Published:Updated:

`கிராமத்திலும் இப்போ பேபி போட்டோகிராபி ஹிட்!' - பேபி போட்டோகிராபர் தேனி சாந்தினி

சாந்தினி
சாந்தினி

``என் பொண்ணுக்காக பேபி போட்டோகிராபி கத்துக்கிட்டேன். இப்போ அதுவே முழுநேர வேலையா மாறிடுச்சு... சுவாரஸ்யமா போகுது." - உற்சாகமாகச் சொல்கிறார் சாந்தினி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கிராமத்துல யார் பேபி போட்டோகிராபியை விரும்புவாங்க, பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க விடமாட்டாங்கனுதான் நான் நினைச்சேன். ஆனா, நான் நினைச்சதைவிட மக்கள்கிட்ட இதுக்கு அதிக வரவேற்பு கிடைச்சது. பிறந்து 12 நாள்களான குழந்தையிலிருந்து 2 வயதுக் குழந்தை வரை, தேனியில மட்டும் இந்த 8 மாதங்கள்ல 35 குழந்தைகளை போட்டோ எடுத்திருக்கேன்” என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் சாந்தினி.

Baby Photography
Baby Photography

``என் சொந்த ஊர் தேனி மாவட்டம் லெட்சுமிபுரம். அப்பா குணசேகரன் ராணுவத்தில் வேலைபார்த்தவர். அம்மா பிரேமா. நான் எம்.இ முடிச்சிட்டு, கோவையில தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியரா வேலை பார்த்தேன். கணவர் ரமேஷ், அபுதாபியில் வேலைபார்க்கிறார். திருமணத்துக்கு அப்புறம் நான் வேலையை விட்டுட்டேன். எனக்கு அக்‌ஷரானு ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்காங்க.

சின்ன வயசுலயிருந்தே கேமரா மேல எனக்கு ரொம்ப ஆசை, ஆர்வம். எங்க வீட்டு ஃபேமிலி போட்டோகிராபர் நான்தான். கல்யாணத்துக்கு அப்புறம், `நமக்குப் பிறக்கப்போற குழந்தையை அழகழகா, விதவிதமா போட்டோ எடுக்கணும்'னு கணவர்கிட்ட சொன்னேன். அவர் ஒரு புது கேமரா வாங்கிக் கொடுத்தார். சென்னையில் ஒரு பேபி போட்டோகிராபி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு மாதப் பயிற்சி முடித்தேன்.

Baby Photography
Baby Photography
`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி

அக்‌ஷரா பிறந்ததும், அவளை என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி நிறைய போட்டோக்கள் எடுத்தேன். அதைப் பார்த்து என் அக்கா வீட்ல ஆரம்பிச்சு சொந்தக்காரங்க வரை எல்லாரும் அவங்க வீட்டு குட்டீஸ்களை போட்டோ எடுக்கச் சொன்னாங்க. உற்சாகமா நானும் கிளம்பிடுவேன்…” என்ற சாந்தினியிடம், ``எப்போதிருந்து பேபி போட்டோகிராபியை தொழிலாக மாற்றிக்கொண்டீர்கள்?" எனக் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் எடுத்த பேபி போட்டோக்களை என்னோட இன்ஸ்டா, ஃபேஸ்புக்ல பகிர்ந்தேன். அதைப் பார்த்துட்டு சிலர் என்னை போட்டோகிராபிக்காக அழைச்சாங்க. கடந்த ஜனவரி மாசம் பெரியகுளத்தில், பிறந்து 12 நாள்களே ஆன குழந்தையை போட்டோ எடுக்கும் வாய்ப்புக் கிடைச்சது. அப்போதிருந்து இது தொழிலாக மாறிச்சு. ஆனாலும், நான் பெரும்பாலான இடங்கள்ல பணம் வாங்கலை; நான் எடுக்கும் போட்டோவைப் பார்த்து குழந்தையின் பெற்றோர் சந்தோஷப்படுறதே போதும்னு நினைப்பேன்” எனக் கூறி புன்னகைத்த சாந்தினி, தொடர்ந்து பேசினார்.

Baby Photography
Baby Photography

``தேனி மாவட்டத்தில், பெரியகுளம், வருசநாடு, போடி, பி.சி.பட்டி, பாளையம் ஆகிய இடங்கள்ல போட்டோ எடுத்திருக்கேன். குழந்தைகளை அலங்காரம் செய்து, சுற்றியுள்ள இடங்களையும் அழகா மாற்றணும். சிலர் வீட்ல போதிய இட வசதி இருக்காது. அவங்களை என் வீட்டுக்கு வரச்சொல்வேன். வீட்ல, குழந்தைகளை அலங்காரம் செய்றதுக்கான எல்லா பொருள்களும் வெச்சிருக்கேன். என் அம்மா எனக்கு உதவி பண்ணுவாங்க. வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற தோட்டத்துக்குக் குழந்தைகளை தூக்கிட்டுப் போயும் போட்டோ எடுப்பேன்.

ஒரு குழந்தையை போட்டோ எடுக்கப் போகும்போது, அந்தக் குழந்தையின் பெற்றோர் பற்றி முழுமையா விசாரிச்சுக்குவேன். உதாரணத்திற்கு, சமீபத்தில் ஒரு குழந்தையை போட்டோ எடுக்கப் போனேன். அப்போ, குழந்தைக்கு பைலட் டிரெஸ் வாங்கிட்டு போனேன். ஏன்னா, அந்த குழந்தையின் அப்பா ஒரு பைலட்! இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் காட்டணும், அவங்க பெற்றோரை சந்தோஷப்படுத்தணும்னு நிறைய மெனக்கெடுவேன்.

சாந்தினி
சாந்தினி
குழந்தைகளை ரசிக்க, கடவுள் எனக்குத் தந்த வாய்ப்பு! - பேபி போட்டோகிராபர் 
சிந்து மஞ்சரி

பேபி போட்டோகிராபியை பொறுத்தவரை, நிறைய பொறுமை வேணும். சில குழந்தைகள் அமைதியா இருக்கும்; சில குழந்தைகள் தூங்கும். இவங்களை நமக்கு என்ன மாதிரி போட்டோ வேணுமோ அப்படி எடுக்கலாம். ஆனா, குழந்தை அழ ஆரம்பிச்சா அவ்வளவுதான். அன்றைக்கு போட்டோ ஷூட்டை முடிக்க குறைந்தது 5 மணி நேரம் ஆகும். ரொம்ப ரொம்ப பொறுமையா இருக்கணும். 2 வயதிற்குள் பேபி போட்டோகிராபி எடுத்தா ரொம்ப அழகா இருக்கும். இப்போதைக்கு என் வீடுதான், என்னோட ஸ்டூடியோ. கிராமங்கள்ல இருந்து நிறைய அழைப்புகள் வர்றது எனக்கே ஆச்சர்யம்” என்றவர், மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

``ஒரு முறை தேனியில் ஒரு குழந்தையை போட்டோ எடுக்க அவங்க வீட்டுக்குப் போனப்போ, குழந்தையின் அம்மா, அப்பா ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. ஆனா, வீட்ல இருந்த பாட்டி என்னை போட்டோ எடுக்கவிடல. `பச்சமேனிய போட்டோ புடிக்கலாமா..?'னு குழந்தையின் அம்மா, அப்பாவையும் திட்டினாங்க. அவங்கள சமாதானம் செஞ்சு, ஒருவழியா போட்டோ எடுத்துட்டு வந்துட்டேன்.

பைலட் உடையில் குழந்தை
பைலட் உடையில் குழந்தை

அந்த போட்டோஸை எல்லாம் பார்த்த பாட்டி, `அம்புட்டு அழகா இருக்கு...'னு ரொம்ப நெகிழ்ச்சியோட சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. என் பொண்ணுக்காக பேபி போட்டோகிராபி கத்துக்கிட்டேன். இப்போ அதுவே முழுநேர வேலையா மாறிடுச்சு... சுவாரஸ்யமா போகுது."

உற்சாகமாகச் சொல்கிறார் சாந்தினி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு