Published:Updated:

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்கள்கூட தாக்குப்பிடிக்காமல் அணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது.

பிரீமியம் ஸ்டோரி

மேட்டூர் அணையின் வயது 87. பவானிசாகர் அணையின் வயது 67. வைகை அணையின் வயது 62. நூறாண்டுகளைக் கடந்தும் இந்த அணைகளின் ஆயுள் நீளும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் தடுப்பணை ஒன்று சுமார் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், அதன் தடுப்புச்சுவர் இடிந்துவிழுந்து, வெள்ளம் பெருக்கெடுத்தால்... அதன் பெயர் அலட்சியமா, ஊழலா, மக்கள் உயிரைப் பணயம்வைத்து நிகழ்த்தப்படும் கொடூரமா... என்னவென்று சொல்வது?

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருக்கும் எனதிரிமங்கலம் தளவானூர் அருகில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணையைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 2019-ம் ஆண்டு, ஜனவரி மாதம் நடந்தது. 25.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்ட அந்தத் தடுப்பணை, 2020-ம் ஆண்டு அக்டோபரில் முடிக்கப்பட்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறந்துவைக்கப்பட்டது. அந்தத் தடுப்பணைதான் கடந்த ஜனவரி 23-ம் தேதி திடீரென உடைந்து விழுந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்கள்கூட தாக்குப்பிடிக்காமல் அணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் தென்பெண்ணையாற்றில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, ‘‘தடுப்பணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. தடுப்பணையின் சுவர் மட்டுமே உடைந்திருக்கிறது. தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது’’ என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த விவகாரம் தொடர்பாக தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இது குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‘‘ஒரு மதகே அடித்துச் சென்றும், ‘தடுப்பணை உடையவில்லை... வெறும் மண்தான் அடித்துச் சென்றிருக்கிறது’ என்று பேட்டி கொடுக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். வெறும் மண்தான் அடித்துச் சென்றதென்றால், எதற்காக அரசிடம் 7 கோடி ரூபாய் கேட்கிறார் என்று தெரியவில்லை. தடுப்பணை உடைந்த விவகாரத்தில் அதைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீதுதான் முதல் தவறு இருக்கிறது. ஆனால், தடுப்பணையைக் கட்டிய ஒப்பந்ததாரர் தற்போது வேறொரு கட்டடத்தையும் கட்டிவருகிறாராம். மக்கள் உயிருடன் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்!’’ என்றார் கோபமாக.

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

பொதுப்பணித்துறையின் உயரதிகாரி ஒருவர் இது குறித்து நம்மிடம் பேசினார். ‘‘முழுத் தவறும் ஒப்பந்ததாரர்மீதுதான் இருக்கிறது. ஒப்பந்ததாரர் தரமில்லாமல் அணையைக் கட்டியதால்தான் தடுப்பணையின் சுவர் உடைந்து, மதகு அடித்துச் சென்றிருக்கிறது. ஆனால், எங்களைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள். பொதுவாக, தடுப்பணைச் சுவரின் கீழ் தண்ணீர் நுழைந்து மண் அரித்துதான், சுவர் கீழே இறங்கி உடையும் நிலை ஏற்படும். அதை மனதில்வைத்து அணையின் கீழ்ப்புறத்தில் தண்ணீர் உட்புகாதவாறு தடுப்புச்சுவர் கட்டப்பட வேண்டும். அவசரகதியில் கட்டப்பட்ட இந்த அணையில், அப்படியான நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. சிமென்ட்டின் அளவைக் குறைத்து, தரமில்லாத கலவையைப் பயன்படுத்தி மிகப்பெரிய தவற்றை செய்திருக்கிறார்கள்.

அரசு சார்பில் இப்படிக் கட்டப்படும் கட்டடங்கள், அணைகளுக்குக் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை ஒப்பந்த காலம் (Agreement Period) இருக்கும். அந்த ஒப்பந்த காலத்துக்குள் கட்டுமானங்களுக்குச் சேதம் ஏற்பட்டால், சேதமடைந்த பகுதியை முழுமையாக இடித்துவிட்டு, மீண்டும் புதிதாகக் கட்ட வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரர் களுடையதுதான். டெண்டர் விடும்போதே ஒப்பந்ததாரர் இரண்டு சதவிகித பாதுகாப்பு டெபாசிட் தொகையைக் கட்டியிருப்பார். அதேபோல ஒப்பந்ததாரருக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையில் ஐந்து சதவிகிதத் தொகையை, தரத்துக்காக அரசு பிடித்து வைத்திருக்கும்.

இப்படியான அசம்பாவிதங்கள் நிகழும்போது, அந்தத் தொகையை முடக்கிவைக்க வேண்டும். அந்த ஒப்பந்ததாரரையும், அவரின் நிறுவனத்தையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். உடைந்த பகுதியை அந்த ஒப்பந்ததாரர் மீண்டும் கட்ட ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பிவிட்டு, வேறொருவர் மூலம் அந்தப் பணியை முடிக்க வேண்டும். இவை எதையும் செய்யாமலே நான்கு அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்துவிட்டு, 7 கோடி ரூபாய் ஒதுக்கி, மீண்டும் ஊழலுக்கு வழிவகுக்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

இன்னும் சில நேர்மையான அதிகாரிகளோ, ‘‘இந்தத் தடுப்பணையைக் கட்டியது, நாமக்கல்லைச் சேர்ந்த ‘பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனம்தான். அதன் உரிமையாளர் தென்னரசு, முன்னாள் கல்வி அமைச்சர் ஒருவரின் பினாமி. நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தில், அந்த முன்னாள் அமைச்சரும், தென்னரசுவும் ஆறு ஆண்டுகளாக மிரட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த முன்னாள் அமைச்சர் பதவியிலிருந்த காலகட்டத்தில், அவர் துறை தொடர்பான பல்வேறு கட்டடங்களை தென்னரசுவின் நிறுவனம்தான் கட்டியிருக்கிறது.

தற்போது அந்த நிறுவனம் கள்ளக்குறிச்சியில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைப் பூங்கா, திண்டுக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 635 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள், கோவை, கரூர் மாவட்டங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை நந்தனத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20, 16 மற்றும் 15 மாடிகளைக்கொண்ட வர்த்தக மையம் கட்டுவது உள்ளிட்ட பணிகளைச் செய்துவருகிறது. ஓர் அணையைக் கட்டியதிலேயே இவ்வளவு அலட்சியம் காட்டிய அந்த நிறுவனத்திடம், பொது மக்கள் புழங்கும் கட்டடங்களையும் கட்ட அனுமதித்திருப்பதால், மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்போகிறது இந்த அரசு?” என்கிறார்கள் கொதிப்புடன்!

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

இது குறித்து விளக்கம் கேட்க பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் தென்னரசுவைத் தொடர்புகொண்டோம். ‘‘அணைக்கட்டை 200 சதவிகித தரத்துடன்தான் கட்டியிருக்கிறோம். அணையின் இரு கரைகளைத் தொடும் நீளம் 500 மீட்டர். ஆனால், 400 மீட்டர் அளவுக்குத் தடுப்புச் சுவர் கட்டுவதற்குத்தான் அரசு முதலில் அனுமதி தந்தது. மீதி 100 மீட்டர் அளவுக்குச் சுவர் கட்டுவதற்கான அனுமதியையும், அதற்கான தொகையையும் கேட்டபோது, பிறகு செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில்தான் நாங்கள் 400 மீட்டர் நீளத்துக்கு மட்டும் கட்டி முடித்து 2020, ஏப்ரலில் ஒப்படைத்துவிட்டோம். அரசின் அனுமதியும் தொகையும் வரும்வரை இருபுறமும் 50 மீட்டர் தூரத்துக்குத் தற்காலிகமாக, களிமண்ணால் தடுப்புச்சுவர் கட்டச் சொன்னார்கள். அதன்படி நாங்கள் செய்ததுடன், அணையில் 50 சதவிகிதம் மட்டுமே நீரைத் தேக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால், அதன் பிறகு மூன்று முறை முழுக் கொள்ளளவையும் நிரப்பிவிட்டார்கள். அதன் காரணமாகவே களிமண்ணில் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை’’ என்றார்.

தவறு யார் மீது என்பது பற்றி நேர்மையான விசாரணை நடக்க வேண்டும். தவிர, மேற்கண்ட விவகாரத்தில் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பது மட்டுமல்ல... மக்களின் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையும் அடங்கியிருக்கிறது. எனவே, தவறிழைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

யார் இந்த தென்னரசு?

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

பி.எஸ்.டி நிறுவனத்தின் உரிமையாளரான தென்னரசு, மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.கே நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். ஒருகட்டத்தில் அதே நிறுவனத்தில் சிறிய அளவு பங்குதாரராகவும் உயர்ந்தார். 2012-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, பி.எஸ்.டி மற்றும் தரண் என்கிற பெயரில் புதிய நிறுவனங்களைத் தொடங்கினார். அன்று முதல் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், தடுப்பணைகள், ஏரிகள் சீரமைப்பு என பல அரசுப் பணிகளைச் செய்துவருகிறார். “கடந்த 2017-ம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை கட்டும்போதுதான் மற்றொரு கான்ட்ராக்டரான சுப்பிரமணியன் என்பவர், இவர் பெயரை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 2018-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டை மேற்கொண்டு பல்வேறு கோப்புகளை அள்ளிச் சென்றது’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு