Published:Updated:

நீதி கிடைக்காவிட்டால் கருணைக் கொலை!

ஆராதனா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆராதனா

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க தலைமைச் செயலகம் சென்றேன். ஆனால் வெளியே மனுவை வாங்கிக்கொண்டு என்னை அனுப்பிவிட்டனர்.

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற பெருமை தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினிக்கு உண்டு. ஆனால் அதே தமிழகத்தில்தான் போலீஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் திருநங்கையை அலைக்கழித்துச் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவலமும் நடந்தேறியுள்ளது.

தேனியைச் சேர்ந்த திருநங்கை ஆராதனா(28). தனது 13 வயதில் தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து சென்னை சென்றவர் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கிடைக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டு அரசுப் பணி போட்டித் தேர்வுக்குத் தயாரானார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2017-ல் நடத்திய இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்போது வரை பணியிடம் கிடைக்காமல் நான்கு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடியும் உரிய தீர்வு கிடைக்காததால் மனமுடைந்த ஆராதனா, தன்னுடைய குடியுரிமையை ரத்து செய்து, தன்னைக் கருணைக்கொலை செய்துவிடும்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஆராதனாவிடம் பேசினேன்.

நீதி கிடைக்காவிட்டால் கருணைக் கொலை!

“திருநங்கையாக மாறியது, அறுவைச்சிகிச்சை செய்து ஊர் திரும்பியது, சேலை அணிந்தது என்று ஒவ்வொரு சம்பவத்திலும் எல்லாத் திருநங்கைகளையும்போல் நானும் அவமானத்துக்கு உள்ளானேன். இந்தச் சமூகத்தில் எனக்கான அவமானங் களைத் துடைத்தெறிய வேண்டும் என்றால், படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதுவரை வேலைக்குச் சென்ற இடங்களில் திருநங்கை என்ற ஒரு காரணத்திற்காகப் பல கொடுமைகளுக்கு ஆளானதைப் பொறுத்துக்கொண்டேன்.

தொடர்ச்சியாக அரசுப் பணி போட்டித் தேர்வுக்குப் படித்து குரூப் 4, வனத்துறை போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டேன். இதையடுத்து 2017 டிசம்பர் இறுதியில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்குத் தேர்வெழுதுவதற்கான அழைப்பாணை வரவில்லை. விசாரித்தபோது ஒரு வாரம் வயது கூடுதலாக இருக்கிறது எனக் கூறி நிராகரித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து, ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், ஜாதிவாரியான கோட்டா மற்றும் விதவைகளுக்கான கோட்டா உள்ளிட்டவை இருக்கும்போது திருநங்கைகளுக்கு உரிய விதிகள் உருவாக்கப்படவில்லை. எனவே எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முறையிட்டேன். யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து நாட்டில் முதல் திருநங்கை எஸ்.ஐ. ஆன பிரித்திகா யாஷினியைச் சந்தித்து ஆலோசனை கேட்டேன். அவர் இதைச் சட்டரீதியாகவே அணுகவேண்டும் எனக் கூறி, அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் சஜிவ்குமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த வழக்கறிஞர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்வெழுத அனுமதி பெற்றேன்.

தேர்வெழுதும் அறைக்குச் செல்லும் வரை போராடிக் கொண்டிருந்ததால் திருப்திகரமாகத் தேர்வு எழுத முடியவில்லை. தேர்வுக்கு முந்தைய நாள் தேர்வுக்கான அழைப்பாணை பெறவே இரவு 10 மணி ஆகியது. இருப்பினும் 52 மதிப்பெண்கள் பெற்று உடற்தகுதித் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றேன். ஆனால் உடற்தகுதித் தேர்வுக்கான அழைப்பாணை எனக்குக் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிறுத்திவைத்திருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் வழக்கு தொடர்ந்தோம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டாம் நிலை காவலர் பணியில் எனக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கும்படி உத்தர விட்டனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டே இருக்கிறது. எங்கள் தரப்பு வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டோம். ஆனால் அரசுத் தரப்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் தீர்ப்பு தள்ளிப்போகிறது. இதற்கிடையே நான்கு முறை சீருடைப் பணியாளருக்கான தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்டன.

போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்கத் திருநங்கைகளுக்கு வயதுவரம்பு 26 ஆக இருந்தது. நான் தொடுத்த வழக்கினால், திருநங்கைகள் 29 வயது வரை போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இரண்டு திருநங்கைகள் போலீஸ் பணிக்குச் சேர்ந்துவிட்டனர். ஆனால் வழக்கு தொடுத்த எனக்குப் பணி வழங்காமல் காலம் தாழ்த்திவருகின்றனர்.

நீதி கிடைக்காவிட்டால் கருணைக் கொலை!

அப்போதைய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை போடி எம்.எல்.ஏ அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்து எனது பிரச்னையைக் கூறி அழுதேன். அவரோ ‘ஃபெயில் ஆகியிருந்தா எப்படி வேலைக்கு எடுப்பாங்க?’ என்று என்னை அவமானப்படுத்தி வெளியேற்றினார். வெளியே வந்த என்னிடம் ரூ.2,000 கொடுத்து அனுப்பினார்கள். திருநங்கைகள் பிச்சை எடுக்கக்கூடாது, சொந்தமாக சம்பாதித்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறேன். ஆனால் நான் வசூல் செய்ய வந்துவிட்டதாக நினைத்துப் பணத்தைக் கொடுத்தார்களா எனத் தெரியவில்லை.

இதையடுத்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முயன்றேன். முடியவில்லை. அதன்பிறகு முதல்வரின் தனிப்பிரிவுக்கு 10 முறை மனு அனுப்பிவிட்டேன். எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க தலைமைச் செயலகம் சென்றேன். ஆனால் வெளியே மனுவை வாங்கிக்கொண்டு என்னை அனுப்பிவிட்டனர். சிலர் அறிவாலயத்திற்குச் சென்றால் முதல்வரைச் சந்திக்கலாம் என்றனர். இதையடுத்து அறிவாலயம் சென்றேன். ஆனால் அங்கும் அவரைச் சந்திக்க வாய்ப்பளிக்கவில்லை. பிறகு உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கொடுத்தார்கள். அவரிடம் எனது பிரச்னைகளைக் கூறினேன். அவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு எனது மனுவை அனுப்புவதாகக் கூறினார். கடைசியில் உணவுக்கும் தங்குவதற்கும் வழியின்றி சென்னையில் ஒற்றை மனுஷியாய் அலைந்துதிரிந்ததுதான் மிச்சம்.

இவ்வளவு போராட்டத்துக்கு இடையே நம்பிக்கை இழக்காமல் 2019 கொரோனா காலகட்டத்தில் ஊர்க் காவல் படையில் சேர்ந்தேன். ஆனால் காவலர் பணியில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு.

தொடர்ச்சியாக அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்துவருவதால்தான், கருணையற்ற இந்தச் சமூகத்தில் வாழ விரும்பாத என்னை கருணைக்கொலை செய்துவிடும்படி தேனி கலெக்டரிடம் மனு அளித்தேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக முதல்வர் உரிய உத்தரவைப் பிறப்பித்து என் வாழ்கையில் விளக்கேற்ற வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்கிறார் கண்ணீருடன்.

அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீருக்கு அரசு நீதி வழங்குமா?