Published:Updated:

`அரசாங்கம் இந்தளவுக்கு உதவும் என நினைக்கவில்லை!’ – கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி உருக்கம்

Representational image
Representational image

என் அத்தை மற்றும் மகனுக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதால் உடனடியாக மருத்துவ உதவியை நாடினேன்.

‘கொரோனா வைரஸ்’ - திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பெயரை மட்டும்தான் கேட்க முடிகிறது. சீனா முடங்கியது, இத்தாலியின் வீதிகள் காலியாக இருக்கின்றன என ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் கடந்த சில வாரங்களாகத் தகவல் வெளியாகி வந்தது. இப்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தன் கணவனின் வருகைக்காகக் காத்திருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த இல்லத்தரசி. பெங்களூரைச் சேர்ந்த பொறியாளருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது மார்ச் முதல் வாரத்தில் உறுதியானது. தற்போது அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கணவரின் வருகைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார் அந்தப் பெண்.

ஆங்கில ஊடகமான தி நியூஸ் மினிட்டுக்குப் பேட்டியளித்துள்ள அந்தப் பெண், “ என் கணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா அச்சம் காரணமாக அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் சில நாள்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்குக் காய்ச்சல் இருந்தது. நான் உடனடியாக மருத்துவ உதவி எண்ணை அழைத்தேன். என் அத்தை மற்றும் மகனுக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதால் உடனடியாக மருத்துவ உதவியை நாடினேன்.

Representation image
Representation image

எங்கள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு வருத்தமாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் எனக்கு போன் செய்து என்ன பிரச்னை எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

`இந்தத் தனிமையிலும் சுதந்திரம்; அவர்களுக்கு அம்மா கிடைத்த சந்தோஷம்!” - மேரிகோமின் டெல்லி நாள்கள்

கொரோனா வைரஸ் குறித்து எனக்கு தெரியும். தனிமையில்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். எனக்கு வந்த போன் அழைப்புகளை எடுப்பதை தவிர்த்தேன். எனக்கு தெரியும் இவர்கள் யாரும் எனக்கும் என் குடும்பத்தினருக்கு உதவி செய்யமாட்டார்கள் என்று. என் கணவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. இப்போது காய்ச்சல் இல்லை. இருந்தும் அவரை தொடர்ந்து தனிமையில் வைத்துள்ளனர். தூங்குவதிலே அதிக நேரம் செலவிடுகிறார். அவருக்குப் புத்தகம் படிப்பதற்கு மிகவும் பிடிக்கும். மருத்துவமனைக்குச் செல்லும்போது புத்தகத்துடன்தான் சென்றார். மருத்துவர்கள் புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அவருடைய செல்போனை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

கொரோனா
கொரோனா

எங்கள் குடும்பத்தினரும் தானாக முன்வந்து தனிமைப்படுத்திக்கொண்டனர். எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருமாறு உறவினர்களிடம் கூறுவோம். அவர்கள் அந்தப் பொருள்களை வாசலுக்கு வெளியே போட்டுவிட்டுச் செல்வார்கள். நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம். என்னுடைய மகள் 12-ம் வகுப்பு படிக்கிறாள். அவளை தேர்வுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் என் மகள் மனதளவில் உடைந்துவிட்டாள். தன் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை அவளுக்கு வந்துவிட்டது.

நான் உடனே கல்வித்துறையைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டேன். வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்கள். இந்த அரசானது நமக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் நமக்காகத்தான் இரவு பகலாக உழைக்கின்றனர். இந்தக் கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவியவர்களை நான் கடவுளாகத்தான் பார்க்கிறேன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

என் கணவர் பணிபுரிந்த நிறுவனத்தினர் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். என் கணவர் தினமும் வீட்டிலிருந்து செய்து அனுப்பும் உணவைத்தான் எடுத்துக்கொள்கிறார். குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்தனர். கொரோனா அறிகுறி எங்களுக்கு இல்லை எனத் தெரியவந்தது. மார்ச் 25-ம் தேதி வரை எங்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக என்னால் என் கணவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் என் கணவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து தொடர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர்.

என்னால் வெளியில் செல்லமுடியாது என்பதால் என் கணவர் பணியாற்றும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு என் நிலையைக் கூறினர். இதையடுத்து அவர்கள் எங்கள் வீட்டுக்கு தினமும் மூன்று வேளையும் கார் அனுப்புகிறார்கள். வீட்டில் சமைத்த உணவை காரில் வைத்து அனுப்புவோம். அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார்கள். அரசாங்கம் எனக்கு இந்த அளவுக்கு உதவி செய்யும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது என் கணவருக்கு காய்ச்சல் இல்லை. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்றார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு