Published:Updated:

“காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வர்றேன்...”

கமலநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கமலநாதன்

- தெருக்கூத்து ஆடியபடியே உயிரைவிட்ட கலைஞன்!

“காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வர்றேன்...”

- தெருக்கூத்து ஆடியபடியே உயிரைவிட்ட கலைஞன்!

Published:Updated:
கமலநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கமலநாதன்

‘ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்; தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்...’ - ‘சங்கமம்’ திரைப்படத்தில் வரும் ‘மழைத்துளி மழைத்துளி... மண்ணில் சங்கமம்’ என்று தொடங்கும் பாடலின் வரிகள் இவை. தெருக்கூத்து என்கிற கலையே மக்களின் நினைவிலிருந்து அழிந்துவிட்டபோதும், இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப தங்கள் கண்ணீரை அரிதாரத்தில் கரைத்துக்கொண்டு சலங்கை கட்டி ஆடுகிறார்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். இப்படி, கலையை உயிராக நேசித்து ஆடிவந்த கலைஞர் ஒருவர், தெருக்கூத்து ஆடிக்கொண்டிருக்கும்போதே தனது உயிரையும் கொடுத்து கலையின் மீதான தனது அளப்பரிய நேசத்தை நிரூபித்திருக்கிறார்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகிலிருக்கும் மேல் அரசம்பட்டி கிராம மக்களுக்கு ‘பம்பைக்காரர்’ என்றால்தான் கமலநாதனைத் தெரிகிறது. அவர் பம்பையைக் கையிலெடுத்து அடிக்க ஆரம்பித்தால் கூடியிருக்கும் மொத்தக் கூட்டமும் தானாகச் சேர்ந்தாடும்! குழந்தைப் பருவத்திலிருந்தே தெருக்கூத்து மீதிருந்த ஆர்வத்தால், அந்தக் கலையைக் கற்றுத்தேர்ந்த கமலநாதன், தனது 52 வயது வரை ஆயிரக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார். ஓம்சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்து இளைய தலைமுறையினருக்கு தெருக்கூத்துக் கலையைக் கற்பித்துவந்தார்.

“காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வர்றேன்...”

குடும்ப வாழ்க்கையிலும் குறைவைக்கவில்லை இந்த ஆசான். பங்கஜம் என்ற மனைவி, காத்தவராயன், சகாதேவன் என இரண்டு மகன்கள், வடிவுக்கரசி, மணிமேகலை என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இளைய மகன் சகாதேவன், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர். பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில், பொருளாதாரத்தில் குறையேதும் இல்லை. அதேசமயம், தெருக்கூத்தால் கிடைக்கும் வருமானமும் மிகச் சொற்பமே. ஆனாலும் பணத்துக்காக அல்லாமல் தெருக்கூத்தின் மீது தனக்கு இருக்கும் அளவற்ற காதலால் பால்ய வயதிலிருந்து ஆடிய தனது கால்களுக்கு ஓய்வுகொடுக்க விரும்பவில்லை கமலநாதன். தெருக்கூத்து என்கிற தனது கனவை அன்றாடம் கால்களில் தூக்கிச் சுமந்தார். அப்படித்தான் ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் தெருக்கூத்து ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் யாருமே எதிர்பார்க்காத அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மேல் அரசம்பட்டு மடிகம் கிராம காளியம்மன் கோயில் திருவிழாவில் ‘அர்ஜுனன் தபசு’ தெருக்கூத்தில் அர்ஜுனன் வேடம் கட்டியிருந்தார் கமலநாதன். விடிய விடிய அரங்கேறிக் கொண்டிருந்தது தபசு... நள்ளிரவு தாண்டியும் அசராமல் கம்பீரக் குரலில் “அழகான தேரிலேறி அர்ச்சுனன் நான் வாறேன்... தேச தேச ராஜரெல்லாம் சபையில் கூடவே... மாரியுனை நம்பி மண்ணுக்கு நானும் வந்தேன்...” என்று பாடியபடி அர்ஜுனனாகவே மாறியிருந்தார். விடியற்காலை 5:30 மணியாகிவிட்டது. நாடகத்தின் இறுதிக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன... கூத்துக்கலை நடிப்பின் உச்சம் தொட்டவராக, “காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வாறேன்...” என உச்சஸ்தாயியில் பாடியவர் அப்படியே சாய்ந்து மண்ணில் விழுந்தார்.

“காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வர்றேன்...”

இதைப் பார்த்த சக கலைஞர்களும் மக்களும் பதறியடித்துகொண்டு கமலநாதனை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறினர். அவருடன் கூத்தை அரங்கேற்றிய கலைஞர்கள் ஒரு நிமிடம் அதை நம்ப இயலாமல் கதறி அழுதனர்!

கமலநாதன் இழப்பால் துவண்டுபோயிருந்தது அவரின் குடும்பம். கண்ணீர்மல்க நம்மிடம் பேசினார்கள் அவரின் மகள்கள்... ‘‘எங்க அப்பா வேஷம் கட்டிக்கிட்டு கூத்துக்குக் கிளம்புனாருன்னா, பாக்குறதுக்கு ராஜா மாதிரியே இருப்பாரு. தினமும் காலையில எழுந்தவுடனேயே, குளிச்சு நாமம் போட்டுக்குவாரு. கூத்துக்குப் போகாம வீட்டுல இருந்தாலும் ஜாலியா கூத்து வசனங்களைப் பேசி வீட்டையே கலகலப்பா வெச்சுருப்பாரு. இப்ப அவர் இல்லாம இது வீடு மாதிரியே இல்லை. அப்பா சாவுக்கு ஆயிரக்கணக்குல ஜனம் வந்திருந்தாங்க. நாங்களே அப்பாவைப் பத்தி கேள்விப்படாத விஷயங்களைப் பெருமையா அவங்க சொன்னப்ப எங்களுக்கே ஆச்சர்யமா போச்சு. அப்படிப்பட்ட அப்பாவை இழந்து தவிக்கிறோம். அன்னைய தினம்கூட கூத்து முடிஞ்சதும் அப்பா வீட்டுக்கு வருவார்னு அம்மா சுடுதண்ணி காயவெச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, பொணமா வீடு வருவார்னு நெனைச்சுக் கூட பார்க்கலை’’ என்றவர்கள், அதற்கு மேல் பேச முடியாமல் விம்மத் தொடங்கினார்கள்!

“காளியுன்னை நம்பி களத்துக்கு நானும் வர்றேன்...”

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் கமலநாதன். அந்தச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குடியாத்தம் சிவக்குமார், “கமலநாதன் அண்ணனோட மறைவு எங்களைப் போன்ற கலைஞர்களுக்குப் பெரிய இழப்பு. அவரை மாதிரி இன்னைக்கு தத்ரூபமாக நடிக்க ஆளுங்க இல்லை. அவர்கிட்ட கூத்து கத்துக்க வர்றவங்களுக்கு நடிப்பை சொல்லிக் கொடுக்குறதைப் பார்த்து பிரமிச்சுப் போயிருக்கோம். அவர் எங்க சங்கத்துல மட்டுமில்லாம வேலூர் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்திலும் உறுப்பினரா இருந்தார். தமிழக அரசோட கலை, பண்பாட்டுத்துறை மூலம் குடும்பப் பராமரிப்பு நிதி உதவியாக 25,000 ரூபாயும், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில் ஒரு லட்சம் ரூபாயும் அவரோட குடும்பத்துக்குத் தரணும்னு கேட்டிருக்கோம். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உதவி கேட்டிருக்கோம்’’ என்றார் கலங்கியபடி.

சிவக்குமார்
சிவக்குமார்

‘தாங்கள் நேசிக்கும் கலைக்காக உயிரையே கொடுப்போம்’ என்று பலரும் உணர்வுபூர்வமாகச் சொல்வார்கள்... அதை உண்மையாக்கியிருக்கிறார் கமலநாதன்!