Published:Updated:

`திடீர் கார்டியாக் அரெஸ்ட், தடுப்பூசி காரணமல்ல!' - விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி, அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவேக் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். இந்த நிலையில், இன்று காலை எதிர்பாராதவிதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு விவேக்குக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி, அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தடுப்பூசியையும், இதையும் ஒப்பிட்டு நிறைய ஆதாரமற்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவின. இந்த நிலையில், விவேக் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. அதில் பேசிய சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜு சிவசாமி, ``இன்று காலை வீட்டிலேயே நடிகர் விவேக் மயங்கியிருக்கிறார். மனைவியும் மகளும் காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். வரும் வழியிலேயே அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இங்கு வரும்போது விவேக் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அந்தத் தருணத்தில், விவேக்கின் இதயத்தில் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு இருந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது.

விவேக்குக்கு மாரடைப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை. எக்மோ சிகிச்சை தொடர்கிறது. ரத்த அழுத்தமும் இயல்பு நிலையில் இருக்கிறது. இன்னும் 24 மணிநேர தொடர் சிகிச்சைக்குப் பிறகே அவரது உடல்நிலை முன்னேற்றம் குறித்துக் கூற முடியும். அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த பாதிப்புக்கும் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றார்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்
நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பிருக்கிறதா? மருத்துவர் விளக்கம்

இதைத் தொடர்ந்து பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், `` `தடுப்பூசப் போட்டுக்கொள்ள வருகிறேன். என்னைப் பார்த்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள்' என்று ஒரு வாரத்துக்கு முன்பே கூறினார். மிகவும் நல்ல எண்ணத்தில் நேற்று ஓமந்தூரார் மருத்துமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் போட்டுக்கொண்டது கோவாக்ஸின் தடுப்பூசி. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மிகுந்த வேதனையில் இருக்கிறேன். அவர் சிரித்த முகம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. விரைவில் அவர் குணமாகி வர வேண்டும்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள், கோவிட் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உட்பட சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த சந்தேகங்களை எழுப்ப வேண்டிய நேரம் இதுவல்ல. விவேக் குணமாக வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு