு சுற்றுப்புறத்தின் சுகாதாரம் என சகல விஷயங்களையும் பூதக் கண்ணாடி போட்டு ஆராய்ந்து பார்த்தார். பலனேதுமில்லை.

என்ன நடந்திருக்க முடியும்?
சோப்பர்
சோப்பர்
Dr. Soper, NY Times, April 4, 1915

ஒரு சந்தேகம் மட்டும் சோப்பருக்கு மீஞ்சியிருந்தது. நோய் யாராலாவது கொண்டு வரப்பட்டிருக்குமா?

ஆய்ஸ்டர் பே குடும்பத்திலிருந்த நபர்களை ஒவ்வொருவராக விசாரித்து ஆராய்ந்தார் சோப்பர். ஒரே ஒரு நபர் மட்டும் சிக்கவில்லை. அந்த குடும்பத்துக்கு சமைத்துப் போடும் வேலையை செய்த சமையற்காரர். சமையல் வேலை செய்தவர் ஒரு பெண். ஆறு மாதங்களுக்கு முன் குடும்பத்துக்குள் முதல் தொற்று வந்தவுடனேயே அந்தப் பெண் வேலையிலிருந்து நின்றுவிட்டார். சரியான துருப்புச்சீட்டு கிடைத்தது சோப்பருக்கு.

வீட்டில் வேலை பார்த்த பிற வேலையாட்களுக்கும் அந்தப் பெண்ணை பற்றி அதிகம் தெரியவில்லை. அவரது பெயர் மட்டும் உறுதியாக தெரிந்தது.

பெயர், மேலன்.

பல இடங்கள் சோப்பருக்கு புரியவில்லை. உதாரணமாக சமையல்வேலை பார்ப்பவரால் எப்படி நோய் பரவ முடியும்? அவரிடம் ஒரு வேளை நோய்க்கிருமி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது பரவுவதற்கான அதிகபட்ச வாய்ப்பு அவர் சமைக்கும் உணவின் வழி பரவுவதுதான். அந்த உணவும் சமைக்கப்படுவதால் சூடாக்கப்படுவதால் கிருமி இருந்தாலும் கொல்லப்பட்டுவிடும். ஆக அந்த வழியில் நோய் எப்படி பரவ முடியுமென்கிற கேள்வி சோப்பரின் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருந்தது. இறுதியில் கேள்விக்கான பதிலும் கிடைத்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அது நேர்ந்திருந்ததை கண்டுபிடித்தார் சோப்பர்.

உணவு உண்டு முடித்த பிறகு குடும்பத்தினருக்கு மேரி ஓர் உணவு வகை செய்து கொடுத்தார். வெட்டப்பட்ட பீச் பழத்துண்டுகளை கொண்டு செய்யப்பட்ட ஐஸ்க்ரீம். நோய்த் தொற்று கொண்டவரின் கை நேரடியாக பட்டு, சூடாக்கப்படாமல் பிறர் உண்ணும் வாய்ப்பு கொண்டே உணவு வகை. டைஃபாய்டு கிருமி செல்வதற்கான மிக நேர்த்தியான வழி. சோப்பருக்கு துப்பு கிடைத்தது.

ஆய்ஸ்டர் பே வீட்டை பற்றி துப்பறியத் தொடங்கி நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. மேரி, நியூ யார்க் நகரத்தின் மேற்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். துணி துவைப்பவருக்கு சமீபத்தில்தான் டைஃபாய்டு நோய் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருக்கிறதா இல்லையா?

ஜார்ஜ் சோப்பர் அடுத்ததாக மேரியின் வீட்டையும் கண்டுபிடித்தார். அங்கும் சென்று அவரிடம் பேசி டைஃபாய்டு இருக்கிறதா இல்லையா என பரிசோதிக்க சிறுநீர் மற்றும் கழிவை கொடுக்குமாறு சொல்கிறார். மேரி அப்போதும் உடன்படவில்லை. 1907ம் ஆண்டில் பத்திரிகையில் அவரின் அனுபவத்தை குறிப்பிட்டு முக்கியமான பத்தியையும் மக்களுக்கென பதிப்பித்து வைக்கிறார். அந்த பத்தியில் அவர் சொல்லியிருந்தது என்ன தெரியுமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமையல்வேலைக்கு வந்திருந்த மேலன், குறைவான காலத்துக்குத்தான் பணியிலிருந்தார். டைஃபாய்டு பாதிப்பு குடும்பத்தில் கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் பணியிலிருந்து நின்றுவிட்டார். மேலன் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த பெண். நாற்பது வயதானவர். ஆரோக்கியமாக இருப்பவர்.’

என சோப்பர் கூறியிருந்தார். பிற விஷயங்கள் அனைத்தையும் சோப்பர் சொல்லி விட்டிருந்தாலும் பரவாயில்லை. அவர் முக்கியமான ஒரு வரியை சேர்க்கிறார். ‘மேலன் ஐரிஷ் நாட்டை சேர்ந்த பெண்’ என்றவொரு வரியை சேர்க்கிறார். அந்த வரிக்கும் டைஃபாய்டுக்கும் நோய்ப்பரவலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அந்த வரியை சேர்ப்பதிலிருந்து மக்களிடம் சோப்பர் வேறொரு முக்கியமான விஷயத்தை பரப்புகிறார். அது டைஃபாய்டை காட்டிலும் ஆபத்தான நோய்.

மர்மங்களின் கதை : அமெரிக்காவை உலுக்கிய வைரஸ் -  என்ன நடந்தது? | பகுதி 14
https://www.ncbi.nlm.nih.gov/

மேரி மேலன் பிறந்தது 1869-ம் ஆண்டில். அவரின் சொந்த ஊர் அமெரிக்கா அல்ல; வட அயர்லாந்து. 15 வயதாக இருக்கும்போது அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். உறவினர்களுடன் வாழ்ந்திருந்த அவர் வீட்டு வேலையாளாக பணிபுரிய தொடங்கி, பின்னாளில் சமையற்காரராக பரிணமித்தார்.

மேரியை போன்ற ஒரு ஏழைப் பெண், இன்னொரு நாட்டிலிருந்து குடியேறியவர் அமெரிக்காவுக்குள் டைஃபாய்டை கொண்டு வந்து பணக்காரர்களுக்கு பரப்பிவிட்டார் என்றால் போதும். மக்களின் கோபம் மிக எளிமையாக திசைதிருப்பிவிடலாம்.

1907-ம் ஆண்டில் சோப்பர் நியூ யார்க் சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பவர் என்கிற குற்றச்சாட்டில் மேரியை காவல்துறை கைது செய்தது. கைதுக்கு மேரி மறுத்த போது இன்னும் நிலைமை மோசமானது. ஐந்து காவலர்கள் மேரியை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ்ஸுக்குள் திணித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கட்டாயப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. டைஃபாய்டு பாக்டீரியா அவரின் கழிவில் கண்டுபிடிக்கப்பட்டது. மேரியின் பித்தப்பைக்குள் பாக்டீரியாவுக்கான மையம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேரி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. நார்த் பிரதர் தீவு என்ற இடத்தில் மேரி தனிமையில் சிறைவைக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

சற்றும் எதிர்பார்க்காமல் எல்லாமும் சடசடவென நடந்து முடிந்தது. திடுமென மேரியின் வாழ்க்கை தலைகீழாக்கி போடப்பட்டிருந்தது. டைஃபாய்டு நோய் பற்றிய அறியாமை மேரிக்கு மட்டும் இருந்ததாக கொள்ள முடியாது. டைஃபாய்டு நோய் ஏழைகளை மட்டுமே பாதிக்கும் என நம்புமளவுக்கே விழிப்புணர்வு அப்போது இருந்தது. ஆனால் அந்த அறியாமைக்கு விலையானது அரசு அல்ல, மருத்துவம் அல்ல. வழக்கம் போல் ஓர் ஏழை!

மர்மங்களின் கதை : அமெரிக்காவை உலுக்கிய வைரஸ் -  என்ன நடந்தது? | பகுதி 14
https://www.ncbi.nlm.nih.gov/

அறிகுறியற்ற தன்மையில் நோய் வரும் என்பதே தெரியாத ஒரு காலத்தில் மொத்த வாழ்க்கையும் முடக்கப்பட்டு தீவுக்குள் அடைக்கப்பட்டிருந்த மேரி, பணிந்து விடவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். தீவுக்கு அனுப்பப்பட்டதை எதிர்த்து மேரி வழக்கு தொடர்ந்தார்.

பொதுச்சுகாதார சிக்கல்

பொதுச்சுகாதார சிக்கல் இருக்கும் காலத்தில் அரசின் செயல்பாடும் தனி நபருக்கான உரிமையும் என்னவென்ற கேள்வியை அவரின் வழக்கு முன்னிறுத்தியது. முறையான சட்டமுறைகள் பின்பற்றப்படாமல் மேரி சிறைவைக்கப்பட்டிருப்பதாக அவரின் வழக்கறிஞர் வாதாடினார். எல்லா வாதங்களையும் கேட்டுவிட்டு, தனி நபர் உரிமை சார்ந்த விஷயத்தை புறக்கணித்துவிட்டு ‘நோய்த் தொற்றை தடுக்க அரசு செய்யும் வேலைகள் சரியே’ என நீதிமன்றம் நிலைப்பாடு எடுத்தது. பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்து வேறு வழியின்றி சுகாதாரத்துறை ஆணையர் நிபந்தனையின் பேரில் மேரியை விடுதலை செய்தார். மேரி சமையல்வேலை பார்க்கக்கூடாது என்பதே நிபந்தனை.

சோகம் என்னவெனில், சமையல் வேலையை தவிர்த்து வேறு வேலை மேரிக்கு தெரியாது. வீட்டு வேலை மட்டும் செய்வதெனில் அதில் வரும் வருமானம் கொண்டு வாழவும் முடியாது. சுகாதாரத்துறை ஆணையரோ நீதிமன்றமோ மேரிக்கான வருமானத்துக்கு வழி எதுவும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் அவருக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நஷ்ட ஈட்டை கொடுக்கக் கூட அரசை நிர்ப்பந்திக்கவில்லை.

விளைவு இன்னும் கொடூரமாக இருந்தது.

மேரி மீண்டும் சமையல் வேலைக்கு சேர்ந்தார். ஓர் உணவகத்தில் பணிபுரிந்தார். 1915-ம் ஆண்டில் மீண்டும் டைஃபாய்டு தொற்று பரவலானது. ஸ்லோன் மருத்துவமனையில் 25 பேர் டைஃபாய்டு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். டைஃபாய்டு பரவலை துப்பறிவதற்கு மீண்டும் சோப்பர் பணியமர்த்தப்பட்டார். மீண்டும் மேரி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டார். மீண்டும் கைது செய்யப்பட்டார். மீண்டும் நார்த் ப்ரதர் தீவுக்கு அனுப்பப்பட்டார் மேரி.

மர்மங்களின் கதை : அமெரிக்காவை உலுக்கிய வைரஸ் -  என்ன நடந்தது? | பகுதி 14

1938ம் ஆண்டில் மாரடைப்பால் மேரி உயிரிழந்தார். இறுதி வரை டைஃபாய்டு நோய் இருப்பதை மேரி ஒப்புக் கொள்ளவேயில்லை. அவருடைய இறுதி அஞ்சலியில் வெறும் 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஒரு நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. மேரி இந்த பூமியை விட்டு துடைத்தெறியப்பட்டார்.

மேரி செய்தது நியாயமா?

அதே காலத்தில் நடந்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.

ஆளுக்கு ஒரு நியாயம்

அல்ஃபோன்ஸ் கோட்டில்ஸ் என ஒரு நபர். நியூ யார்க்கில் பேக்கரி கடை வைத்திருந்தார். அவர் கடையில் உண்பண்டங்கள் வாங்கிய பலருக்கு டைஃபாய்டு தொற்று பரவியது. மேரிக்கு நடந்ததை போல் அவரும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அல்ஃபோன்ஸ் கோட்டில்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் 1924-ம் ஆண்டில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரால் ஆபத்து நேரலாம் என்கிற உண்மையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நோயை காரணம் காட்டி அவரை சிறையிலடைக்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்.

அல்ஃபோன்ஸ் கோட்டில்ஸ் மட்டுமென இல்லை. அதே காலகட்டத்தில் மேரியை போன்ற 400 பேர் அறிகுறியற்ற தன்மையில் டைஃபாய்டு நோயை பரப்புவதாக நியூ யார்க்கில் கண்டறியப்பட்டிருந்தனர். மேரியை போல் அவர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரிக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு சிறைவைக்கப்படவுமில்லை.

ஏன் அப்படி?

மேரிக்கு ஒரு நியாயம், அவரை போன்ற பிறருக்கு வேறொரு நியாயம் என்பது ஏன்?

சோப்பர் முதன்முறையாக பத்திரிகையில் எழுதிய ஒரு வரியில் தொடங்கின, எல்லா காரணங்களும். ‘மேரி ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர்’ என்கிற அந்த ஒற்றை வரி.

பகுதி 13க்கு செல்ல...