Published:Updated:

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
ஐயனார்

சுற்றுவட்டாரத்து மாடுகள் மேய்ச்சலுக்கு வரும் பகுதி இது. அப்படி வந்த பசுக்களில் ஒன்று, இங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்துபோனதாம்.

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

சுற்றுவட்டாரத்து மாடுகள் மேய்ச்சலுக்கு வரும் பகுதி இது. அப்படி வந்த பசுக்களில் ஒன்று, இங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்துபோனதாம்.

Published:Updated:
ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
ஐயனார்

ஐயனார் சாமி என்றதுமே முறுக்கு மீசையும் மிரட்டும் விழிகளுமாக மறக் கருணையைக் காட்டும் விதம் வீரஅரிவாளைத் தாங்கிய திருவுருவமே நினைவுக்கு வரும். ஆனால் தேனி-அல்லிநகரம் அருகே, மிக விசேஷமாக - சுயம்பு மூர்த்தியாக மூலவர் ஐயனார் லிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். `அவரின் சந்நிதியில் எலுமிச்சைக் கனி பெற்று வந்தால், விரைவில் பிள்ளைக் கனி கிடைக்கும்’ என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தேனியின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது அல்லிநகரம். இந்தப் பகுதிக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஓடைக்கரையில் இயற்கை எழிலுற அமைந்திருக்கிறது ஐயனார் ஆலயம். ஓங்கி வளர்ந்த மரங்கள், மலைப்புறத்திலிருந்து வழிந்தோடி வரும் ஓடை நீரின் சலசலப்பு, பறவைகளின் சத்தம் என அந்த இடமே மிக ரம்மியமாக இருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் லிங்க வடிவில் சுயம்பு வாக அருள்கிறார் வீரப்ப ஐயனார். அவரின் எதிரில் கருப்பசாமி. இடதுபுறத்தில் தேவியருடன் அருளும் முருகனின் சந்நிதி. கோயில் வளாகத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஐயனாரையும் தரிசிக்கலாம்.

மூலவர் சந்நிதியில் அப்போதுதான் அபிஷேக ஆராதனைகள் முடிந்திருந்தன. பிரசாதம் பெற்றுக்கொண்ட பக்தர்கள் சிலர் ஆலயத்தை வலம் வந்துகொண்டிருக்க, மேடை ஒன்றின் படிக்கட்டில் அமர்ந்திருந்தார் பூசாரி ரமேஷ்குமார். அவரிடம் ஐயனார் இங்கே எழுந்தருளிய திருக்கதை குறித்துக் கேட்டோம்.

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

``சுற்றுவட்டாரத்து மாடுகள் மேய்ச்சலுக்கு வரும் பகுதி இது. அப்படி வந்த பசுக்களில் ஒன்று, இங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்துபோனதாம். இந்த நிலையில், அருகிலுள்ள வாழையாத்துப் பட்டி கிராமத்துக்குச் சிலர், அன்னஞ்சி கிராமம் மற்றும் இந்தக் கோயில் இருக்கும் பகுதி வழியாக வியாபாரத்துக்குப் பால் கொண்டு வருவவார்கள். அப்படி அவர்கள் வரும்போது, குறிப்பிட்ட இடத்தில் தினமும் ஏதோவொரு காரணத்தால் கீழே விழுந்து பால் முழுவதும் தரையில் கொட்டு வது வழக்கமாகி யிருக்கிறது.

இதனால் அல்லிநகரம், வாழையாத்துப் பட்டி, அன்னஞ்சி கிராமம் மக்கள் ஒன்றிணைந்து பேசினார்கள். பசுமாடு மறைந்து போனது, தினமும் பால் கொட்டுவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள், தினமும் பால் கொட்டும் இடத்தைத் தோண்டினர். அப்போது, மண்ணில் இருந்து பால் பொங்கிப்பெருகியதாம்!

எல்லோரும் திகைத்துநிற்க, கூட்டத்திலிருந்த சிறுமி ஒருத்திக்கு அருள்வந்தது. சுயம்பு வீரப்ப ஐயனாரே அந்தச் சிறுமி மூலம் அருள் வாக்கு தந்தார்:

``இங்கே சுயம்புலிங்கமாய் அருள்பாலிப்பது நானே. எமக்கு ஆலயம் அமைத்து பால் சமர்ப்பித்து வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் தருவேன். உங்கள் கால்நடைகளையும் பாதுகாப்பேன்’’ என்று அருள்பாலித்தார் ஐயனார். அப்போது உருவானதுதான் இந்தத் திருக்கோயில்’’ என்றவர், வேறொரு தகவலை யும் பகிர்ந்துகொண்டார்.

``இந்த வீரப்ப ஐயனார் ஆந்திர வனப் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருடன் சொக்கநாதர், சோலைமலை ஐயனார், குரு வீரப்பன் ஆகிய தெய்வங்களும் வனவாசமாக வந்துள்ளனர். அவர்களில் வீரப்ப ஐயனார் அல்லிநகரத்திலும், சொக்க நாதர் அகமலையிலும், சோலைமலை ஐயனார் தேனி பங்களா மேட்டிலும், குரு வீரப்பன் தேனி உழவர் சந்தை அருகேயும் கோயில் கொண்டார்களாம்.

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

நாங்கள் இங்கே பரம்பரை பூசாரிகளாக இருந்து வருகிறோம். சமயபுரத்திலிருந்து எங்கள் முன்னோர் பிழைப்பு தேடி அல்லி நகரம் வழியாக வந்த தருணத்தில்தான், இங்கே ஐயனார் சுயம்புவாக வெளிப் பட்டாராம். அப்போது வாழையாத்துப்பட்டி, அன்னஞ்சி, அல்லிநகரம்... இந்த மூன்று ஊர்களில், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பூசாரியாக இருப்பது என்பது குறித்து கூட்டம் போட்டு பேசியுள்ளனர்.

அங்கு வந்த தேவாரம் ஜமீன், `யார் கழுத்தில் யானை மாலையிடுகிறதோ அவர்களே பூசாரியாக இருக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார். அதன்படி ஒரு யானையிடம் மாலையைக் கொடுக்க, அந்த யானை பிழைப்பு தேடி வந்துகொண்டிருந்த எங்கள் முன்னோர் ஒருவரின் கழுத்தில் மாலையைப் போட்டுவிட்டது. பூஜைகள் செய்யும் பொறுப்பு எங்களுக்கு வந்தது. அதன் பொருட்டு வீடு, நிலம், உணவுக்கு வழிவகை செய்து, பட்டயமும் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று விவரித்தார் ரமேஷ்குமார்.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான வீரப்ப ஐயனார் கோயில் தேனி சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் பிரசித்தம். சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மட்டுமன்றி பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய விழாக் களும் கோலாகலமாக நடக்கும்.

ஐயனாருக்குத் தினமும் காலை 7 மணிக்கு நாட்டு மாட்டுப் பாலால் அபிஷேகம் நிகழும். தொடர்ந்து பன்னீர், மஞ்சள், அரிசி மாவு, இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம் என பலவகைத் திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அலங்கார ஆராதனைகள் 8 மணிக்குள் நிறைவேறும்.

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

பெளர்ணமி தினங்களில் இரவு 8 மணிக்கு சிறப்புப் பூஜை உண்டு. வீரப்ப ஐயனாருக்குச் சமர்ப்பிக்கப்படும் சர்க்கரைப் பொங்கல் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது.

பங்குனி - சித்திரை மாதங்களில் விழாக் கோலம் காண்கிறது வீரப்ப ஐயனார் கோயில். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பாற்குடங்கள் வருமாம். பங்குனி 15 -ம் நாள் கொடியேற்றத்துக்கு யானை ஊர்வலம் நடக்கும். பங்குனி மாதம் நிறைவு நாளன்று, குதிரை வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் வீரப்ப ஐயனார், தன் மூத்தவரான சோலை மலை ஐயானரை தரிசித்துவிட்டு வருவார்.

சித்திரை மாதத்தில் ஊருக்குள் இருக்கும் கோயில் வீட்டிலிருந்து ஏராளமான பக்தர்கள்... பால்காவடி, புஷ்பக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என விதவிதமாக காவடிகளைச் சுமந்து வந்து வழிபடுகிறார்கள்.

வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஐயனார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அல்லிநகரத்திலிருந்து பலரும் பாற்குடம் சுமந்து கொண்டு நடந்தே வந்து ஐயனாரை வழிபட்டுச் செல்கிறார்கள். ``அன்றையதினம் 20 முதல் 30 பாற்குடங்க ளாவது கோயிலுக்கு வரும். ஐயனாருக்குச் சிறப்பாக அபிஷேகம் நடக்கும்’’ என்கிறார் ரமேஷ்குமார்.

எலுமிச்சைக் கனியும் வில்வ இலையும்! - பிள்ளை வரம் அருளும் ஐயனார் பிரசாதம் !

காலநடைகளைக் காக்கும் தெய்வம் வீரப்ப ஐயனார். ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகள் நோய்நொடியின்றி பாதுகாப்பாக இருக்கவும், அவை கன்றுகள் குட்டிகள் ஈன்று செழிப்படையவும் அருள்பாலிக்கிறார் வீரப்ப ஐயனார்.

தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை தரிசித்து வேண்டி வழிபட்டு, அவரின் சந்நிதியில் வில்வ இலை, எலுமிச்சைப் பழம் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் வேலை வாய்ப்பு வேண்டியும் பிணிகள் தீரவும் இந்த ஐயனாரை மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள்.

வேண்டுதல் பலித்தால் தொடர்ந்து 3 அல்லது 5 ஆண்டுகள் விழாவையொட்டி காவடி எடுப்பதாகப் பிரார்த்தனை வைக் கிறார்கள். கோயிலில் அருளும் கருப்பருக்குக் கிடா, சேவல் பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் பலித்ததும் நேர்த்திக்கடனை பயபக்தியுடன் செலுத்துகிறார்கள்.

அதுமட்டுமா? அரசு ஊழியர் சங்கம், ஆட்டோ, லாரி சங்கத்தினர் மற்றும்பல தனியார் அமைப்புகள் சார்ந்தோர், இங்கே வந்து ஐயனாரை வழிபட்டுவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள மேடையில், தங்களின் சங்கம் - அமைப்பு சார்ந்த கூட்டங்களை நடத்துகிறார்கள். அவ்வாறு கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் மிகச் சிறப்பான தீர்வைத் தரும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism