Published:Updated:

“ஒழுகாத வீடு வேணும்!”

மங்கலதேவி கண்ணகி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மங்கலதேவி கண்ணகி கோயில்

கண்ணகியின் கோபம் தணித்தவர்கள் கண்ணீரில்...

“ஒழுகாத வீடு வேணும்!”

கண்ணகியின் கோபம் தணித்தவர்கள் கண்ணீரில்...

Published:Updated:
மங்கலதேவி கண்ணகி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மங்கலதேவி கண்ணகி கோயில்

`மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் மேற்கே நடந்து விண்ணோத்திப்பாறை என்ற இடத்தை அடையும்போது அங்கே குன்றக்குறவர்கள் குறவைக்கூத்து ஆடுகிறார்கள். அதைக் கண்டு சற்று கோபம் தணிகிறாள் கண்ணகி’ என்கிறது சிலப்பதிகாரம். அன்றைக்கு கண்ணகியின் கோபம் தணித்த குன்றக்குறவர்கள்தான் இன்றைய பளியன்குடி `பளியர்’ இன மக்கள். தொன்மையான வாழ்வியல் வரலாறுகொண்ட அவர்கள், தற்போது குடியிருக்க வீடுகூட இல்லாமல் சிரமப்படுவதாக தகவல் கிடைக்க... அவர்களைத் தேடிப் புறப்பட்டோம்.

தேனி மாவட்டம் கம்பம் நகரை அடுத்து உள்ள லோயர்கேம்ப் என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இதே பகுதியில் வேங்கைக்காடு மலையடிவாரத்தில் இருக்கிறது பளியன்குடி கிராமம். கிராமத்தின் முகப்பிலேயே, ‘கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்தால், தமிழ்நாடு வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றின்படி தண்டனைக்குரிய குற்றம்’ என்ற அறிவிப்புப் பலகை நம்மை அச்சுறுத்தியது. காரணம், பளியன்குடி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளாகும்.

பளியன்குடியைச் சேர்ந்த பேச்சியம்மாள், “முப்பது வருஷத் துக்கு முன்னாடி, பாறை இடுக்குலதான் நாங்க வாழ்ந்துட்டு இருந்தோம். ‘மலையில இருக்கக் கூடாது’னு கவர்மென்ட் சொன்னதால அங்கிருந்து வெளியே வர வேண்டியதாயிருச்சு. எங்கே போறது, என்ன பண்றதுன்னு தெரியாம நாங்க தவிச்சுக்கிட்டு இருந்தப்போ, நல்ல மனசுள்ள அதிகாரிங்க சிலர் எங்களை மேகமலை வண்ணாத்திப்பாறையில் இருக்கிற அரக்கு ஃபேக்டரியில வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. கொஞ்சநாள் அங்க வேலை பார்த்தோம். தொழிற்சாலை நஷ்டமாகி திடீர்னு மூடிட்டாங்க. அப்புறமாத்தான் இந்த இடத்துக்கு வந்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தம் 35 ஏக்கர் நிலம்... அதுல ஒரு ஏக்கர் நிலத்துல நாங்க குடியிருக்க வீடுகள் கட்டிக் கொடுத்தாங்க. மிச்சம் இருக்கிற 34 ஏக்கர் நிலத்துல குடும்பத்துக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய கொடுத்தாங்க. அதுல கொஞ்ச பேருதான் விவசாயம் செய்றோம். முப்பது வருஷத்துக்கு முன்னால கட்டின வீடு எல்லாம் இடிஞ்சு தரைமட்டமாயிருச்சு. இப்போ நீங்க பார்க்கிறது 2005-ல கட்டின வீடுங்க. அதுவும் ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு. எங்களால இங்க இருக்கவே முடியலை” என்றார் சோகத்துடன்.

பேச்சியம்மாள் - மகாராஜன் - மனோகரன்
பேச்சியம்மாள் - மகாராஜன் - மனோகரன்

தொடர்ந்து பேசிய மகாராஜன், “வீடு கட்டிக் கொடுக்க, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தயாராத்தான் இருக்கு. ஆனா, வனத்துறையினர்தான் விட மாட்டேங் கிறாங்க. இந்த இடம் மேகமலை வன உயிரின சரணாலயத்துக்குச் சொந்தமான இடம்கிறதால, இங்கே கட்டடம் கட்டக் கூடாதாம். கட்டடம் கட்டுறேன்னு யாராவது செங்கல், மணல் கொண்டுவந்தா அதையெல்லாம் பறிமுதல் பண்ணிடுறாங்க. முன்னால இருந்த அதிகாரி ஒருத்தர், ஒரு வீட்டுக்கு சிமென்ட் ஷீட் போட்டுக் கொடுத்தார். அதனால அவரை உடனே வேற ஊருக்கு மாத்திட்டாங்க. `நீங்க கட்டிக் கொடுங்கலைன் னாலும் பரவாயில்லை... நாங்களாவது கட்டிக்கிறோம்’னு சொன்னாலும் எந்தப் பதிலும் இல்லை. மழை பெய்ஞ்சா, ஊரு சனம் மொத்தமும் ஒழுகாத வீட்டைத் தேடி ஓட வேண்டியிருக்கு. ஊருக்குள்ள யானை புகுந்திருச்சுன்னா பள்ளிக்கூடக் கட்டடம் மேலே ஏறி நின்னுக்க வேண்டியிருக்கு. நாங்க மூதாதையர் மங்கலதேவி கண்ணகியை நேர்ல பார்த்தவங்க. ஆனா, எங்களைப் பார்க்க யாரும் இல்லை” என்றார் வேதனையுடன்.

பளியன்குடி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரனிடம் பேசினோம். “வீடுங்க மட்டுமல்ல... சாக்கடை வசதி, பெண்களுக்கான கழிவறை, குளியலறைன்னு எந்தவித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. கண்ணகி திருவிழா நடக்கும் சித்ரா பெளர்ணமி நாள்ல இந்த இடத்தைக் கடந்துதான் மக்கள் நடந்து போவாங்க. அப்ப மட்டும்தான் எல்லா அதிகாரிங்களும் இங்க வருவாங்க. அப்ப அவங்ககிட்ட எங்க நிலைமையை விளக்கி, `வீடு கட்டிக் கொடுங்க’னு முறையிடுவோம். நாங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு தலையை ஆட்டிக்கிட்டுப் போறவங்க, திரும்பவும் இந்தப் பக்கம் திரும்பிகூடப் பார்க்க மாட்டாங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் வனத்துறையோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்குது. இதுக்குப் பிறகும் வீடு கட்டிக்க அனுமதிக்கலைனா, மக்களைத் திரட்டி போராடுறதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்ல’’ என்றார் கோபமாக.

மங்கலதேவி கண்ணகி கோயில்
மங்கலதேவி கண்ணகி கோயில்

இதுதொடர்பாக மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராமிடம் பேசினோம். ‘‘பளியன்குடி கிராமம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. அதனால் முறையாக வீடுகள் கட்ட வேண்டும். அதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. நிதி கிடைத்ததும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என்றார்.

கண்ணகியின் கோபம் தணித்தவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.