அந்த ஞானியிடம் வந்த செல்வந்தர் ஒருவர், ``எனக்கு நிம்மதியே இல்லை!’’ என்றார். அதற்கு, ``உங்களுக்கு என்ன குறை? ஏராளமான செல்வம் இருக்கிறது. எங்கு வேண்டு மானாலும் போகலாம்; வரலாம். எதை வேண்டுமானாலும் வாங்கலாமே!’’ என்றார் ஞானி. உடனே, ``இப்போது எனக்கு மகிழ்ச்சி தேவை. வாங்க முடியுமா?’’ என்று கேட்டார் செல்வந்தர்.
``அப்படின்னா, புறப்படுங்க! கால்பந்து விளையாட்டைப் பார்க்கப் போகலாம்’’ என்றார் ஞானி.
கிளம்பினர்... பெரிய திடலில், வீரர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த இருவரும் விளையாட்டைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
ஞானி சொன்னார், “அவர்கள் என்னமாக விளையாடு கிறார்கள்... பாருங்கள்!’’
உடனே செல்வந்தர், “அந்த பந்து எப்படியெல்லாம் உதை படுகிறது... அதைக் கவனித்தீர்களா?’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``அதை ஏன் கவனிக்கிறீர்கள்?’’
``எனது நிலைமையும் அப்படித்தான்! ஒருபக்கம் வருமான வரிக்காரர்கள்; இன்னொருபக்கம் தொழிலாளர்கள். இதுல... ‘சொத்தைப் பிரிச்சுக் கொடு’ன்னு பிள்ளைகள் செய்யும் தகராறு வேற! இப்படி, நாலாபக்கமும் உதைபட்டுக்கிட்டு இருக்கேன்!’’ என்று புலம்பினார் செல்வந்தர்.
‘`சரி... இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேறோர் இடத்துக்குப் போகலாம்!’’ என்ற ஞானி, செல்வந்தரை இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தனர். அந்த இசை, மனத்துக்கு இதமாக இருந்தது. கொஞ்ச நேரம் நிம்மதி யாகக் கழிந்தது. நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் திரும்பினர்.
ஞானி ஆரம்பித்தார், ``இப்போ சொல்லுங்க... பந்துக்கும் புல்லாங்குழலுக் கும் என்ன வித்தியாசம்?’’
‘`அது பந்து. இது புல்லாங்குழல்... அவ்வளவுதான்!’’
உடனே, ‘`இந்த இரண்டுக்கும் தேவைப்படறது காற்று. பந்து, தான் வாங்கிய காற்றை, தானே வெச்சிக்குது; வெளியே விடறதில்லை. அதனாலதான் அது உதைபடுது! புல்லாங்குழல் அப்படி இல்லே. ஒருபக்கத்தில் வாங்கும் காற்றை இன்னொரு பக்கமா வெளியே விட்டுடுது. அதனாலேயே அது, மனிதனின் உதடுகளுடன் உறவாடுது!’’ என்ற ஞானி, செல்வந்தரை அர்த்தத்துடன் பார்த்தார்.
செல்வந்தர் சிந்திக்க ஆரம்பித்தார். ‘தனது செல்வமும் பந்துக்குள் இருக்கும் காற்று மாதிரியே! அது, புல்லாங்குழலைத் தேடிப் போகவேண்டிய நேரம் வந்து விட்டது!’ என்பதைப் புரிந்துகொண்டார்.
நண்பர்களே, நம்மிடம் இருக்கும் பணத்தை நமக்காக செலவு செய்யும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. அதை, மற்றவர்களுக் காகச் செலவிடும்போது நிம்மதி கிடைக்கிறது!
(21.3.08 இதழிலிருந்து...)