Published:Updated:

2K kids: 400 வருட இறைக் கோயில்... 40 வருடத்தில் பேய்க் கோயிலா..?!

ச.தினேஷ்

பிரீமியம் ஸ்டோரி

வீடோ, பொருளோ, மொழியோ, மனுஷங்களோ... பயன்பாடு குறைஞ்சுபோனா அது பயனற்றதாகிப் போயிடுது. சொல்லப்போனா, கடவுளுக்கும்கூட இங்க இதுதான் நிலைமை. அப்படி, நம்ம கண்ணு முன்னால சிதிலமடைஞ்சு கிடக்குற ஒரு கோயில் பத்தி இந்தக் கட்டுரையில பார்க்கலாம் வாங்க.

2K kids: 400 வருட இறைக் கோயில்... 40 வருடத்தில் பேய்க் கோயிலா..?!

விழுப்புரத்துல இருந்து திருவண்ணாமலைக்கு ரயில்ல பயணம் செய்யும்போது, திருக்கோவிலூர் பக்கத்துல அந்தச் சின்ன கோயிலைப் பார்க்கலாம்.

காட்டுக்குள்ள இப்போ பாழடைஞ்ச கிடக்குற அந்தக் கோயில், கோபுர கலசம் (விமானம்) இல்லாம கட்டப்பட்ட தமிழ்முறைக் கோயில். ஐம்பூத விளக்கு வழிபாடு, நவகிரக விளக்கு வழிபாடுனு இறை வழிபாடு நடந்த தடயங்கள் இருக்கு. ஆனா, கருவறையில கடவுள் இல்ல!

பக்கத்து ஊர்ல அந்தக் கோயில் பத்தி விசாரிச்சபோது...

சிறுவர்கள்: ‘‘அய்யோ, அது பேய்க்கோயில், திருட்டுக் கோயில். அங்க போனா பேய் பிடிக்கும். எங்க பானு அத்தைக்கு அங்க போய்தான் பேய் புடிச்சிக்கிச்சு!”

இளைஞர்கள்: ‘‘தல, அது எங்க கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து இருக்கு. நாங்கெல்லாம் அந்தக் கோயிலுக்குப் போனதேயில்ல. ஆனா எங்க அம்மா, 30 வருஷம் முன்னாடி கடைசியா அந்தக் கோயில்ல திருவிழா நடந்ததா சொல்லியிருக்காங்க.’’

2K kids: 400 வருட இறைக் கோயில்... 40 வருடத்தில் பேய்க் கோயிலா..?!

விவசாயி கண்ணன்: ‘‘அந்தக் கோயிலு என் தாத்தனுக்குத் தாத்தன் காலத்துல இருந்து இருக்குப்பா. ‘அந்தக் கோயிலுக்குப் போகக் கூடாது’னு சொல்லித்தான் என்னைய எங்க ஆச்சி வளர்த்தா. களத்துமேட்டுக்குப் போற வழியில ரெண்டாவது சந்துல திரும்பினா, சின்னத் தாயினு ஒரு கிழவி இருக்கும். இந்தக் கோயில்ல கடைசியா திருவிழா நடந்ததை அது பார்த்ததா சொல்லி யிருக்கு... கேட்டுப்பாரு.’’

சின்னத்தாயி பாட்டி: ‘‘எனக்கு அப்ப 40 வயசு இருக்கும். கோயிலுக்குப் பக்கத்து வயல்ல நடவு நடப் போனப்போ, அந்தக் கோயில்ல கூட்டமா இருந் துச்சு. திருவிழா நடத்துனாங்க. அன்னிக்கு அந்தக் கோயிலுக்குப் போனது... அதுக்கப்புறம் போகல.

400 வருஷம் முன்னாடி, வீரனார், ஐயனார் மாதிரி தானதையன்னு ஒரு காவல்சாமி இருந்துச்சு. கிட்டத்தட்ட 400 வருஷமா அந்த சாமியை அங்க கும்பிட்டு வந்திருக்காங்க. ஆரம்பத்துல வெறும் தூண் மட்டுமே வெச்சு சாமி கும்பிட்டவங்க, காலப்போக்குல அதைக் கோயிலா கட்டி இருக்காங்க. 200 வருஷமா அந்தக் கோயிலு அங்க இருக்குப்பா. எங்க தாத்தா சுப்பன் அங்க சாமி கும்பிட்டிருக்காரு. அவரு சொல்லித்தான் கோயிலு கதை எனக்குத் தெரியும். நாங்க யாரும் அங்க சாமி கும்பிட்டதில்ல.

அன்னிக்குத் திருவிழாவுக்குப் போனப்போ, தானதையன்ங்கிற மூதாதையரு, பக்கத்துப் பாறையில குடிச போட்டு வாழ்ந்தவரு, அதனால அந்த எடத்துல கோயில கட்டி அவரை வழி வழியா சாமி கும்பிடுறதா அந்தக் கூட்டத்துல ஒருத் தரு சொன்னாரு. அது மெய்யோ பொய்யோ தெரியாது.

கோயில் பக்கத்துல சுடுகாடு இருக்குறதால, அந்தப் பக்கம் போறவுகளுக்கு காத்து, கருப்பு அண்டும்னு சொல்லுவாங்க. அதனால, காட்டுக்குள்ள இருக்குற அந்தக் கோயிலுக்கு சுத்தியிருக்குற ஊர்க்காரவுக யாரும் போறதில்ல. எங்கப்பன் காலத்துல, ஊருக்குள்ள திருட வர்றவங்களுக்கு, ஆளு நடமாட்டமில்லாத அந்தக் கோயில் வசதியா போச்சு. அங்கே அவங்கெல்லாம் தங்க ஆரம்பிக்க, காலப்போக்குல அது திருட்டுக் கோயில், திருடன் கோயில்னு ஆகிப்போச்சு. அப்படி வந்த கூட்டம்தான் அந்தக் கோயிலோட சிலைய திருடிட்டுப் போயிட்டாங்கனு, அந்தத் திருவிழா கூட்டத்துல பேசிக்கிட்டாங்க. அந்த சாமி வீரனாரு மாதிரி கையில அரிவாளப் புடிச்சு, குட்டையா, தலப்பா கட்டிக்கிட்டு இருக்குமாம்.

அன்னிக்கு, கெடா வெட்டித் திருவிழாவ அந்த சனங்க நடத்தினப்போ, சாமி காணாம போனது கெட்ட சகுனம்னு பேசிக்கிட்டாங்க. கூட்டத்துல ஒரு மகராசி, அன்னிக்கு நடவு நடப் போன எங்க மூணு பேருக்கும் கறிச்சோறு போட்டு, வீட்டுக்கும் கொடுத்துனுப்புனாங்க.

அதுக்கப்புறம், எப்போவாச்சும் அந்தக் கோயில் பக்கம் போகும்போது, இளசுங்க ஜோடியா அந்தக் கோயிலுக்கு வந்து போறதைப் பார்த்திருக்கேன். அதேபோல ஊதுபத்தி, கற்பூரம், விளக்குனு சாமி கும்பிட்ட தடயம் இருக்கும். அந்தக் கோயில் குல தெய்வமா இருக்குறவங்க யாரும் வந்து கும்பிட்டு போவாங்களா இருக்கும்.

2K kids: 400 வருட இறைக் கோயில்... 40 வருடத்தில் பேய்க் கோயிலா..?!

எங்க தாத்தா காலத்துல இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினப்போ, வருஷா வருஷம் சனம் ஊருல இருந்து வந்து கெடா வெட்டி, பொங்கல் வெச்சு சாமி கும்பிட்டுப் போவாங்களாம். அந்தக் கோயில் சிலை காணா மப்போய் கிட்டத்தட்ட அம்பது வருஷங்கள் இருக்கும். கோயில் கலசத்தையும் களவாண்டுட்டாங்க. அதுலயிருந்து சனம் திருவிழாவுக்கு வர்றது நின்னுபோச்சு. சாமி இல்லாத கோயில பேய்க்கோயில்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க எங்க மக்க. நான் கண்ண மூடுறதுக்குள்ள அந்தக் கோயில்ல சாமிய வெச்சு, கும்பாபிஷேகம் நடத்தி, திருவிழா மேளச் சத்தத்தைக் கேக்கணும்யா!”

ஊர் மக்கள்: ‘‘அந்தக் கோயில இந்து அறநிலையத்துறை கையில எடுத்து, சாமி சிலைய வெச்சு மராமத்துப் பண்ணிவிட்டுட்டா... நாங்கெல்லாம் பயமில்லாம சாமி கும்பிடப் போவோம்.’’

காட்டுக்குள்ள காத்திருக்குது காவக்கார சாமி... மக்களுக்காக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு