Published:Updated:

``நடந்தது என்கவுன்டரே அல்ல!"- கொதிக்கும் மாவோயிஸ்ட் சேலம் மணிவாசகத்தின் தங்கை

``ரெண்டு நாள்கள் கழித்து நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே பார்த்தோம். உடலில் கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்தன. இரண்டு கண்களையும் நோண்டி எடுத்திருக்கிறார்கள். காலில் சிராய்ப்புகள் இருந்தன.''

மணிவாசகம் வீடு
மணிவாசகம் வீடு

``கேரளக் காவல்துறையினர் எங்க அண்ணனை என்கவுன்டர் செய்யவில்லை. பிடித்து சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்'' என்று கதறுகிறார் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் கடைசி தங்கை லட்சுமி.

லட்சுமி
லட்சுமி

கேரளாவிற்குச் சென்று தன் அண்ணன் மணிவாசகத்தின் உடலைப் பார்த்துவிட்டு தன் சொந்த ஊரான சேலம் ராமமூர்த்தி நகருக்கு வந்திருக்கும் லட்சுமி, ``மாவோயிஸ்ட்டு என்று என் அண்ணன் மணிவாசகத்தை காவல்துறையினர் தேடியதால் அவர் 11 வருடமாகத் தலைமறைவாக இருந்தார். அக்கா சந்திராவையும் அண்ணி கலாவையும் காவல்துறையினர் கைது செய்து 3 ஆண்டுகளாகத் திருச்சி மத்திய சிறையில் அடைத்துவைத்துள்ளனர். சந்திராவின் கணவர் சுந்தரமூர்த்தி 13 வருடமாக சென்னை புழல் சிறையில் இருக்கிறார். குடும்பமே இப்படிப் பிரிந்து கிடக்கும் கவலை என்னை உளவியலாக பாதிக்கச் செய்தது.

கடந்த ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது கடந்த 29-ம் தேதி எங்க அண்ணன் மணிவாசகத்தை கேரளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. அதையடுத்து நான், எங்க வீட்டுக்காரர், என் அண்ணன் பையன் அன்பரசன் ஆகியோர் திருச்சூர் சென்று அங்கிருந்து அண்ணன் உடல் வைக்கப்பட்டிருந்த அட்டப்பாடி மருத்துவமனைக்குச் சென்றோம். அட்டப்பாடி அரசு மருத்துவமனையின் பிண அறையில் என் அண்ணன் மணிவாசகத்தின் உடல் இருந்தது. ஆனால், எங்களைப் பார்க்க கேரளக் காவல்துறை அனுமதிக்கவில்லை. ரெண்டு நாள்கள் கழித்து நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே பார்த்தோம்.

உடலில் கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்தன. இரண்டு கண்களையும் நோண்டி எடுத்திருக்கிறார்கள். காலில் சிராய்ப்புகள் இருந்தன. கேரளக் காவல்துறையினர் எங்க அண்ணனை என்கவுன்டர் செய்யவில்லை. பிடித்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்து தரையில் இழுத்து வந்திருக்கிறார்கள். அண்ணனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் அக்கா சந்திராவும் அண்ணி கலாவும் கலந்துகொள்ள பரேல் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம்.

இந்நிலையில் எங்க ஊரில் உள்ள சிலர் எங்க அண்ணனின் உடலை ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்தால் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் காவல்துறையினரும் வருவார்கள். இதனால் ஊரின் அமைதி கெட்டு விடுவதாகத் தெரிவிக்கிறார்கள். 'சொந்த ஊரில் அடக்கம் செய்யக்கூடாது என்றால் வேறு எந்த ஊரில் என் அண்ணனின் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பார்கள்' என்று கூறி விட்டு இதை இயக்கத் தோழர்களிடம் தெரிவித்தோம்.

மணிவாசகம்
மணிவாசகம்

அவர்கள் இறுதிச் சடங்கில் மட்டும் கலந்துகொண்டு மீண்டும் இந்த ஊர்ப்பக்கம் வர மாட்டோம் என்று கையொப்பம் போட்டுத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். இதை ஊர்க்காரர்களிடம் தெரிவித்திருக்கிறோம். இருந்தாலும் என் அக்கா சந்திராவிடமும் கலாவிடமும் கேட்ட பிறகே எங்கு அடக்கம் செய்வது என்று தெரியவரும். இதற்கிடையில் இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் என் அண்ணனின் உடலை எங்களிடம் கொடுப்பது சம்பந்தமான தீர்ப்பு வர இருக்கிறது' என்று தெரிவித்தார்.